Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

‘இலக்கியத்தில் நிலம்’ – தடாரி சிறப்பு உரையாடல்

பச்சோந்தி
பச்சோந்தி
September 1, 2025
‘இலக்கியத்தில் நிலம்’ – தடாரி சிறப்பு உரையாடல்

நிலம் சார்ந்த கவிதைகளை முன்வைத்து ‘என்னமோ இவுங்கதான் நிலத்துக்கு அத்தாரிட்டி மாதிரி’ என்கிற உரையாடல் தொடங்கி, ‘நிலத்தை எழுதுவது ஃபேஷனாகிவிட்டது’, ‘நிலத்தை எழுதுவது என்பது சாதியை எழுதுவதுதான்’ போன்ற உரையாடல்கள் வரை இலக்கியச் சூழலில் வெவ்வேறு காலகட்டங்களில் நேரிடையாகவே கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் வெளிவந்த கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் ‘கிடக்கட்டும் கழுதை’ நூல் விமர்சனக் கூட்டத்தில் இந்நூலில் நிலமே இல்லை என்கிற கூற்றை காணொளி வாயிலாகக் கேட்டேன். இத்தொகுப்பில் இறுதியாக இடம்பெற்ற ‘பதினைந்து கல்லெறி தூரம் (கள்ளத் தோணிகளின் செந்நிறப் பாடல்)’ என்கிற கவிதை ஒன்று போதாதா? என்று எண்ணத் தோன்றியது. மேலும், யவனிகாவுக்கு நடைபெற்ற இன்னோர் நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தேன். அந்நிகழ்வில் யவனிகா கவிதைகளில் தென்படுவது தமிழ்நிலமே இல்லை என்ற கூற்றை நான் மறுத்து ‘அங்காடித் தெரு’ கவிதை தி.நகர் ரங்கநாதன் தெருவைப் பாடுவதுதானே எப்படி தமிழ்நிலம் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றேன். மேலும் தேவதச்சன் கவிதைகளில் நிலமே இல்லை என்று சொல்வதும், யவனிகாஸ்ரீராம் கவிதைகளில் தமிழ் நிலமே இல்லை என்பதும் பெரும் அபத்தம் என்றேன்.

அப்போது நிலம் என்பதை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம்? எது நிலம்? என்கிற கேள்வி அடிக்கடி எழுந்துகொண்டே இருந்தது. இக்கேள்வியை மையமாக வைத்து தடாரியில் சிறப்பு உரையாடல் செய்யலாம் என்று தோன்றியது. பின்வருமாறு கேள்வியை ஒழுங்கு செய்து எழுத்தாளர்களுக்கு அனுப்பினேன்.

‘‘நிலம் என்றால் என்ன? நவீன இலக்கியப் பரப்பில் நிலம் கையாளப்பட்டுள்ள விதம் குறித்தும், வரலாற்றில் நிலம் எவ்வாறு நினைவுகொள்ளப்படுகிறது என்பது குறித்தும் கூறுங்கள்.” இக்கேள்வியின் சுருக்கமே ‘இலக்கியத்தில் நிலம்’. பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த எழுத்தாளர்கள் பதில் அனுப்பவில்லை. அவர்கள் அனுப்பி இருந்தால் இன்னும் வெவ்வேறு பார்வைகள் கிடைத்திருக்கும். சில இலக்கிய மேடைகளில், யூடியுப் சேனல்களில், மதுபானக் கடைகளில் தன் கருத்தை உளறிக் கொட்டுகிறார்கள் என்பதை இங்கு குற்றச்சாட்டாக வைக்கிறேன். இதுபோன்ற உளறல்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. முக்கிய உரையாடல்களை ஏற்படுத்தும் அரிய நிகழ்வும் அமைவதுண்டு. அப்படி அரிதான ஒன்றுதான் ‘இலக்கியத்தில் நிலம்.’ மிகப் பரந்த தளத்தில் பயணிக்க வேண்டிய பாதை இது. முதல் அடியைத் தடாரி எடுத்து வைக்கிறது. இச்சிறப்பு உரையாடலில் பங்குபெற்ற ஆளுமைகள் அனைவருக்கும் நன்றி.

– பச்சோந்தி
தடாரி ஆசிரியர்


றியாஸ் குரானா

நிலம். வெறும் மண்ணா? நான்கு பக்கமும் அளந்து, ஒரு பத்திரத்தில் அடக்கிவிடக்கூடிய வெறும் சொத்தா? இந்தக் கேள்வியை நாம் நமக்குள் ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொள்ளத் தவறும்போது, அதிகாரத்தின் காலடியில் நமது ஆன்மாவின் ஒரு பகுதியை நாமே அறியாமல் சமர்ப்பித்து விடுகிறோம்.

நிலம் என்பது ஒருபோதும் வெறும் பௌதிகப் பரப்பு அல்ல. அது ஒரு சமூகத்தின் கூட்டு நனவிலிப் பெருவெளி. அது நினைவுகளின் நரம்போடிய நிலவறை. தலைமுறைகளின் வியர்வையாலும், கண்ணீராலும், சில நேரங்களில் சிந்தப்பட்ட ரத்தத்தாலும் குழைக்கப்பட்ட உயிருள்ள பிண்டம். இந்த உயிர்ப்பிண்டத்தின் மீதான பார்வை, உலகெங்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை நாம் முதலில் மிக ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மீதான ஒவ்வொரு பார்வையின் பின்னாலும் ஒரு தத்துவம், ஒரு அரசியல், ஒரு வாழ்வியல், ஒரு வன்முறை மறைந்திருக்கிறது.

மேற்குலகின் கண்களுக்கு நிலம் ஒரு பண்டமாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை. அதன் தத்துவ மரபும், சட்ட அமைப்பும் அந்தப் பார்வையை நோக்கியே கட்டமைக்கப்பட்டன. ரோமானிய சட்ட மரபிலிருந்து பிறந்த முழுமையான உடைமை என்ற கருத்தாக்கம், நிலத்தை மனிதனிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் அந்நியப்படுத்திய முதல் புள்ளி. பின்னர் வந்த ஜான் லாக் போன்ற தத்துவவாதிகள், உழைப்பைச் செலுத்துவதன் மூலம் ஒரு நிலப்பகுதியைத் தனதாக்கிக் கொள்ளலாம் என்ற வாதத்தை முன்வைத்தபோது, அது தனிநபர் சொத்துரிமைக்கு ஒருவித தத்துவார்த்த நியாயத்தைக் கற்பித்தது.

இதன் விளைவு? இங்கிலாந்தின் ‘வேலியடைப்பு இயக்கங்கள்’. வரலாற்றின் பக்கங்களில் சில வரிகளில் கடந்துபோகும் இந்த நிகழ்வு, உண்மையில் ஒரு மாபெரும் சமூகப் படுகொலை. மக்களின் பொதுச்சொத்தாக இருந்த நிலங்கள், சட்டத்தின் பெயரால் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு, வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. அந்த வேலிகள், நிலத்தை மட்டும் பிரிக்கவில்லை. ஒரு சமூகத்தின் தொப்புள்கொடியை அறுத்தெறிந்தன. தங்கள் மண்ணிலிருந்து பிய்த்தெறியப்பட்ட மக்கள், வாழ்வாதாரமற்ற அகதிகளாய், நகரங்களை நோக்கித் துரத்தப்பட்டனர். அந்த நிலமற்ற தொழிலாளர் படையின் எலும்புகளின் மீதுதான் தொழிற்புரட்சியின் பிரம்மாண்டமான கோட்டைகள் கட்டப்பட்டன. ஆக, நிலத்தை அதன் ஆன்மாவிலிருந்து பிரித்து, வெறும் மூலதனமாக, சுரண்டப்பட வேண்டிய சதைப் பிண்டமாக மாற்றிய வன்முறையின் மீதுதான் நவீன மேற்குலகம் எழுந்து நிற்கிறது. இந்தக் கருத்தியல்தான் பின்னர், ஒரு போதையைப்போல, காலனியப் பெருவெறியாக மாறி, ‘நாகரிகமற்ற’ கறுப்பு, பழுப்பு நிற மக்களின் நிலங்களைக் கைப்பற்றுவதை ஒரு புனிதமான கடமையாகவே நியாயப்படுத்தியது.

