மனதின் அடியாழத்தில் இருக்கும் நினைவுகளை மென்மையாக மீட்டெழச் செய்யும் இடமோ பொருளோ நம் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த பள்ளியிலேயே பணியில் சேர்ந்திருந்தேன். எண்ணற்ற நினைவுகள் படிப்படியாக மேலெழுந்து வரத் தொடங்கின.
மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியே அழைத்து வந்தேன். பள்ளியின் நுழைவுவாயில் சுவரோரத்தில் ஒரு பன்னீர்ப் பூமரம் இருக்கிறது. எப்போதும் தம் வெண்மையான காம்பு நீண்ட மலர்களை உதிர்த்தபடி இருக்கும் அம்மரத்தடியில் எல்லோரையும் அமர வைத்தேன்.
“மிஸ் அதான் க்ளாஸ்ரூம் இருக்குல்ல. ஏன் எப்பப் பார்த்தாலும் இங்கேயே கூட்டிட்டு வந்து பாடம் நடத்துறிங்க” என்றான் முகிலன்.
சரிதான். குழந்தைகள் எப்போதும் சரியாகத்தான் சிந்திக்கின்றனர். அவர்களுக்குச் சரி என்று தோன்றும் எதையும் அவர்கள் கேட்டுவிடத் தயங்குவதில்லை. முகிலன் என் மாணவன். அவ்வப்போது மனதில் தோன்றும் சந்தேகங்களையும் கேள்விகளையும் உடனே கேட்டுவிடுவது அவன் சுபாவம்.
இம்மரத்திற்கும் எனக்கும் இருபது ஆண்டுகள் பழமையான கதையொன்று உண்டு, அதான் இங்கே அமரச் சொல்கிறேன் என்றேன். கதை, இங்கு எல்லாமும் கதைதான். இன்று என்பது கூட நாளைய கதை தானே. பாடமும் அப்படியே. ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளைப் படித்து உணர்ந்து தெரிந்து கொள்வது கல்வியாகிறது.
என் சிறுவயதில் என் பாட்டியிடம் கேட்ட கதைகள் அளவிற்கு என் ஆசிரியர்கள் நடத்திய பாடம் எதுவும் என் நினைவில் இப்போது இல்லை. ஆசிரியர் பாடத்தில் இருந்து என் கவனம் சிதறி இருக்கலாம். ஆனால் பாட்டியின் கதையில் இருந்து எப்போதும் என் சிந்தனை விலகிச் சென்றதே இல்லை. இப்போதும் அக்கதைகள் என் நினைவில் தங்கியிருக்கும் நிகழ்வே அதற்கான சாட்சி. அதனால் எல்லாப் பாடத்திற்கு முன்பும் அல்லது பாடத்தின் இடையிலோ இறுதியாகவோ நிச்சயமாக ஒரு கதையைக் கூறிவிட வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன்.
மிஸ் கதையா? சொல்லுங்க மிஸ் என்று ஆர்வமானார்கள் மாணவர்கள்.
“ம். நான் அப்போ ஐந்தாம் வகுப்பு படிச்சேனு நினைக்கிறேன். இப்போ நம்ம க்ளாஸா இருக்குல்ல இதுதான் அப்போ என்னோட ஐந்தாம் வகுப்பு” என்றேன்.
ம். சரி அப்புறம் என அத்தனை மாணவர்களும் ஒரே தாளத்தில் கூறினர். அந்த ஒரே தாளம் அவர்களின் அத்தனை கவனமும் ஒன்றாகக் கூடி இப்போது என்மீது இருப்பதை என்னால் உணர முடிந்தது.
“இவ்வளோ பெருசா நீண்டு வளர்ந்திருக்குல்ல இந்தப் பன்னீர்ப் பூ மரம் இப்போ இருக்க மாதிரிதான் அப்போவும் அதோட மேல் பகுதி மட்டும் கிளைகளால அடர்ந்திருந்தது. அதோ பாருங்க” என்று மரத்தைச் சுட்டினேன்.
“ஆமாம் மிஸ். அப்படித்தான் இருக்கு.” என்றான் மணிகண்டன்.
“அந்த அடர்த்தியினால அங்க இருள் சூழ்ந்திருக்குறத போல பாக்குறவங்களுக்குத் தோணிச்சு.”
“ஆமாம் இப்பவும் அப்படித்தான் தோணுது. ஏன் அங்க இருட்டா இருக்கு” என்றாள் சரளா.
