ஹல் சிரோவிட்ஸ்
1940இல் அமெரிக்காவில் பிறந்தார். இவரது கவிதைகள் உலகம் முழுக்க 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இக்கவிதைகள் இவரது “Mother Said” நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. இவரின் பெரும்பாலான கவிதைகள் சிதைக்கும் தன்மைகளையும் சிதைக்கும் மனிதர்களையும் பகடியாக்குவதாகவே உள்ளன. குடும்பம் தன்மீது செலுத்திய ஒழுங்கின் வன்முறையினால் தனது பால்யம் சிதைந்ததையும் அதனால் பிற்காலத்தில் தொடர்ந்து அவர் மனசிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்ததையும் அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த மனநிலையின் தொடர்ச்சியாகவே அவரது புகழ்பெற்ற நூல்களான, “Mother Said”, “Father Said” “Therapist Said”ஆகியவற்றை வைத்துப் புரிந்துகொள்ளலாம். சிரோவிட்ஸ் தனது கவிதைகளை ஒரு ஸ்டேண்ட் அப் காமெடி போல மாற்றுகிறார்.
பூட்டப்பட்ட கதவு
வீடு தீப்பிடிக்குமெனக் காத்திருந்தேன்
அப்போதுதான்
நான் எனது பெற்றோரை எழுப்பிவிட்டு
அவர்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்.
பிறகு,
அவர்கள் என்னை
இன்னுமதிகமாக நேசிப்பார்கள்.
ஆனால் வீடு எரியவில்லை
படுக்கையறையின் பூட்டிய கதவுகளுக்குப் பின்
என் பெற்றோர்
என்ன செய்கிறார்களென்று எனக்குத் தெரியாது
ஆனால் அவர்கள்
நிச்சயம் என்னைப் பற்றி
யோசித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்
என்று மட்டும் எனக்குத் தெரியும்
சோர்வற்ற போதும்
என்னைச் சீக்கிரமாகவே படுக்க வைத்தவர்கள்,
தூக்கம் போதவில்லை,
நாங்கள் நிறைய நேரம் தூங்கவேண்டுமென்று சொன்னார்கள்
ஆனால்,
மறுநாள் காலையில் பார்த்தால்
அவர்கள் ஓய்வெடுத்த மாதிரியே தெரியவில்லை.
நேரடியாக எனக்கு வடக்கு
துருக்கிய உணவகத்தில்
நாம் கத்தரிக்காய் மசாலாவைச் சாப்பிட்ட பிறகு
எனது குறி,
காம்பஸ் ஊசியெனச் செயல்படத் தொடங்கியது.
அது உன்னை நோக்கியே சுட்டியது.
ஆனால் நீயோ
வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாய்.
எதுவொன்றும்
உன்னைக் கண்டுபிடிப்பதில்
உனக்கு ஆர்வமில்லை.
கத்தரிக்காய் மசாலா – stuffed eggplant
எங்கு காணினும் கண்களடா
அம்மா சொன்னாள்,
இப்போது நீ வளர்ந்துவிட்டாய்,
உன் அப்பாவைப்போலவே
நீயும் ஜட்டி அணிந்துகொண்டுதான்
கடற்கரைக்குச் செல்லவேண்டும்.
அங்கு குளியலுடை அணிந்தபடி
சாய்ந்துகிடக்கும் ஒரு பெண்ணை
பார்த்தவுடன், உனக்கு விரைக்கும்.
ஓடி கடலுக்குள் இறங்கிவிட்டாலும்
அதை மறைக்கவே முடியாது
சில மனிதர்கள்
தண்ணீருக்கு அடியிலும் அதை பார்ப்பார்கள்.
ஜட்டி – jockstrap
நினைவுப் பரிசுகள்
என்னிடம் இரண்டு பிரெஞ்ச் ஆணுறைகள் இருந்தன.
ஆனால் நீயோ
வெறுமே என்னைப் பற்றிக்கொண்டிருந்தால் போதும் என்றாய்
அப்போது நாம் கலவிகொண்டிருந்தால் எரிச்சல்தான் அடைந்திருப்பேன்
நானதைப் புரியவைப்பதற்கு முன்பே தூங்கிவிட்டாய்
இல்லையெனில்…
நாம் காதலித்திருந்தால் அந்த ஆணுறைகளைத்
தூக்கி எறிய வேண்டியிருந்திருக்கும்
ஆனால் இப்போதோ
உன்னை நினைவில் வைத்துக்கொள்ள
என்னிடம் அவை இருக்கின்றன.