இதற்கு முற்றிலும் நேரெதிரான ஒரு புள்ளியில் கீழைத்தேய, ஆப்பிரிக்கப் பார்வைகள் நிற்கின்றன. இங்கே நிலம் என்பது தாய். அது வெறும் சொல்லலங்காரம் அல்ல, அது ஒரு வாழ்வியல் உண்மை. நீங்கள் ஒரு விவசாயியிடம் கேட்டுப் பாருங்கள். நிலம் அவனுக்கு வெறும் மண் அல்ல. அவனது வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும் தெய்வம். அவனது முன்னோர்களின் கதைகளைப் பேசும் உயிர். அவனது குழந்தைகளின் பசியைப் போக்கும் அமுதம். இந்த உறவை, பட்டா சிட்டா ஆவணங்களால் ஒருபோதும் விளக்கிவிட முடியாது. ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் ‘கனவுகாலம்’ என்ற பிரபஞ்சப் பார்வை, இந்த உறவின் உச்சபட்ச ஆன்மிக வடிவமாகும். அவர்களின் தொன்மங்களின்படி, முன்னோர்களின் ஆன்மாக்கள் இந்தப் பூமியில் பயணித்தபோது பாடிய பாடல்களே இன்றைய நதிகளாக ஓடுகின்றன. அவர்களின் கால்தடங்களே பள்ளத்தாக்குகளாகப் பதிந்திருக்கின்றன. ஆக, நிலம் என்பது அவர்களுக்கு வெறும் குடியிருப்பு அல்ல. அதுவே அவர்களின் வரலாறு, அவர்களின் வேதம், அவர்களின் பிரபஞ்சத்தோடு பேசும் மொழி.

இப்படிப்பட்ட ஒரு சமூகத்திடம் சென்று, நிலத்தை அளந்து, பிரித்து, ஒரு வெள்ளைக்காரனின் பெயரில் பட்டா போட்ட காலனிய அதிகாரத்தின் செயல், வெறும் நில அபகரிப்பு மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டுப் படுகொலை. ஒரு சமூகத்தின் கூட்டு ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற அத்துமீறல். நிலத்தோடு பிணைந்த வாழ்க்கை என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. அது உளவியல் சார்ந்தது. மலையிலிருந்து வீசும் ஒரு குறிப்பிட்ட காற்றின் பெயர், ஆற்றில் ஒரு குறிப்பிட்ட வளைவில் மட்டுமே கிடைக்கும் ஒரு மீனின் பெயர், ஒரு குறிப்பிட்ட பூ பூக்கும் காலத்தைக் குறிக்கும் சொல் – நிலத்தை இழக்கும்போது, இந்த வார்த்தைகளும் அவற்றுடன் சேர்ந்த அறிவும், உணர்வும் ஒருசேரச் செத்துப்போகின்றன. இடப்பெயர்வுக்குள்ளான ஒரு சமூகத்தின் மொழி மெல்ல மெல்ல வறண்டு போவதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். ஒரு மனிதன் தன் நிலத்திலிருந்து அகற்றப்படும்போது, அவன் தன் நினைவுகளின் நிலப்பரப்பிலிருந்தும் அகற்றப்படுகிறான். அவனது கடந்த காலம் ஒரு அந்நிய தேசமாகிவிடுகிறது. இந்த உளவியல் காயத்திற்கு ‘சொலாஸ்டால்ஜியா’ (Solastalgia) என்று சில அறிஞர்கள் பெயரிடுகிறார்கள். அதாவது, தனது சொந்தச் சூழல் தன்கண் முன்னே சிதைந்து போவதைக் கண்டு ஒரு மனிதன் அடையும் தீராத மனவேதனை. இது ஆத்மாவின் ஒரு பகுதியை உயிருடன் புதைத்துவிட்டு நடப்பதைப் போன்றது.

அதிகாரத்தின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்குமான இந்த அடிப்படை முரண், இன்று தேச-அரசுகளின் வடிவத்தில் இன்னும் கூர்மையாக, இன்னும் நுட்பமாக, இன்னும் குரூரமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது: தேச-அரசு பிறக்கிறது. கோடுகள் கிழிக்கப்படுகின்றன. மனிதர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இது ஒரு வன்முறை. ஆனால், துப்பாக்கிகளால் நிகழ்த்தப்படும் வன்முறையை விடவும் ஆழமானது, ஏனெனில் அது நமது சிந்தனைக்குள்ளேயே ஒரு சிறையை எழுப்புகிறது. ‘இது என் தேசம்’, ‘இது என் எல்லை’ என்ற பெருமிதம் நமக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறது. அந்தப் பெருமிதத்தின் பெயரால், சக மனிதனை ‘அந்நியன்’ என்றும், ‘ஊடுருவல்காரன்’ என்றும் வெறுப்பதற்கு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

இந்த எல்லைக்கோடுகளின் அரசியல் என்னவென்று நாம் கேட்டேயாக வேண்டும். அது சமத்துவமானதா? நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், இல்லை. ஐரோப்பிய, அமெரிக்கக் கடவுச்சீட்டைக் கொண்ட ஒருவன், உலகை ஒரு பூங்காவைப் போலச் சுற்றிவர அனுமதிக்கப்படுகிறான். அவனது மூலதனமும், அவனது நுகர்வும் வரவேற்கப்படுகின்றன. ஆனால், அதே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கிய போர்களாலும், ஆயுதங்களாலும், சுரண்டலாலும், காலநிலை மாற்றத்தாலும் சொந்த நிலத்தில் வாழ வழியற்று, கடலில் தத்தளிக்கும் ஒரு சிரிய, ஒரு ஆப்பிரிக்க, ஒரு ரோஹிங்யா அகதியின் நிலை என்ன? அவன் சட்டவிரோதி. அவன் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். கம்பிவேலியில் கிழிந்த சட்டையோடு, தன் கடந்த காலத்தின் நிழலை மட்டும் சுமந்து கொண்டு, எதிர்காலமற்ற ஒரு சூனியத்தில் கால் வைக்கும் அவனது அவலம், இந்த நாகரிக உலகின் மனசாட்சியின் மீது அறையப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒருகாலத்தில் அடிமைகளாக இழுத்துச் சென்ற அதே நிலங்களிலிருந்து, இன்று வாழ்வு தேடி வரும் மனிதர்களை விரட்டியடிக்கும் இந்த அமைப்பின் பெயர் ஜனநாயகம் அல்ல. அது அதிகாரத்தின் நிதானமான குரூரம்.

மேலும், இந்த எல்லைகள் தேசங்களுக்கு இடையில்தான் இருக்கின்றனவா? சற்று யோசிப்போம். ஒரு நகரத்திற்குள் இருக்கும் சேரிக்கும், மாடமாளிகைகள் நிறைந்த பகுதிக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஆனால் கடக்க முடியாத எல்லை இல்லையா? சாதியின் பெயரால் ஒரு தெருவிற்குள் நுழைய மறுக்கப்படும் மனிதனின் காலடியில் வரையப்படும் கோடு, ஒரு தேசத்தின் எல்லையை விடக் கொடியதல்லவா?
‘வளர்ச்சி’ என்ற பெயரில் விரிக்கப்படும் ஆறுவழிச் சாலைகள், ஒரு கிராமத்தின் மார்பைப் பிளந்து செல்கின்றன. ‘தொழிற்பூங்கா’ என்ற பெயரில் எழும் கான்கிரீட் காடுகள், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரக் காடுகளை விழுங்குகின்றன. இந்த ‘வளர்ச்சி’ யாருக்கானது என்ற கேள்வியை எழுப்பாமல், அதன் பிரம்மாண்டத்தில் மயங்கி நிற்கும் வரை, நாம் காலனியத்தின் புதிய வடிவங்களுக்கு நாமே அறியாமல் சேவை செய்கிறோம்.

அதிகாரத்தின் இந்தக் கருத்தியல் வன்முறை, இலக்கியப் பிரதிகளிலும் தன்னைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது. சங்கத் தமிழரின் திணைக் கோட்பாடு, நிலத்தை மனிதனின் அகத்தோடு பிணைத்த ஒரு மகத்தான முயற்சி. ஆனால், நவீன தமிழ் இலக்கியம் நிலத்தை ஒரு தீராத போராட்டக் களமாகவே பதிவு செய்கிறது. சாதியத்தின் ஆணிவேர் நிலவுடைமையில்தான் இருக்கிறது என்பதை, நிலமற்ற தலித் மக்களின் நூற்றாண்டுகால அழுகுரலை, தலித் இலக்கிய எழுத்துக்கள் நமது முகத்தில் அறைகின்றன. ஈழத்து இலக்கியத்தை வாசித்துப் பாருங்கள். அங்கு நிலம் என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது குண்டுவீச்சில் சிதறிய உடல்களின் நினைவு. அது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தீராத காத்திருப்பு. அது அகதி முகாம்களின் தூசிபடிந்த கனவு. அது இழந்துபோன தாயகத்தின் ஆறாத்துயர். இந்த வலியை உலக இலக்கியங்களோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். மேற்குலக இலக்கியம் ஒருபுறம் நிலத்தை வீர சாகசங்களின் களமாகச் சித்தரித்தாலும், கான்ராட் போன்றவர்கள் அதன் காலனியச் சுரண்டலின் குற்றவுணர்வை எழுதினார்கள். ஆப்பிரிக்க இலக்கியமோ, நிலத்தை மீட்பதற்கான ஒரு விடுதலை முழக்கமாகவே ஒலிக்கிறது. கூகி வா தியாங்கோவின் எழுத்துக்களில், நிலத்தை மீட்பது என்பது மொழியை மீட்பதும், பண்பாட்டை மீட்பதும், சுயத்தை மீட்பதுமாகும். வார்த்தைகளின் வெதுவெதுப்பில் காயமாறும் ஒரு சமூகத்தின் குரலாக அது ஒலிக்கிறது.