“மிஸ் நிஜமா இப்பவும் அப்படித்தான் இருக்கு. பாருங்க” என்றான் சிவா.
நான் மீண்டும் மேலே பார்த்தேன். என்னோடு அத்தனை மாணவர்களும் நிமிர்ந்து மரத்தைப் பார்த்தனர். மேல் பகுதி அடர்ந்திருந்தாலும் அங்கங்கு வெளிச்சம் தென்பட்டது.
ஆமாம். அது மரமானதுல இருந்தே அப்படித்தான் இருக்கு என்றேன்.
ம். அப்பறம் மிஸ் என்று தொடங்கி வைத்தாள் மீண்டும் சரளா.
“அங்க இருட்டா இருக்குறதால அங்க ஏதோ பேய் இருக்கு. அது மெரட்டுதுனு எல்லாரும் பேசிகிட்டாங்க”.
என்னது பேயா. பதினாறு மாணவர்களின் கண்களும் ஒன்றுபோல விரிந்தன. பார்ப்பதற்குச் சற்று வியப்பாகவும் அழகாகவும் இருந்தது அது.
ஆமாம். பேய்தான் என்றேன்.
மிஸ் நீங்க பாத்திங்களா? என்றான் ரகு.
இது மிகச் சரியான ஒரு கேள்வி. இப்போதே இதற்கு விடை கூறிவிட்டால் கதை சட்டென்று முடிந்துவிடும் என்று யோசித்துப் பின் நிதானமாகப் பதிலுரைத்தேன்.
“ஒரு ரெண்டு மூனு முறை பார்த்திருப்பேன். எங்கூட வந்து விளையாடினது” என்றேன் பதற்றமில்லாமல்.
என்ன மிஸ் சொல்றிங்க என்றான் முகிலன்.
“மீதிக் கதை வேணுமா வேணாமா” என்று கேட்டேன் ஒரு செல்ல கண்டிப்புடன்.
“இனி எந்தக் கேள்வியும் கேக்க மாட்டோம் கதையைச் சொல்லுங்க தாயே” என்றான் வசந்த்.
“அப்போ எட்டாவது படிச்ச ஒரு அக்காவுக்குப் பேய்ப் பிடிச்சிடுச்சு.”
“அச்சச்சோ” என்று வாயில் கை வைத்தாள் நித்யா.
மிகுந்த கூரிய கவனத்தோடு அப்புறம் மிஸ் என்றான் மணிகண்டன்.
“அந்த அக்கா கடைசியா இங்கதான் நின்னாங்கனு அவங்க கூட படிச்ச இன்னொரு அக்கா சொன்னாங்க”.
“மிஸ். நாம வேணும்னா உள்ள போய் மீதிக் கதையைப் பேசுவமா” என்றாள் ரம்யா?
ஏன் என்றேன்.
“மிஸ் அவளுக்கு பயம் வந்துருச்சு அதான் உள்ள போலாம்னு சொல்றா” என்றான் கோபாலகிருஷ்ணன்.
“இல்ல மிஸ். இங்கேயே சொல்லுங்க அதான் நல்லாருக்கு. மரத்தப் பார்த்துகிட்டே கேக்குறது”. என்றான் சாஹிர்.
ஓகே. அப்புறம் என்னாச்சுனா, என்னோட க்ளாஸ் ப்ரண்ட் லதா ஒருநாள் இந்த மரத்துக்கடியில மயங்கி விழுந்துட்டா.
“அச்சச்சோ என்னாச்சு மிஸ் மறுபடியும்” என்றாள் சரளா.
“அவளுக்கு உடம்பு சரியில்லாமப் போய்டுச்சி. அதுக்கப்புறம் ஒருவாரம் அவ ஸ்கூல் வரல” என்றேன் .
“க்ளாஸ்ல எல்லாரும் இந்த மரத்தால தான் எல்லா ப்ரச்சனையும்னு சொன்னாங்க”என்று நிறுத்தினேன்.
“ஆனா மரம் வெறும் மரம் தான மிஸ். அது ஒன்னும் பிடிச்சு தள்ளலல” என்றான் ரோகித்.
எத்தனை அறிவார்ந்த பதில். ஒரு நிமிடம் அழைத்துக் கைக்கொடுக்க எண்ணினேன். ஆனால் மீதிக் கதையும் முடியட்டும் என்று அந்த அன்பைக் காத்திருப்பில் கிடத்தினேன். இருப்பினும் ஆமாம் ரோகித். நீ சொல்றது சரிதான். மரம் பிடிச்சுத் தள்ளல அப்போ அத பழி சொல்லக் கூடாது என்று புன்னகைத்தேன்.