வார்த்தையின் சக்தி
அம்மா சொன்னாள்,
நான் நினைத்திருந்தால் இன்னொரு குழந்தைக்கு முயற்சித்திருக்கலாம்,
ஆனால், அதன்பிறகு
எனது அன்பை இரண்டாகப் பங்கிடவேண்டியதிருந்திருக்கும்
ஆகவே நானதை உனக்காகத் தியாகம் செய்தேன்.
எனினும் சிலநேரம் நினைப்பதுண்டு
உனது தம்பி உருவாக்கும் போட்டி
உனக்குப் பயன்பட்டிருக்குமோ என்று
உறவினர் எல்லோரும்
அவனைக் கைகளில் ஏந்திக்கொண்டும்
தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டும் இருப்பது
உன்னை இயங்கத் தூண்டியிருக்கக்கூடும்
இப்போது பார்
அகராதியில் ஒரு வார்த்தையைப் பார்ப்பதற்குக் கூட
அவ்வளவு சோம்பேறித்தனம்.
உனது சொற்கிடங்கு மிகவும் குறுகியது.
ஒருநாள் உனது மனைவி கேட்கப்போகிறாள்,
அவளை உண்மையிலேயே நீ காதலிக்கிறாயா என்று.
அவள் கண்களைப் பார்த்துச் சொல்லவேண்டும்,
நீ எப்போதுமே அவளை, பூஜிக்கிறாய் என.
ஆனால் உனக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாததால்
அதைப் பயன்படுத்த முடியாது.
உன் மனைவி பிறந்தநாள் பரிசாக
வெப்ஸ்டரின் சுருக்கப்படாத அகராதியை
வாங்கித் தந்தாலும் கூட
உனக்கு அந்தக் குறிப்பு புரியாமல் போகலாம்.
ஒரே நபருக்கு இரண்டு அடக்கம்
அம்மா சொன்னாள்,
யூதச் சட்டத்தின்படி,
உன் கை வெட்டப்பட்டால்
சும்மா தூக்கி எறிந்துவிட முடியாது
அதைப் புதைவிடத்திற்குக் கொண்டுபோய்ப் புதைக்கவேண்டும்.
ஏனெனில் அது உன்னில் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.
நியூயார்க்கில்
கைக்கென ஒரு கல்லறையும்
நியூ ஜெர்ஸியில்
உடலுக்கென ஒரு கல்லறையும் வைத்துக்கொள்ள முடியாது
உன்னுடைய எல்லாப் பாகங்களையும்
அதே இடத்தில்தான் புதைக்கவேண்டும்.
ஆகவே,
நியூயார்க்கில் இருந்தபோது கையை இழந்துவிட்டு
கலிபோர்னியா சென்று இறந்துவிட்டால்
உறவினர்கள்
உன்னை அங்கேயே அடக்கம் செய்ய முடியாது.
திரும்ப நீ நியூயார்க்கிற்குப் பறந்து செல்ல வேண்டியிருக்கும்
மீண்டும் நீ உன் கையுடன் சேர.
இதற்கு அர்த்தம்
நீ இறந்துவிட்டாய் என்பதற்காக
விமான நிறுவனம் உன்னை
ஓசியில் பறக்க அனுமதிக்கும் என்பதல்ல.
நொறுக்கல்
அம்மா சொன்னாள்,
உன் அறைக்குள்ளே எதையும் தின்னாதே
பூச்சிகள் வந்துவிடும்
அவை உன்போன்றோரை நம்பியே இருக்கின்றன
இல்லையெனில் பட்டினி கிடக்கின்றன
நீ யாரை மகிழ்விக்க விரும்புகிறாய்
உன் அம்மாவையா அல்லது கொத்து எறும்புகளையா?
அவை உனக்காக என்ன செய்யும்?
ஒன்றுமேயில்லை.
அவற்றுக்கு உணர்வுகளே கிடையாது.
அவை உனது மிட்டாயைத் தின்றுவிடும்.
என்னைப் பார்த்துக்கொண்டதை விடவும்
அவற்றை இன்னும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறாய்.
உணவளித்துக்கொண்டே இருக்கிறாய்.
ஆனால்
ஒருபோதும் எனக்கு நீ
ஒன்றுமே செய்வதில்லை.
Art : Navita Gujral








Leave a Reply