மாபெரும் அச்சம்
ஒவ்வொரு இரவும் ஊரார் முழுவதும் தூங்கிய பின், அவர்கள் கனவுகள் ஒன்று சேர்ந்து ஒரு பழமையான நீதிமன்றமாக மாறியது. ஒருவர் யாரையேனும் ஏமாற்றியிருந்தால், அவரின் கனவில் வழக்கு நடைபெறும். ஒரு முறை ஒரு வியாபாரி கள்ளமாக விலை உயர்த்தியதின் பொருட்டு, அவரது கனவில் பொருட்களை வாங்கிய ஒரு கிழவி வழக்குத் தாக்கல் செய்தாள். காலையில் எழுந்தவுடன், வியாபாரியின் உடல் நீதிமன்றத் தண்டனையால் கொடுமையாகக் காயமடைந்திருந்தது. அதன்பின் யாரும் ஏமாற்றம் செய்யத் துணியவில்லையென்பதை விட அவர்களிடையே மாபெரும் அச்சம் ரத்தக் காயமாகத் தோற்றங்கொள்ளத் தொடங்கியது. ஆனால் அது கனவிலா நினைவிலா என்பது யாருக்கும் விளங்காததோடு விநோதக் குழப்பங்களும் வரிசை கட்டத் துவங்கின.
செம்மறியாட்டின் ரோமக்கற்றை
மறைந்த நட்சத்திரக் கூட்டத்தில், ஒரு விண்கலம் செம்மறியாட்டின் ரோமக்கற்றையைச் சேமித்து வைத்திருக்கிறது. அது சாதாரண மயிர் தொகுதியல்ல; ஒவ்வொரு கேச நூலும் ஒலி அலைகளை உறிஞ்சி விண்மீன்களின் குரலைப் பதிவு செய்கிறது. அந்த நார் உலகின் பழைய புனிதக் குரல்களை மீண்டும் உதிர்க்கும் திறன் பெற்றிருந்தது. ஆனால், அந்தக் குரல்கள் விழிக்கும் போது, மனிதர்கள் தங்கள் சொந்தக் குரலை இழந்து, மிருகங்களின் நிசப்தத்தில் வாழத் தொடங்குகிறார்கள். சிலர் மரண ஆழத்தில் நித்திரை கொள்ளவும் துவங்கினர்.
கறுப்பு ஸ்ட்ராபெர்ரி
புவியில் உள்ள ஸ்ட்ராபெர்ரிகளைப் போலல்லாமல், கறுப்பு நிறமுடைய இந்தக் கனியில் ஒளி உறிஞ்சும் சக்தி இருந்தது. அதைச் சுவைத்தவர்கள் தங்கள் உடலை நிழலாக்கிக் கொண்டு, சுவர்களைக் கடந்து பயணம் செய்தனர். சிலர் உலக அரசுகளை வீழ்த்தும் உளவாளிகளாக மாறினர். ஆனால் காலப்போக்கில் அவர்கள் அனைவரும் முற்றிலும் கருமையாய்க் கரைந்து, மனித உருவை இழந்தனர். எஞ்சியது ஒரு பனிக்கட்டி போல குளிர்ந்த குரல் மட்டுமே. மேலும் நிழலில் வாழ்பவர்கள் ஒளியை ஒருபோதும் மீண்டும் காண முடிவதில்லை.
முத்த உதடுகள்
நதியில் ஒரு இறந்த பெண்ணின் இரு உதடுகள் தனியாக மிதந்தன. அவை பேசவில்லை; ஆனால் யாரோ பலவந்தமாக முத்தமிடும் ஒலியை எழுப்பின. அந்த ஒலி அக்கணமே ஒரு பறவையின் பாடலாகவும் மாறியது. யாரும் அதுபோன்ற ஒரு பறவையின் ஒலியை இதுகாறும் கேட்டதில்லை. மக்கள் நதியருகே வந்து பறவையின் பாடலைப் பாடும் அந்த அழுகிய உதடுகளைப் பார்த்து ஓலமிட்டுக் கதறி அழுதனர். அதேவேளை வானத்திலிருந்து சடுதியாக ஒரு பறவை கீழே இறங்கியது.
Art : DegreeArt.com








Leave a Reply