அப்புறம் மிஸ் என்றான் சத்யன்.
ஒருநாளும் ஒரு பாடத்தையும் கவனிக்காத சத்யனைக் கூட கவனிக்க வச்சிடுச்சே இந்தக் கதை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அப்புறம் இந்தப் பூவெல்லாம் எடுக்கக் கூடாது. இங்க விளையாடக் கூடாதுனு பெரிய க்ளாஸ் புள்ளைங்கலாம் திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டே இருந்தாங்க”.
“ஏன் மிஸ்’. இது வசந்த்.
“அந்த அக்காக்குப் பேய் பிடிச்சதுனு சொன்னேன்ல அதனால. இங்க விளையாடினா இந்தப் பூ எடுத்தா பேய் பிடிச்சிக்கும்னு நினைச்சாங்க.”
ம். அப்புறம். இது ரம்யா.
அப்புறம். அவங்க சொன்னதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு இந்த பூவும் இந்த மரமும் ரொம்பப் பிடிக்கும் என்று நிறுத்தினேன்.
“உங்களுக்கு பிடிக்கும்னு இப்படிப் பேய் மரத்துல உக்கார வச்சிருக்கிங்களே மிஸ்” என்றான் கோபாலகிருஷ்ணன்.
மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து சிரித்தனர்.
சரிதான் இத்தனையும் இங்கே வந்து அமர்ந்தது தான் காரணம். எனக்கு பிடிக்கும் என்பது தான் இதன் அடிநாதம். எவ்வளவு துரிதமாகக் கண்டுபிடித்து விட்டான் என்று எனக்குள் நானே கூறிக் கொண்டேன்.
அப்புறம் எனத் தொடங்கினான் ரகு.
அப்புறம் யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் ஒரு பூவ எடுத்து புத்தகத்துக்குள்ள வச்சிகிட்டேன்.
அச்சச்சோ என்று அதிர்ந்தாள் சரளா.
பேய் பாக்கலையா என்றாள் ரம்யா.
இந்தக் கேள்வியைச் சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் பதிலும் இல்லை. அதை அப்படியே விட்டு வைத்தேன்.
“எப்படியும் உங்க பின்னாடியே வந்துருக்கும் அந்தப் பேய் என்றான் சாஹிர். “யோசிச்சு பாருங்க வெள்ள கலர்ல ட்ரெஸ், நிறைய முடி, பெரிய பல்லு னு தன் கற்பனை குதிரைகளை அவிழ்த்து விட்டான் அவன்.
பேய் வந்ததா மிஸ் என்றான் ஆர்வம் தாளாமல் மணிகண்டன்.
ம். அப்படி எதுவும் வந்த மாதிரி தெரியல என்று நிறுத்தினேன்.
அப்புறம் என்னாச்சு என்றான் ரோஹித்.
பூ எடுத்ததால எனக்கும் எதாவது ஆகும்னு நானும் நினைச்சேன் .
ம். அப்புறம் இது ரகு.
ஆனா எதுவும் ஆகல என்று நிறுத்தினேன்.
ஆனா எப்படி என்றான் வசந்த்.
“உனக்கு தெரியாதா நம்ம மிஸ்ஸ யாருக்குதான் பிடிக்காது. பேய்க்கும் பிடிச்சிருக்கும். அதான் விட்ருச்சு” என்றான் கோபாலகிருஷ்ணன்.
மீண்டும் எல்லோரும் சேர்ந்து சிரித்தனர். நானும் உடன் சேர்ந்து சிரிக்கவே செய்தேன்.
“அப்புறம் என்னாச்சு மிஸ்” என்றாள் ரம்யா.
அதான் ஒன்னும் ஆகலையே. அதானால… கொஞ்சம் இழுத்தேன்.
அதனால.. தொடர்ந்து இழுத்து நிறுத்தினான் சத்யன்.
“தினமும் பூவை எடுத்துட்டு போக ஆரம்பிச்சிட்டேன்”.
“அப்போ அவ்ளோதானா”? என்றான் மணிகண்டன்.
என்ன என்றேன்.
கதை என்றான் சாஹிர்.
“இருக்கே” தொடர்ந்தேன்.
அப்பாடா? என்று இன்னும் நிமிர்ந்து அமர்ந்தாள் ரம்யா.
அப்புறம் மிஸ் என்றான் ரோஹித்.
ஒருநாள் நான் பூவை எடுக்கும்போது என் க்ளாஸ் ப்ரண்ட் சுதா பாத்துட்டா?