ஆக, நிலத்தின் மீதான உரிமை என்பது எத்தகையதாக இருக்க வேண்டும்? ஒரு சமூகத்திற்குத் தன் நிலத்தின் மீது பற்றும், பாதுகாப்பும் தேவைதான். ஆனால் அந்தப் பாதுகாப்பு, சக மனிதனின் இருப்பை நிராகரிக்கும் ஒரு இனவாதமாக, ஒரு பாசிசமாக மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? அரசுகள் நிலத்தின் உடைமையாளர்கள் அல்ல. அதன் தற்காலிகப் பாதுகாவலர்கள் மட்டுமே. நிலத்தை, நதியை, காட்டை ஒரு உயிருள்ள சத்தாக மதிக்கும் பூர்வகுடிப் பார்வையை, பொலிவியா போன்ற நாடுகள் சட்டமாக்கியிருக்கும் ‘இயற்கையின் உரிமைகள்’ என்ற முற்போக்கான சிந்தனையை நாம் ஏன் உலகளாவிய விவாதமாக மாற்றக்கூடாது?

நாம் ஒரு பேருண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்தப் பூமி, அதன் காற்று, நீர், வளம், அறிவு, கண்டுபிடிப்புகள் அனைத்தும் இங்கு வாழும் அனைத்து உயிர்களுக்குமானது. தேசங்களின் எல்லைக்கோடுகள் என்பவை அதிகார வர்க்கங்கள் தங்களின் வசதிக்காக, நம்மைப் பிரித்தாள்வதற்காகக் கிழித்த தற்காலிகமான, செயற்கையான கோடுகளே. அந்தக் கோடுகளைத் தாண்டிப் பார்க்கும்போதுதான், மானுடம் என்ற ஒற்றைப் பேருருவம் நமக்குத் தெரியவரும். ஒரு விஞ்ஞானி ஓர் உண்மையைக் கண்டுபிடித்தால், அவர் இந்தப் பிரபஞ்சத்தின் விதிகளிலிருந்துதான் அதைக் கண்டறிகிறார். எனவே, அதன் பலன்கள் அனைத்தும் மானுட குலத்திற்கே சொந்தம்.

‘என் நிலம்’, ‘உன் நிலம்’ என்ற குறுகிய, விஷ மனப்பான்மையைக் கடந்து, ‘நமது பூமி’, ‘நமது பிரபஞ்சம்’ என்ற கூட்டுணர்வை நோக்கி நகர்வதே இன்றைய அவசரத் தேவை. இது வெறும் சிந்தனைக் கோணம் மட்டுமல்ல. இதுவொரு பரிவு சார்ந்த செயல். மற்றவரின் வலியை தன் வலியாக உணரும் அரசியலே நம்மை விடுவிக்கும். இலக்கியமும், கலையும், சிந்தனையும் அந்தக் கூட்டுணர்வின் தீப்பொறியை ஒவ்வொரு மனித மனதிலும் பற்றவைக்க வேண்டும். யார் எங்கு பிறந்திருந்தாலும், இந்த பூமியின் எந்த மூலைக்கும் சென்று வாழவும், அதன் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் உரிமை உண்டு என்ற நிலையை நோக்கிய ஒரு உலகளாவிய சிந்தனைக் கோணமே, நம்மை உண்மையான விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஏனெனில் நிலம் என்பது நம்மைப் பிரிக்கும் சிறைச்சாலை அல்ல. அது நம் அனைவரையும் ஒரு சேரத் தாங்கும் மகத்தான தொட்டில். அந்தத் தொட்டிலில், அனைத்துக் குழந்தைகளும், இன, மத, தேசிய வேறுபாடின்றி, அச்சமின்றி, சமமாக உறங்கும் ஒரு நாளைக் கனவுகாண்பதும், அதற்காகப் போராடுவதுமே மனிதனாக இருப்பதன் அர்த்தம்.

அந்தக் கனவு நனவாகும் வரை, நமது வார்த்தைகள் ஓயக்கூடாது. 


பாண்டியக் கண்ணன்

நிலம் என்றால் ஐவகை நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம் பாலை, நெய்தல், இந்நிலத்தில் வாழும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், நீர் நிலைகள் பற்றி இதுவரை புனையப்பட்ட பேரிலக்கியம், சிற்றிலக்கியம், புராண இதிகாசம், பதிவுருத்தப்பட்டதுபோல் இன்றைய நிலை உள்ளதா? எனக் கேள்வி தொடுக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது! குறிப்பாக தமிழ் கூறும் நல்லுலகில் ஐந்து நிலங்களில் வாழ்ந்த முதல்குடி மூத்த குடியான குறிஞ்சி நிலத்தின் மக்கள் குறவர்கள். இவர்களின் தொன்மையான தொழில் வேட்டையாடுதல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல் அத்தினையைக் காத்தல்.

மலைப்பகுதியில் மட்டும் காணப்படும் மலர் குறிஞ்சி மலர். இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் தன்மையுடையது. குறிஞ்சி நிலத்தின் குறவர்கள் தம் வாழ்வின் சிறந்த கூறாக இம்மலரைப் போற்றுகின்றனர். தலைவி மலை நாடனின் காதலைக் குறிஞ்சிப் பூவிற்கும் அதில் சுரக்கும் தேனிற்கும் ஒப்பாக்குகிறாள். குறிஞ்சித் தேன் மிகவும் இனியது. குறிஞ்சி மலர்களில் உள்ள தேனை எடுத்து வண்டுகள் பெரிய தேன் கூட்டைக் கட்டியிருக்கும். மலை நாடன் என்று அவனைக் குறிப்பிடுகிறாள் தலைவி. சிறப்பான குறிஞ்சித் தேன் போன்றது தங்களது காதல் என உணர்த்துவதை கபிலர் 99 வகை மலர்களை அடுக்கிக் கூறுகிறார். அவற்றில் குறிஞ்சியும் உண்டு.

குறி சொல்லும் வேலன், கட்டுவிச்சி ஆகியோர் கட்டினாலும், கலங்கினாலும் குறி பார்த்துச் சொல்வார்கள். குறிகளில் பலவகை உண்டு. முகக்குறி, அகக்குறி போன்று “கட்டுக்குறி” முறத்தில் நெல் பரப்பிய நெல் கொண்டு பார்க்கும் ஒரு வகை குறியே கட்டு எனக் கூறப்படுகிறது. இதுபோன்று கழற்சிக் கிழங்கு பார்க்கும் குறியைக் கிழங்குக் குறி எனக் கூறுவர்.

சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நில மக்களின் பாடுகள் பதிவுருத்தப்பட்டுள்ளன. தமிழறிந்தோர்க்கு நன்கு புரியும். ஆனால் இலக்கியத்தில் குறிஞ்சி நில மக்களின், தொன்ம வரலாறுகள் மறைக்கப்பட்டு, பண்பாடுகள் சிதைக்கப்பட்டு அலைகுடி அவதிகளையே பாடு பொருளாக்கி, குறவர்கள் என்றால் திருடர்கள், குறவர்கள் என்றால் தீண்டத்தகாதவர்கள், குறவர்கள் என்றால் துப்புரவுப் பணி செய்பவர்கள், கலவரக்காரர்கள், நாடோடிகள் என்றும் கையில் மலம் அள்ளுபவர்கள், தோட்டிகள் என்ற நவீன இலக்கியங்களும், அதனைத் தொடர்ந்து பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் சினிமாக்களும், தொடர்ச்சியாகக் காட்டுவதும், பேசுவதும் படிக்க வைப்பதுமாக மாறிப்போனதின் அவலத்தைச் சொல்லித் தீராது. இதுபோகக் குருவிக்காரர்கள், நரிக்கொம்பு விற்பவர்கள், பாசி ஊசி விற்பவர்களுமான நரிக்குறவர்களும், குறிஞ்சி நிலத்தின் பூர்வீகமும் எனத் தொடர்ச்சியாக எழுதியும் நடித்துக் காட்டியும், உண்மையான தமிழ் நிலத்தின் குறிஞ்சி நில மக்களின் பண்பாடு நவீனக் கலை இலக்கிய வடிவத்தில் மறைக்கப்பட்ட வரலாறு என நான் கூறுவதில் பயமேதும் இல்லை.

