படுக்கைக் கோடுகள்
சிறுவர் ஒருவர் நண்பருக்காகக் காத்துக்கொண்டிருந்தார். நெடு நேரமாகியும் அந்த நண்பர் வரவில்லை. நெடுநேரம் காத்துக் கொண்டிருந்ததால் அந்தச் சிறுவருக்குக் கால்கள் வலித்தன. அருகில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தடியில் ஒரு பொிய கல் இருந்தது. சிறுவர் அந்தக் கல் மீது போய் உட்கார்ந்தார். அவர் ஒரு கோடுபோட்ட சட்டை உடுத்தியிருந்தார். அவை நெடுங்கோடுகளாக இருந்தன. நெடுங்கோடுகள் என்றால் நாம் நிற்போமே, அதுபோல நிற்கும் நிலையில் இருப்பவை. திடீரென்று அந்தச் சிறுவர் தன் சட்டையைப் பார்த்தார். ஒரே வியப்பு. சட்டையில் நின்ற நிலையில் இருந்த நெடுங்கோடுகள் எல்லாம் கிடைமட்டக் கோடுகளாக மாறிவிட்டிருந்தன. அதாவது படுக்கைக் கோடுகளாக மாறிவிட்டிருந்தன. ‘ஏன் இப்படி?” என்று அந்தக் கோடுகளிடம் கேட்டார். ‘நின்று நின்று உனக்குக் கால்கள் வலித்தன. அதனால் நீ உட்கார்ந்துவிட்டாய். நாங்களும் எவ்வளவு நேரம் நிற்பது. அதனால் கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று படுத்திவிட்டோம்” என்றன.
ஒளிப் பூ
இரண்டு நண்பர்கள் மின்மினியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் சொன்னார். ‘மின்மினியின் வெளிச்சம் எனக்கு இரவிலே பூத்து இரவிலே உதிரும் ஒரு பூவாகத் தொிகிறது.”
இன்னொருவர் சொன்னார். ‘அதுவும் ஒரே நொடியில் பூத்து உதிரும் பூவாகத் தொிகிறது.”
அதைக் கேட்ட மின்மினி இப்படிச் சொன்னது ‘கொடியிலும், செடியிலும் பூக்கும் பூக்கள் மண்ணில் உதிரும். ஆனால், என் ஒளிப் பூக்கள் மண்ணில் உதிர்வதில்லை.
ஓவியங்கள் : பார்வதி பாலா
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.









Leave a Reply