Art : souandresantana
ஊஞ்சலின் நீளம்
சிறுமி ஒருவர் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடினார்.
முதலில் நீளமான ஊஞ்சல் கட்டினார். அதில் கொஞ்ச நேரம் ஆடினார்.
பிறகு ஊஞ்சலின் நீளத்தைக் குறைத்தார். அதில் கொஞ்ச நேரம் ஆடினார்.
ஊஞ்சல் நீளமாக இருந்த போது அலைவு நேரம் அதிகமாக இருந்தது,
நீளம் குறைவான போது அலைவு நேரம் குறைவாக இருந்தது.
இயற்பியல் பாடத்தில் இதைப்பற்றி படித்தது நினைவுக்கு வந்தது.
ஆடி முடித்த பிறகு அந்த மரத்தைப் பெருமையாகப் பார்த்தார். “என்னைத்
தாங்கும் பொறுப்பு இருந்தும் என் ஊஞ்சலின் நீளத்தில் இந்த மரம்
தலையிடவில்லை” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

ஓவியம் : இரா.வான்நதி
பப்பாளி மரத்தின் கைகள்
தோட்டத்தில் ஒரு பப்பாளி மரம் இருந்தது.
பப்பாளி மரத்தின் இலையும் அதன் தண்டும் மனிதர்களின் கைகளைப் போல் இருக்கும். ஒரு மனிதன் கையை நீட்டி, விரல்களை விரித்து, உள்ளங்கையைக் காட்டுவது போல் தோன்றும். இப்படி பல கைகளைக் கொண்டவை பப்பாளி மரம்.
ஒரு சிறுமி அந்தப் பப்பாளி மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு பக்கத்தில் இருக்கும் தோழியிடம் சொன்னார் “காய்ப்பதற்கு முன் இந்தப் பப்பாளி இலைகள் எப்படி இருந்தன தெரியுமா? வெறுங்கையைக் காட்டி, கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்வது போல் இருந்தது”.
“காய்த்த பிறகு?” தோழி கேட்டார்.
“கொடுப்பதற்கு என்னிடம் எவ்வளவு பழங்கள் இருக்கின்றன பார்த்தாயா
என்று கை விரித்து கேட்பது போல் இருக்கின்றது”.

ஓவியம் : பா.இரணதீரன்
வேலூரில் வசித்துவருகிறார். பிரியாத மழை நினைவு என்கிற கவிதை கவிதை நூலையும்
புலி கிலி, எருமையின் நிழல் ஆகிய சிறார் கதை நூல்களையும், பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி, தங்க மாங்கனி ஆகிய நாட்டுப்புற சிறார் கதை தொகுப்புகளையும், கை வீசி நடக்கும் நிழல், நீலக்குரல் ஆகிய சிறார் பாடல்களையும் எழுதி உள்ளார். சிறார் கதைச் சொல்லியான இவர் சிறார்களுக்காகக் ‘கூட்டாளிகள்’ என்ற கலைக் குழுவைவையும், ‘தமிழ்க் கனவு’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.








Leave a Reply