நவீன இலக்கியத்தில் நிலம் ஒரு முக்கியமான கருப்பொருளாகும். நிலம் வெறும் புவியியல் சார்ந்த இடம் மட்டுமல்ல அது மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது. நவீன இலக்கியத்தில் நிலம் சமூக அரசியல் தாக்கங்களை வெளிப்படுத்தப் பயன்படுகிறது.

நிலம் சமூக ஏற்றத் தாழ்வுகள், வர்க்கப் போராட்டங்கள் மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைக்காரர்கள் உறவுகள் நவீன இலக்கியத்தில் விவாதிக்கப்படுகின்றன. நிலம் ஒரு இனக் குழுவின் கலாச்சார அடையாளமாகவும், பாரம்பரியமாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு நிலப்பகுதியும் அதன் அடையாளத்தை வெளிப்படுத்த, நிலைநிறுத்த நவீன இலக்கியம் முயலுகிறது. நிலம் ஒருவரின் இழப்பு அல்லது இடம் பெயர்தல் உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் நவீன இலக்கியம் இந்த உளவியல் தாக்கங்களை ஆராய்ந்து தனிமனிதனின் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.

நிலத்தை அதன் இயல்பான தோற்றத்தில் சமூக அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுடன் சித்தரிப்பது. நிலத்தின் மூலம் ஒருவரின் உணர்ச்சியை உளவியல் பூர்வமாய் வெளிப்படுத்துவது. நிலத்தை உருவகமாகவும், குறியீடாகவும் பயன்படுத்தி அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்துவது.
சுருக்கமாக நவீன இலக்கியத்தில் நிலம் என்பது ஒரு சிக்கலான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட கருப்பொருளாகும். இது மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம், உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்த உதவுகிறது. 


கல்யாணராமன்

நிலம் என்பது வாழ்விடம், உரிமை, நினைவு, சுதந்திரம் எனப் பலவாக அர்த்தப்படக்கூடியதாகும். கண்ணகிக்கும் கோவலனுக்கும் புகார்தான் நிலமாக இருந்தது. மதுரைக்கான இடப்பெயர்வு என்பது, அவர்களுடைய வாழ்க்கையையே நிலைகுலையச் செய்துவிட்டது. இராமனுக்கும் சீதைக்கும் அயோத்திதான் நிலமாக இருந்தது. இலங்கை என்பது, அவர்களுக்குச் சித்திரவதையாக இருந்தது. ஐந்து கிராமங்களைப் பாண்டவர்களுக்குக் கௌரவர்கள் விட்டுக் கொடுத்திருந்தால் மகாபாரதப் போரே நடந்திருக்காது. இவையெல்லாம் மேல்தட்டுப் பிரச்சினைகள். சரி விட்டுவிடுவோம்.

காடுகளிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்ற அல்லது வளர்ச்சி என்ற பெயரில், 10 வழிச் சாலைகளுக்காகவும், விமான நிலையங்களுக்காகவும், வசதி படைத்தோரின் அடுக்குமாடிகளுக்காகவும் இந்த நவீனக் காலத்திலும்தான், எவ்வளவு சதிகள் அரங்கேறுகின்றன! சேரன் சோழனை விரட்டியதும், சோழன் பாண்டியனை விரட்டியதும், பாண்டியன் சேரனைத் துரத்தியதும், சங்க காலத்துப் போர்க்களங்கள் நமக்குக் காட்டுவது என்ன? வெட்சியும் வஞ்சியும் வாகையும் தும்பையும் நிலப் பிரச்சனையின் வெவ்வேறு வடிவங்கள்தானே! பறம்பு மலையைப் பாரி இழந்ததும், கடையேழு வள்ளல்களின் வீழ்ச்சியும் நிலமிழப்புத் தானே! ஏன்? இந்தியச் சுதந்திரத்திற்கு முந்தைய வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டும் பல்வேறு மொழிகளில் உள்ள இந்திய நாவல்களில், கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி விவசாய நிலங்களை விற்றுவிட்டு வெளியேறும் எத்தனை மக்களின் கண்ணீரை நாம் வாசித்திருக்கிறோம்?

நிலத்தை இழப்பதும் மண்ணை இழப்பதும், வாழ்வையும் சுதந்திரத்தையும் இழப்பதாகும். இழந்த குமரி நிலம் பற்றி, பஃறுளி ஆறு பற்றி, கபாடபுரம் பற்றியெல்லாம் தமிழர்களின் நினைவுகளெங்கும் ஓடும் வலியும் குருதியும் கலந்த அந்தப் பண்பாட்டு எச்சங்களை மறந்துவிட்டு எப்படி வாழ்வதாம்? அதனால் தான் ‘நிலமிழப்பு’ என்பதை ‘அடையாள இழப்பாக’வே சமூகவியலாளர்கள் கண்டுரைக்கிறார்கள்.

தஞ்சை டெல்டாவிலிருந்து பிராமணர்கள் இந்தியப் பெருநகரங்களுக்கு மேலும் பொருளாதார வசதி தேடி நகர்ந்த குடிப்பெயர்வின் கதைகளையே தி.ஜானகிராமன் நவீனப் புனைவுகளாக எழுதியுள்ளார் என்றும்கூட நாம் வாசிக்கலாம்தானே! திருநெல்வேலியின் தொப்புள் கொடி மிச்சங்களையே சென்னையின் வீதிகளில் தேடிக் கதைகளாக்கினார் புதுமைப்பித்தன் என்றும் நிலவியல் விமர்சனம் செய்யலாம்தானே! சென்னையின் சேரியை எவ்வளவு ரத்தமும் சதையுமாகத் தம் கதைகளில் ஜெயகாந்தன் புனைவுப்படுத்தியுள்ளார் என்றும் வியக்கலாம்தானே!

நிலம் என்பது நினைவுதான். என்னதான் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வசதி வாய்ப்புகள் கருதிக் குடிபெயர்ந்திருந்தாலும், என்றாவது ஒருநாள் ஒருமுறையேனும் ஊர் வந்து மீளும் ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்’ பற்றிய கனவுகளோடுதானே, மனிதர்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

ஈழத்திலிருந்து வெளியேறி உலகப் பந்தெங்கும் இன்று உழன்று கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நினைவுகளிலிருந்து யாழ்ப்பாணமும் கொழும்பும் இன்னும் எத்தனை தலைமுறைகளானாலும் நீங்கி விடுமா என்ன? வாய்ப்பேயில்லை என்பதுதான் உண்மை.
பாலஸ்தீனமும் இஸ்ரேலும் வியட்நாமும் காஷ்மீரும்கூட நமக்குக் காட்டுவது இதைத்தான். நிலம் என்பது வாழ்வு; நிலம் என்பது உயிர்; நிலம் என்பது நினைவு; நிலம் என்பது வரலாறு; நிலம் என்பது உரிமை; நிலம் என்பது சுதந்திரம்; நிலம் என்பதே புனைவு!


கண்டராதித்தன்

மனித குலத்தின் பல்வகையான வளர்ச்சிகளுக்கும், செழுமைகளுக்கும் அவன் வாழும் நிலமே ஆதாரம். ஒரு குழுவின் அல்லது சமூகத்தின் கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், வழிபாடு, உடை, உணவு உள்ளிட்டவைகளை வரையறுக்கும் அல்லது அடையாளப்படுத்தும் குறியீடாக நிலம் உள்ளது. தமிழர் வாழ்வியல் மரபிலும், இலக்கியத்திலும் நிலம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் கலாச்சாரச் செழுமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிஞ்சிப் பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர்
நீனிற முல்லைப் பஃறிணை நுவலக்
கானக்கோழி கதிர் குத்த
மனைக்கோழி தினைக் கவர
வரை மந்தி கழிமூழ்க,
கழி நாரை வரை யிறுப்பத்
தன் வைப்பினா னாடு குழிஇ
மண் மருங்கினான் மறுவன்றி
ஒரு குடையா னென்று கூறப்
பெரி தாண்டப் பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த,திறனறி செங்கோல்
அன்னோன் வாழி வென்வேற் குருசில்

– என அழகிய நடையில் நிலக்காட்சியைச் சொல்கிறது பொருநராற்றுப்படை.