என்னாச்சு அப்புறம் என்றான் முகிலன்.
என் பக்கத்துல வந்து இத எடுக்காத உனக்கு எதாவது ஆயிடும்னு சுதா சொன்னா.
நீங்க என்ன சொன்னிங்க மிஸ் என்றான் சாஹிர்.
சொல்லல. என்னாகும்னு கேட்டேன்.
அப்புறம் இது சத்யன்.
பேய் பிடிக்கும் என்றாள்.
“நான் அதுக்கு, அதெல்லாம் சும்மா. ஒரு மாசமா இந்தப் பூவ எடுத்துட்டுப் போய் விளையாடிகிட்டுதான் இருக்கேன். எனக்கொன்னும் ஆகலையே” என்றேன்.
அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க மிஸ் என்றாள் சரளா.
“நிஜமாவானு கேட்டா. நான் ஆமானு சொன்னேன். அப்புறம் ஒரு பூ எடுத்துக் கொடுத்தேன். அவளுக்கு வாங்கவே கொஞ்சம் தயக்கமா இருந்தது. அப்புறம் வாங்கி மேல் சட்டைப்பையில வச்சிகிட்டா”. என்றேன்.
அப்புறம் என்றாள் மகா.
மகா பெரும்பாலும் வகுப்பில் எதற்குமே பேசாத ஒரு மாணவி. பாடத்திலும் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் அவளால் அதை உள்வாங்கிக் கொள்ளவே முடியாமல் போனது. ஒரு நாளில் பெரும்பாலான நேரத்தை நான் அவளுக்காகத் தான் செலவழித்தேன். ஆனால் ஓவியத்தில் மகாவின் அறிவு அவள் வயதிற்கு அதிகமாக அமைந்திருந்தது. அத்தனை தத்ரூபமாக வரையும் திறமை அவளுக்கு இயல்பாக அமைந்திருந்தது. எப்போதும் எதற்காகவும் பேசாத மகா அப்புறம் என தொடங்கியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
நான் தொடர்ந்தேன். “அன்னைக்கு நல்லாதான் போனது. சேர்ந்து விளையாடினோம். சாப்பிட்டோம். அன்னைக்கு சாய்ந்தரம் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி”.. நான் நிறுத்தி எல்லோரையும் பார்த்தேன்.
வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி.. என்னாச்சு மிஸ் என்றான் முகிலன்.
“சுதா எப்படி விழுந்தானே தெரியல கீழ விழுந்து பல் ஒடைஞ்சிடுச்சி. சுதா வாயெல்லாம் ஒரே ரத்தம். முகத்தை சோகமாக வைத்து நிறுத்தினேன்”.
“பாவம்ல” என்றாள் ரம்யா அருகில் இருந்த சூர்யாவிடம்.
“இது அந்த பேயோட வேலைதான்”. என்றான் சாஹிர்.
“ஆனா உங்களுக்கு ஒன்னும் ஆகல தான” என்றாள் சரளா.
“அதான் மிஸ்ஸ மட்டும் புடிச்சி போயிடுச்சி அந்தப் பேய்க்கு” என்று சிரித்தான் முகிலன்.
அப்புறம் என்றான் ரோஹித். அவன் முகம் ஏனோ அத்தனை தீவிரமாக இருந்தது.
“அப்புறம் எனக்கு ரொம்ப கஸ்டமாயிடுச்சு. என்னால தான் சுதாவுக்கு அடிபட்டது. என்னால தான அவ பூவை தொட்டானு நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டேன். ரொம்ப நேரம் இங்கையே உக்காந்துருந்தேன். இருட்டும்போது தான் வீட்டுக்கு போனேன். அன்னைல இருந்து ஒரு வாரம் எனக்கு உடம்பு சரியில்லாம போய்டுச்சு”.
அச்சச்சோ.. என்றாள் சரளா.
அப்புறம். இது கோபாலகிருஷ்ணன்.
“ஒரு வாரத்துக்கு அப்புறம் ஸ்கூல் வந்தேன். சுதா வந்து பேசினா. என்னால தான உனக்கு அடிபட்டதுனு நான் அவகிட்ட மன்னிப்பு கேட்டேன்.
அந்த பல்லு ரொம்ப நாளா ஆடினது. அன்னைக்கு விழுந்துருச்சு. அடிலாம் எதுவும் படலனு அவ சொல்லும்போது தான் கொஞ்சம் நிம்மதியா இருந்தது எனக்கு.”