நவீன இலக்கியப் பரப்பில் போதுமான அளவிற்கு நிலம் பல்வேறு வகையிலும் கையாளப்பட்டுள்ளது. பல செவ்வியல் நாவல்களை உதாரணமாகச் சொல்லலாம், சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்த அதீன் பந்த்யோபாத்யாய’வின் நீலகண்டப் பறவையைத் தேடி நாவல் வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் மாவட்டத்தில கங்கைக்கரையில் அமைந்த சிறிய கிராம வாழ்வின் கழிமுக நிலங்கள், ஏரிக்கரைகள், விவசாய நிலங்கள் போன்றவை மிக அற்புதமாகச் சித்தரிக்கப்படிருக்கும்.

கரிசல் கிராம வாழ்க்கையைச் சித்தரித்த கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள், நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நமது அண்டை மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் சித்திரங்களைக் கூறியதில் முதன்மையானதாக இருந்தது. அசதாவின் மொழிபெயர்ப்பில் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் நாவல் போன்றவை தூரத்தேச நிலத்தினைக் காட்சிப்படுத்தியவை, சமீபத்தில் கன்னட மூலத்தில் இருந்து கே.நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வந்த நாவலான நேமிச்சந்திராவின் யாத்வஷேம், இதேபோன்று கற்பனையான நிலத்தைக் காட்சிப்படுத்திய ஜெயமோகனின் விஷ்ணுபுரம், வடதமிழக வாழ்வைச்சொல்லும் இமயத்தின் கோவேறு கழுதைகள், ஜீ.முருகனின் மின்மினிகளின் கனவுக்காலம் என நவீன இலக்கியத்தில் தமிழ்ப் படைப்புகளிலும், மொழிபெயர்ப்புகளின் வழியாகவும் நிலம் பல்வேறு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் மற்ற வடிவங்களைவிட நவீனச் சிறுகதை மற்றும் நாவல்களில் போதிய அளவிற்கு நிலம் அதன் அழகியல் தன்மையோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது உலகெங்கும் குடிபெயர்ந்து வரும் மக்களிடமிருந்தும் ஆக்கபூர்வமான படைப்புகள் வெளிவருவதும், அது உலக வரைபடத்தின் நிலவியல் சார்ந்த காட்சிகளைத் தர்க்க ரீதியிலும், உணர்வுப் பூர்வமாகவும் புதியதொன்றாகக் காட்டுகின்றது.

சைபீரியாவின் இர்குட்ஸ் பகுதியில் வசிப்பவனும், அமேசான் மழைக்காடுகளில் வசிப்பவனும், சீன-வியட்நாம் எல்லையின் யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மனிதர்களும் நிலத்தோடு பிணைந்திருப்பவர்கள்தான். வரலாற்றிற்கு முந்தைய கால மனிதனின் மனமும் நிலத்துடன் பிணைந்தே வந்திருப்பதை உலகெங்கும் உள்ள தொல்லியல் எச்சங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. செத்தவரை, கீழ்வாலை, ஆலம்பாடி, உடையாநத்தம் குகை மற்றும் பாறை ஓவியங்களைக் காணப்போகும்போதெல்லாம் ஒருவித மலர்ச்சியான உணர்வுகளெழும். மூவாயிரம் ஆண்டுகாலத்திற்கு முந்தைய மனிதன் தான் வாழும் நிலத்தை, அந்தச் சின்னஞ்சிறு கலாச்சாரத்தை, பண்பாட்டை, தன்னுடன் வசிக்கும் விலங்குகளைச் செஞ்சாந்து வண்ண ஓவியமாகப் படைத்திருக்கிறான், அந்த மனிதன் எந்தவிதமான வாஞ்சையோடும், நம்பிக்கைகளோடும் தன் நிலத்தைச் செஞ்சாந்து வண்ணத்தைக் குழைத்துத் தீட்டியிருப்பான், விநோதம்தான்.
வல்லாதிக்க அரசுகள் நிலத்தின் பால் கொண்டுள்ள ஈடுபாடு இன்றளவும் மனித குலத்தின் நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலேயே உள்ளது. உலகெங்கும் இருந்த தொல்குடிகள் தங்கள் குலத்தை, மொழியை, அடையாளத்தை நிலத்தின் வழியாகவே இழந்ததாக வரலாறு இருக்கிறது. மக்களுக்காகத் தான் நாம் நிலத்தை நேசிக்கின்றோம். ஆனால் அரசுகள் அதைப் பொருட்படுத்துவதில்லை.


உமா சுப்பிரமணியம்

மனிதனால் உருவாக்கப்படாத நிலம் என்பது இங்கே மனித வாழ்விற்கு மிக முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. மனிதன் உருவாக்காத நிலத்தை அசையாச் சொத்தாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அவனுக்கு உரியதாகப் பெறுவது என்பது பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. நிலம் உடையவர்கள் முதலாளியாகவும் அந்த நிலத்திலே கூலிக்கு வேலை செய்பவர்கள் ஆயுள் முழுக்க அன்றாட வாழ்க்கைக்குப் போராடுபவர்களாகவும் தலைமுறை தலைமுறையாக வாழ்வதைக் காண முடிகிறது. நிலங்களை அவர்களின் சொத்தாகத் தங்கள் வாரிசுகளுக்குக் கைமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். நிலம் என்பது இந்த நிலமிசை வாழ் மக்களின் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை நிர்மாணிக்கின்ற நியாயத் தராசுகளாக மிராசுகளால் வழி வழியாகக் கையாளப்பட்டு இன்றளவும் அப்படியே இருக்கிறது.

இந்த இருபதாம் நூற்றாண்டில் நிலம் என்பது எவ்வாறு இருக்கிறது என்பதை நான் ஒரு சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன். எனது நிலம் நிலம் அல்ல, நிலத்தின் மீது கட்டப்பட்ட கட்டிடத்தின் வாயிலாகப் பிடித்து வைக்கப்பட்ட”வெளி” தான் இன்று நிலமாக இருக்கிறது. பூமியில் வாழ்கிறேன் என்று சொல்லிக்கொண்டு மின்தூக்கி உதவியோடு ஆகாயத்தில்தான் வாழ்கிறேன். மக்கள்தொகையின் காரணமாகவும் பெரு நகரங்களில் வாழவந்த மக்களாலும் இதுபோன்ற பத்து மாடி பதினாறு மாடி அடுக்குகளில் வாழ்கிற போது என் நிலம் நிலம் அற்றது என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. நகரத்தின் வெளிப்புறத்திலும் மேலும் பல ஊர்களில் நிலங்களில் புற்கள் மட்டுமே வாழுகின்றன. மனிதர்கள் பயன்படுத்தாத வெறுமையாகப் போட்டு வைத்த நிலப்பகுதிகளைப் பார்த்தபடிப் பிழைக்க வந்த ஊரிலிருந்து பிறந்த ஊருக்குப் பேருந்துகளில் பயணிக்கும் போது அந்த நிலப்பகுதிகளில் அவசரமாகக் கற்பனையில் ஒரு வீடு கட்டி வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடி எல்லாம் வளர்த்து வாழ்ந்து விட ஏங்கும் உள்ளம். இருபதாம் நூற்றாண்டில் நிலம் என்பது அந்தரத்தையும் (வெளி) சேர்த்துதான் நிலம் என்று சொல்லிக் கொள்கிறோம்.

ஆதியில் மனிதன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடத் துவங்கி பிறகு நிலங்களுக்காக மக்களை (போர்) வேட்டையாடத் தொடங்கினான். தனது நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொள்வதற்குத் தனது மக்களைப் பலியிடத் துணிந்தான்.நிலப்பரப்புதான் (நிலப்பிரபுக்கள்) அவனை ஆளுமையானவனாக தலைவனாக (அரசனாக) நிறுவுகிறது. சங்க இலக்கியங்களில் ஐவகை நிலங்களை அறிகிறோம். நிலம் சார்ந்த பண்பாடு, தொழில், ஒழுக்கம் என்று நிலவாரியாகப் பிரிக்கப்பட்டு வாழ்ந்ததைப் படித்து அறிந்து கொண்டோம்.


முத்துராசா குமார்

மனநிலையாக மட்டுமின்றி நிலவியலாகவும் சாதியப் படிநிலை வகுப்பட்டுள்ள நமது தமிழ்ச்சூழலில் இயற்கையின் ஒரு அங்கம், வாழிடம் என நிலத்தை எளிமையாகச் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. சாதியச் சமூகக் கட்டமைப்புடன் சேர்ந்து அதிகார உடைமை, தானம், சடங்கியல், உணர்வு, உழைப்பு, பொருளாதாரத்தின் பிணைப்புக் கூறுதான் நிலம்.

நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களின் ‘தன்னை அழிப்பதும் அரசியல்தான்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் (விகடன் தடம் இதழ் 2018) ‘நவகண்ட சிற்பம்’ பற்றி விரிவாக எழுதியிருப்பார். ‘தன்னைப் பலிகொடுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவதை அன்றைய ஆட்சியாளர்கள் உயர்ந்த பண்பாகக் கருதியதால் சிற்பமாக வடித்திருக்கின்றனர்’ என்று அக்கட்டுரையில் குறிப்பிடும் அ.கா.பெருமாள் ‘தலைவனுக்காகத் தன்னைப் பலிகொடுப்பதும் பலியானவர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டியாக நிலங்கள் கொடுப்பதும் பற்றிய விவரங்கள் கல்வெட்டுகளில் உள்ளன. மேலும் துர்கா தேவிக்கோ அரசனுக்கோ தன்னைப் பலிகொடுக்கும் நிகழ்வுகளைக் காட்டும் நவகண்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன, உடம்பின் 9 பகுதித் தசைகளை அரிந்து நேர்ச்சையைத் தீர்க்கும் சடங்கு கி.பி 7-ம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன’ என்று பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தின் பல இடங்கள், கோயில்களில் இந்த `நவகண்ட சிற்பங்கள்’ இன்றும் இருக்கின்றதெனப் பதிவு செய்பவர், தென்கரை மூலநாதசுவாமி கோயிலிலும் ஒரு நவகண்ட சிற்பம் உள்ளதெனக் குறிப்பிட்டிருந்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரை கிராமம்தான் எனது சொந்த ஊர். நீண்ட தேடலுக்குப் பிறகு நவகண்ட சிற்பத்தைக் கண்டுபிடித்தேன். ‘உதிரப்பட்டி’ நிலத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மா.சந்திரமூர்த்தி மற்றும் வெ.வேதாசலம் அவர்கள் சேர்ந்து எழுதிய ‘பராக்கிரமபாண்டியபுரம்’ என்னும் நூலினை முன்வைத்து (கலைத்தாய் பதிப்பகம் 2002) நவகண்ட சிற்பம் பற்றிய தென்கரையின் வாய்மொழிக் கதைகளைத் திரட்டி ஊர் மக்கள், கோயில் நிர்வாகம், அ.கா.பெருமாள், கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன், எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் ஆகியோரிடம் உரையாடி ‘உடம்பில் 9 தசைகளை அரிந்து நவகண்ட சிற்பச் சடங்கு! – சோழவந்தான் சிற்பப் பின்னணி’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். விகடன் இணையதளத்தில் வெளிவந்த அக்கட்டுரையில் ‘மன்னனுக்காகவோ, ஊருக்காகவோ அல்லது தடைபட்ட கோயில் பணிகள் முழுமையாக நிறைவேறவோ தனது உடம்பில் தலை உள்ளிட்ட ஒன்பது பகுதிகளாக வெட்டிக்கொண்ட நவகண்டச் செயல்கள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. அதற்கு கல்வெட்டு சான்றுகளும் நம்மிடம் இருக்கின்றன. இறந்த வீரனுக்குத் தரப்படும் உதிரப்பட்டி நிலங்களை நேத்தோர்பட்டி, ரத்தக்காணி எனவும் குறிப்பிடலாமென்று மயிலை சீனி.வேங்கடசாமி சொல்கிறார். வெவ்வேறு அதிகார வளர்ச்சிகளில் அந்த நிலங்களும் அது சார்ந்த தகவல்களும் கைமாறிப் போய்விட்டன. வட மாவட்டங்களில் அரகண்டநல்லூர் போன்ற சில இடங்களில் நவகண்டச் சிற்பங்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர்’ என கோ.செங்குட்டுவன் பகிர்ந்திருந்தார்.

இதுதவிர, ஆய்வறிஞர் பொ.வேல்சாமி அவர்களின் ‘கோவில் – நிலம் – சாதி’ நூல் (காலச்சுவடு வெளியீடு) சங்க இலக்கியம், மன்னராட்சி, கல்வெட்டு, செப்பேடு எனப் பல நுட்பமான ஆதாரங்களோடு பன்னெடுங்காலத்துக்கு முன்பான ‘நிலம்’ பற்றிய வரலாற்றுப் புரிதலை அடர்த்தியாக முன்வைக்கிறது. எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் அவர்களின் ‘தலித்துகளும் நிலமும்’ நூல் (மணற்கேனி வெளியீடு) ஆங்கிலேயர்களின் காலம், ஜமீன்தாரி, மிராசு முறை, பஞ்சமி நிலம் என விரிவான புள்ளிவிவரத் தரவுகள், அறிக்கைகளோடு நிலத்துக்கும் தலித்துகளுக்குமான உறவினைச் சமகால வரலாற்றோடு தெளிவாக முன்வைக்கிறது.

இவற்றின் வழியே பார்க்கையில் ‘நிலம்’ என்பது சாதிய, ஆதிக்கக் குறியீடாக, ஆதிக்கத்தைத் தகர்க்கும் காரணியாக, உரிமை கோரலாக, போராட்ட வடிவாக, விடுதலை அரசியலாக வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகிறது.

உதாரணத்திற்கு ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிக்குள் தொல்லியலாய் வாழும் நெற்தோல் குறித்து, நிலம் பிடுங்கப்பட்டுச் சொந்த மரக்கா இல்லாத மனிதனால் பெருமையும் சந்தோசமும் கொள்ள முடியாததை நவீன இலக்கிய வெளியில் அதே ‘நிலம்’ கொண்டு சொல்லிட நினைவுச்சேகரம் என்னை உந்துகிறது. கீழடியில் அகழப்பட்ட 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியலைக் கொண்டு நிலத்துக்கு மேலே உக்கிரமாய் ஆக்கிரமித்திருக்கும் சாதிய உளவியல்களை களைந்தெறிகையில் நினைவுச் சேகரத்தின் நீட்சியாக உணர்கிறேன். 


நிலமே வாழ்க்கை – கோ.ரகுபதி

கழுதையும் பன்றியும் ஓடியாடிக் காதலிக்கவும், காட்டெருமையும் கருநாகமும் காட்டைக் காக்கவும், காக்கையும் நாரையும் சிறகடிக்கவும், மல்லியும் பிச்சுப் பூக்களும் நறுமணம் வீசவும், வேம்பும் ஆலும் பசுமையாக்கவும், குளமும் ஆறும் தாகம் தணிக்கவும் இன்னபிற பொருட்கள் அவையவைகளின் இயல்பான போக்கில் கோர்வையாய் எழுப்பும் ஒலிகளில் நிலமெங்கும் இசையாகும்; இரையாகும்; இறையாகும்; இச்சையுமாகும்! கணக்கிட இயலாத சிறு பெரு பொருட்கள் அலைந்தும் திரிந்தும் ஓடியாடியும் கொண்டாடும் பொதுப் பெருவெளியே நிலம்! நிலம், எவராலும் ஒருபோதும் உற்பத்தி செய்ய இயலாததும், எல்லாவற்றையும் உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்யவுமான ஒரு இயற்கைப் பொருள். இப்புவிப் பரப்பில் வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் எவ்வுயிரிகளும் நிலத்தில் தனியுடமையைக் கோரவில்லை; தானிருந்த இடத்தில் வேறொன்று அமர்வதை எதிர்க்கவில்லை. எங்கெங்கோ தோன்றியவை எங்கெங்கோ இடம்பெயர்ந்தன! ஊர்வன, பறப்பன, நடப்பன எனச் சகலமும் இடம்பெயர்ந்து ஒன்று மற்றொன்றைச் சந்தித்து சமபந்தியும், சம்பந்தியுமாகின. இடம்விட்டு இடம்பெயர்ந்து இயங்கிக் கொண்டிருந்தபோது அவை தெளிந்த நீரோடைபோல இருந்தன. ஓரிடத்திலேயே நிலைத்துத் தங்கியபோது தேக்கநிலையால் சாக்கடையாகின்ற; தங்கியவர்கள் மட்டுமல்ல நிலமும்கூட.