“நீங்க எதுவும் பண்ணல மிஸ் நம்புங்க” என்றாள் ரம்யா.
“சின்ன வயசுல நமக்கு தெரியாதுல ரம்யா” என்றேன்.
சரி அப்புறம் என்றான் ரோஹித்.
நான் ரோகித்தைப் பார்த்து புன்னகைத்தேன். “அப்புறம் சுதா என்ன பூ வச்சி விளையாட கூப்டா?”
அச்சச்சோ திரும்பவுமா? என்றான் சாஹிர்.
“நானும் இப்படித்தான் கேட்டேன். அதுக்கு சுதா நீ தான இவங்க சொல்ற மாதிரிலாம் எதுவும் இல்லைனு சொன்ன?” என்றாள்.
ஆமாம் மிஸ் நீங்க தான சொன்னிங்க. அதனால நீங்க விளையாடப் போறது தான் சரி என்றாள் சூர்யா.
“ம். நான் யோசிச்சுகிட்டே நின்னேன்.
ஒன்னாவது புள்ளைங்கலாம் ட்ரெயின் விளையாட்டு விளையாடிகிட்டு அந்த பக்கம் வந்தாங்களா, என் மனசு என்ன பாத்து ஒரு கேள்வி கேட்டுச்சு. இந்தப் பேய் விசயத்தை நாமளும் நம்பினா அது இந்த ட்ரெயின் விளையாட்டு மாதிரி ஒருத்தருக்கு பின்னாடி இன்னொருத்தருக்குனு போயிகிட்டே தான இருக்கும்னு”.
கரெக்ட் மிஸ். உங்க மனசு உங்களக் கேட்டது கரெக்ட் தான் என்றான் கோபாலகிருஷ்ணன்.
அதான் இது நம்மளோட முடியட்டும்னு நினைச்சு.. என்று நிறுத்தினேன்.
நினைச்சு என்றான் மீண்டும் ரகு.
சேர்ந்து விளையாட போய்ட்டேன் என்று புன்னகைத்தேன்.
சூப்பர் மிஸ் என்று கைதட்டினான் வசந்த்.
அப்புறம் என்றான் ரோஹித்.
கொஞ்சம் நாள் நாங்க மட்டும் விளையாடினோம். அப்புறம் ஒவ்வொருத்தரா மத்த புள்ளைங்களும் வர ஆரம்பிச்சிட்டாங்க.
அதுக்கு முன்னாடி மிஸ்? இது வசந்த்.
இங்க யாரும் விளையாட வர மாட்டாங்க. நான் பாத்ததில்ல என்று முடித்தேன்.
எழுந்து நின்று கை தட்டினான் ரோகித். அவனை அழைத்து எதற்காக கை தட்டின? என்ன தெரிஞ்சிகிட்ட இந்தக் கதையில? என்று கேட்டேன்.
மிஸ் இந்த மரமும் பூவும் எதுவும் பண்ணல. ஆனா எல்லாரும் அதை பாத்து பயந்துருக்காங்க. அது தப்பு. இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது என்றான் ரோகித்.
நான் ஒரு மரியாதையோடு அவனை பார்த்தேன்.
ரொம்ப தாங்க்ஸ் மிஸ் இந்தக் கதைக்கு. ஒரு பெரிய பாடம் சொல்லி கொடுத்துடுச்சு என்றான் மீண்டும்.
ஆமாம் மிஸ். பேய் இருக்கோ இல்லையோ நாம பாத்தா தான் நம்பனும்னு நான் தெரிஞ்சிகிட்டேன் இந்தக் கதையில என்றாள் சரளா.
நான் புன்னகைத்தேன்.
நல்ல ப்ரண்ட்னா ப்ரண்ட் சொல்றத நம்பனும் அந்த சுதா அக்கா மூலமா நான் அதை தெரிஞ்சிகிட்டேன் மிஸ் என்றான் முகிலன்.
நல்ல கதை மிஸ் என்று கை கொடுத்தாள் மகா.
மிகுந்த நிறைவோடு நான் மாணவர்களைப் பார்த்து அமர்ந்திருந்தேன்.
சில்லென்று காற்று வீச மரத்தில் இருந்து மலர்ந்த பன்னீர்ப் பூக்களெல்லாம் உதிர்ந்து விழுந்தன. மலர்களைச் சேகரிக்க மாணவர்கள் ஆர்வமாக ஓடினர்.
Art : Anaïs of Magdala
ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.








Leave a Reply