ஓரிடத்திலேயே நிலையாகத் தங்காமல் இடம்விட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்த காலங்களில் பூர்வக் குடிகளும், சமவெளியில் வசிக்கின்ற ஆதிதிராவிடர்களிடமும் நிலத்தில் தனியுரிமையைக் கோரும் எண்ணம் தோன்றவில்லை. பொதுவுரிமையும் பொதுவுடைமையும் இயல்பிலேயே அவர்களிடம் குடிகொண்டுள்ளன. இதனாலேயே அவர்களிடம் பாலினப் பேதமற்று, ஆணாதிக்கமற்றுச் சமத்துவமாய் அன்பும் உண்மையும், ஒழுக்கமும் அறமும், இறையும் இரையும், இசையும் இச்சையும் இயல்பாய் ஆர்ப்பரிக்கின்றன. அவர்களிடம் இயல்பாக இருக்கின்ற இணங்கினால் பிணைவதும், பிணங்கினால் பிரிவதும் நிலத்தில் தனியுடைமையின்மையின் நேர்மறையான விளைவாகும். இவர்களுக்கு நேர்மாறாக, நிலத்தில் தனியுரிமை என்பது வன்மமாகும். அது நிலத்தின் மீதான வன்முறையும்கூட. இதுதான் பொய், பித்தாலட்டம், ஊழல் இன்னபிற நேர்மையற்ற செயல்களின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கிறது. காதலும் காமமும்கூட ஆணாதிக்கமாக, பண்டமாக இருக்கின்றன.

ஆர்ய ஸநாதநப் படிநிலை ஜாதியக் கட்டமைப்பு ஆதிதிராவிடர்களுக்குக் குடியிருக்கக்கூட நில உரிமையை மறுத்தது; இம்மக்களுக்கும் மண்ணுக்குமான உறவை அறுத்தது. இச்செயல்களுக்கு மன்னராட்சிகளும் துணைநின்றன. சிற்றரசர்களும் பிறரின் ஆட்சி நிலப்பரப்பைக் கைப்பற்றிப் பேரரசுகளாக உருவாகினர். நிலத்தில் தனியுரிமையாலும் நிலத்தை ஆக்கிரமிக்க நிகழ்த்திய மன்னர்களின் வாள்களாலும் கொட்டிய இரத்தக் கறை நிலமெங்கும் படிந்துள்ளது. வரையறுக்கப்பட்ட நில எல்லைகளால் குண்டுமழையும் மரண ஓலமும் உலகெங்கும் ஓயாது ஊளையிடுகிறது. நிலம் பொருளாதாரமாகவும் அதிகாரமாகவும் நிலமின்மை வறுமையாகவும் அடிமையாகவும் உருமாறியது.
நிலத்தில் தனியுரிமையால், பணக்கார வில்லாவாசிகள், 1BHK, 2BHK, 3BHK- என அந்தரத்தில் தொங்குவாசிகள், 00-BHK நிலையில் நடைமேடை வாசிகள், மேம்பாலத்துவாசிகள், சுவரோரவாசிகள் ஆகிய பிளவுகள் உருவாகின. தேசம், ஜாதி, மொழி, மதம் என்ற ஒற்றைப் போர்வையால் இப்பிளவுகளை மூடி மறைக்கிறோம். பறவைகளுக்குக் கூடும், விலங்குகளுக்குக் குகையும் இருக்கின்றபோது வீடற்று வீதிகளில் உறங்கும் மனிதனின் அவலத்தைக் கண்டு கழுதையும் பன்றியும் வருந்துகின்றன. எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நாகரீக மனிதர்களும் அதிகாரமும் அவர்களைக் கடந்து செல்கின்றன.

நான் 1999-ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் முடித்ததும் ஒரு தமிழ் நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். ஒரு நள்ளிரவில் செய்திச் சேகரிப்பை முடித்தபின் நாளிதழ் அலுவலகத்துக்கு நடந்து சென்றேன். சேலம் பழைய பேருந்து நிலையத்தைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக நடைமேடைவாசிகள் ஒரு போர்வைக்குள் இரு உடல்களின் அசைவுகளைக் கண்டேன். குப்பென்று உடல் வேர்த்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாகினேன். இடதுசாரி இயக்கமான இந்திய மாணவர் சங்கத்தில் முனைப்புடன் செயல்பட்டு முதுகலைப் படிப்பை முடித்ததும் நிருபராகப் பணியாற்றியதால் அப்போது “நிலம் மனிதர்களின் உரிமை” என என் மனதுக்குள்ளேயே முழங்கிக் கொண்டே நடந்தேன். கால் நூற்றாண்டைக் கடந்தும்கூட அக்குற்ற உணர்விலிருந்து விடுபடவில்லை. அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்க வேண்டுமென்ற எண்ணம் அப்போது துளிர்விட்டது இன்னும் நீருபூத்த நெருப்பாய் நீடிக்கிறது. அவ்வுடல்கள் பூர்வக் குடிகளாகவோ அல்லது ஆதிதிராவிடர்களாகவோ இருக்கமுடியும். இந்த அவலத்தை உருவாக்கியது நிலத்தில் தனியுரிமைதானே.

ஆதிதிராவிடர் இயக்கங்கள் குடியிருக்க நிலம் வேண்டி பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டன. மாநாடுகளில் தீர்மானங்களாகவும், சட்டமன்றத்தில் கேள்விகளாகவும் அக்குரல்கள் எதிரொலித்தன. இவை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் கொட்டிக் கிடக்கின்றன; தொட்டுத் தழுவத்தான் ஆட்கள் குறைவு. பிரிட்டிஷ் அரசு நிலமெடுக்கும் முயற்சியை முன்னெடுத்தது. நிலவுடைமையாளர்களோ குடியிருக்க நிலம் கொடுக்க மறுத்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் 1919 பிப்ரவரி 21 அன்று அரசுக்கு அனுப்பிய கடிதத்தைப் பார்த்தால் இதை விளங்கிக் கொள்ளலாம். சுதந்திர இந்தியாவிலும் மாநில அரசுகளிடம் வீட்டுமனை கேட்டு முறையிடுகின்றனர்; நிலவுரிமையாளர்கள் எதிர்ப்பதும் நிகழ்கின்றன. விளை நிலத்தைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விலை நிலமாக்கி விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்ட இக்காலத்தில் குடியிருக்க நிலம் என்பது பெருங் கனவாக இருக்கிறது. சொந்த வீடு என்பதே இலட்சியமாகிவிட்ட வாழ்க்கையில், வாழ்க்கை என்பது அதன் பொருளை இழந்துவிட்டது. குடியிருக்கச் சொந்த நிலமும் வீடும் என்பதே மனிதனின் லட்சியமாக மாறியிருப்பது மாபெரும் அவமானம்! இச்சிக்கல்களைச் சிலர் எழுத்துகளில் பதிந்துள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் மறுக்கும் ஜாதி திராவிடர்களின் வன்மத்தை அரிதாக ஒருசில படைப்பாளிகள் நவீன இலக்கியங்களில் சித்தரித்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் புதுமைப்பித்தன். இவருடைய “நாசகாரக் கும்பல்” சிறுகதை மணிக்கொடி, 01.11.1937-ஆம் ஆண்டு இதழில் வெளியானது. ஆதிமருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விளை நிலம் வாங்குவதைத் தடுக்கும் ஜாதி திராவிடரின் வன்மம்தான் இக்கதையின் கரு. இக்கதையை 2005-ஆம் ஆண்டு படித்தேன். இதுதான் என்னைக் கவர்ந்த முதல் படைப்பிலக்கியம். ஆதிமருத்துவர் சமூகத்தை ஆராய்வதற்கும் தூண்டியதும் இதுவே. படைப்பிலக்கியத்தில் நிலத்தைப் பேசியதற்காகப் புதுமைப்பித்தனைக் கொண்டாட வேண்டும். இதற்குப் பின்னர், அழகியபெரியவனின் “தகப்பன் கொடி” நிலவுரிமையைச் சித்தரித்த முக்கியப் படைப்பாகும். பஞ்சமி நிலத்தையும் அதற்கான போராட்டத்தையும் முறையாக ஆய்வு மேற்கொண்ட ஜெராம் சாம்ராஜின் ஆய்வேடு மிகவும் முக்கியமானது. பஞ்சமி நிலவுரிமைப் போராட்டத்தையும் அதில் இறந்த காரணை ஏழுமலை, ஜான்தாமஸ் குறித்தும் படைப்பிலக்கியங்கள் உருவாக்கப்பட வேண்டும். நிலத்தில் நீரின் வழித்தடத்தையும் தங்குமிடத்தையும் ஆக்கிரமித்ததால் விளையும் வெள்ளத்தையும் இலக்கியமாக்க வேண்டும். 1920களில் வெளியான சில வெள்ளச் சிந்துகளில் இவை பேசப்பட்டுள்ளன. திரைப்படங்களில் பா.இரஞ்சித்தின் “காலா” நிலவுரிமையைப் பேசிய முக்கியப் படமாகும். என் உடலும் உள்ளமும் தளர்கிறபோதெல்லாம் முறுக்கேற்றும் பாடல்களின் பட்டியலில் காலாவிலுள்ள “நிலமே எங்கள் உரிமை” பாடலும் இடம்பெற்றுள்ளது.

நிலம் என்பது வாழ்க்கை. பூர்வக் குடிகளின் பாதங்களும் புவிப் பரப்பில் சுதந்திரமாகப் பற்றிப் படரும் நாள் எந்நாளோ அந்நாளே நிலம் அதிகாரம் என்ற குறியீட்டை இழக்கும்!! பறவைகளுக்குக் கூடுகளைப் போல, விலங்குகளுக்குக் குகைகளைப் போல், மனிதர்களுக்கும் வீடுகளாகும்; நிலத்தில் தனியுரிமை ஒழிந்தால் நிலமும் செழுமையாகும்! பொய்யும் புரட்டுகளும் மறையும். உண்மையும் அறமும் விளையும். பிழைக்கும் நிலையிலிருந்து வாழும் நிலை உருவாகும். நிலத்தில் பொதுவுரிமையிலிருந்தும் பொதுவுடைமையிலிருந்துமே மகிழ்ச்சி தோன்றும். மனிதர்களின் மாண்பைக் கண்டு பன்றியும் கழுதையும் அகமகிழும்.


ம.கண்ணம்மாள்

மனித உடல்கள் வாழுமிடம் நிலம் எனப்படும். பழந்தமிழர்கள் அதனைத் திணை அடிப்படையில் பகுத்தனர். மாந்தரினம் மட்டுமன்றி மண், அதில்வாழும் பற்பல உயிர்களுக்கும் வரையறை செய்தது தொல்காப்பியம். வாழ்தற்குரிய முதற்பொருள் நிலம். எங்கெல்லாம் மனித உடல்கள் வாழ்வதற்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றார்களோ, அங்கெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் ‘நிலம்’ என்ற பெயர்ச்சொல் அமர்ந்து கொள்கின்றது. ஒரு மனிதஉடலும், ஒரு நிலமும் பிரிக்கவியலாத சேர்க்கைத் தன்மையைக் கொண்டவை. நிலத்துடன் தான் இவ்வுடல்கள் எரிந்து, புதைந்து போகின்றன. வாழ்க்கையின் காலக்கட்டங்கள் நிலத்துடனான கட்டமைப்புகள். அதை மீறல் செய்யக் கிஞ்சித்தும் இயலாது. ஒரு மனித உடலை நினைவுகளை எங்கிலுமுள்ள நிலம் மட்டுமே அடையாளப்படுத்தும். பரந்துகிடக்கும் நிலப்பரப்புதான் சமூக உயிரியாக மாற்றம் கொள்கின்றது.

நிலம் – மனித உடல்களின் வரலாறு. ஒரு சமூகத்தின், சமூகச் செயல் என்பது, வாழ்க்கை மற்றும் அதன் தேவையான இன்ன பிற கருதுகோள்களை உற்பத்திச் செய்ய முயல வேண்டும். அதற்கானதொரு பெருஞ்செயற்பாட்டினை ‘நிலம்’ இயற்கையாகக் கொண்டிலங்குகின்றது. இதன் வழியாகவே மனித உடல்களின் உறவுகள், மன உணர்வுகளின் ஆக்கங்கள், சிந்திக்கும் திறன், வாழ்க்கைச் சூழல், சமூகவியல் சார்ந்த நோக்குகளை அறிய ஏதுவாகின்றது. இப்பரந்த வெளியில் வாழும் உயிர்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவதாகக் கேள்விகள் எழுந்துகொண்டேயுள்ளன. போர்வாதம் பல முரண்களைத் தந்து கொண்டேயுள்ளது. வரலாற்றில் நிலம் அரசு உற்பத்தி, உணவு, உடை, உழைப்பு,  போன்றவற்றை ஒரு வரைபடமாக மனித உடல்களுக்குள் திணித்துத் தருகின்றது. ஒரு நிலத்திலிருந்து ஒரு உடல் வெளியேறலாம். ஆனால் உடலிலிருந்து நிலத்தை வெளியேற்ற முடியாது. இதனடிப்படையில் சில விவரணைகள் தேவையாகின்றன.

அந்தந்தக் காலத்திற்கேற்ப வாழும் மனித உடல்கள் அதிலிருந்து ஆக்கப் பூர்வமான அறிவியலின் பிரமாண்டத்தோடு நிலச் சூழலை, சமூகத் தொடர்புகளுக் கேற்றவாறு காலத்திற்கேற்ப வளர்ச்சிப்போக்கைக் கையகக் கொள்வதைக் கூறலாம்.

ஒவ்வொரு நிலமும் ஒரு வரலாற்றுடைத்து. மானிடக் கலாச்சாரத்திற்கும், இயற்கைச் சூழலுக்கேற்பப் பல வகைமைகளில்  பொருத்தியும், மாறுபாட்டோடும்  நிலம் தம்மை அறிவித்துக் கொள்கின்றது. ஒரு நிலப் பண்பாடு எல்லாவிதமான அடையாளங்களுக்கும், மொழியின் துணையோடு வந்துவிடும். இரண்டாயிரம் ஆண்டுகளில் நிலவியல் அமைப்பு, தட்பவெப்ப நிலைகளில் மாற்றமேற்பட்ட நிலத்தோற்றமே பதிவு செய்யப்பட்டு, செய்யப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. நிலம் மொழியின்  கூறாகவுமுள்ளது. நிலமே மனித உடல்களின் இணக்கமான இருப்பாக இருந்துகொண்டு வருகின்றது. சமூகச் சூழலில் உலகத்தைப் பொதுமைப்படுத்திப் பார்க்க விழையும் ஒரு சூழலில் நிலமானது அதிகாரத்துவம், மேட்டிமைத்தனம் போன்ற எதிர்நிலைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வரலாற்றில் பெரும் பங்களிப்புச் செய்து கொண்டுள்ளது. படையெடுப்புகள், போதாமைகள், அநீதிகள் இருந்த நிலத்திலிருந்து பல்லாற்றான மனித உடல்கள் இடப்பெயர்வு செய்ததைக் காலம் கண்ணுற்றுள்ளதை மறுதலிக்க வாய்ப்பில்லை.

நடப்பியலில் நிலைத்த, நிலையற்ற நகர்வில் முதன்மையான செயல்பாடு இருப்பு நோக்கி இடம் பெயர்தல் அல்லது தள்ளப்படுதல். மனித உடல்களின் இடப்பெயர்வுச் சூழல் பொதிந்து அனைத்தையும் தாண்டிய ஒரு கடந்து போதலைக் காணவேண்டியுள்ளது. எத்தனையோ போராட்டங்கள் மிக்க இச்சூழல் கூர்மையான வாழ்விற்கு நிலத்தைக் கைக்காட்டினாலும் அரசியல், பண்பாட்டுச் சார்ந்த பிற உபகரணங்கள் நிலத்தையே வரலாற்றில் வெகுவாக நினைவு கொள்கின்றது. 


ம.மதிவண்ணன்

நிலம் என்பது எப்போதும் செல்லுபடி ஆகின்ற செலாவணி என்று பொதுவாகச் சொல்வார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை நிலமென்பது குடியுரிமையின் பரிசு. ஆனால், குடியுரிமை என்பது எல்லாருக்குமானதாய்க் குடியரசுக்கு முந்தைய காலங்களில் இங்கு இருந்ததில்லை.

இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை உழைப்பு என்பது தீட்டுக்குரியது. அந்தத் தீட்டிலிருந்து தம்மை விலக்கிக் கொண்ட குடிகளுக்கே நிலவுரிமை வழங்கப்பட்டிருந்தது. எல்லாக் காலங்களிலும் நிலவுரிமை பெற்றிருந்த வர்க்கமாய், சாதியாய் அமைந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே! அவர்கள் நிலம் வைத்திருந்தது மட்டுமல்லாமல், அதற்குரிய எந்த வரிகளையும் செலுத்தத் தேவையில்லை. மாறாகப் பார்ப்பனரல்லாத வெகுமக்கள் இறை செலுத்த முடியாமல் குடி ஓடிப்போகிற செய்திகள் தமிழ்வரலாற்றில் நெடுகப் பதிவாகி இருக்கின்றன.

கடின உழைப்பைக் கடமையாய்க் கொண்டிருந்த சேவைச்சாதிகள், பிழைப்புரிமை மட்டுமே பெற்றிருந்தன. வண்ணார்களாகிய உழைக்கும் மக்கள் துணி துவைக்கிற கல்லுக்கும் வண்ணார் கல்காசு எனக் கறாராக வரி தண்டப்பட்டது. ஆடு, மாடுகள் மேயும் புல்லுக்கும் புல்வரி வாங்கப்பட்டது. உழைக்கும் மக்களை ஆடு, மாடு போல உடைமைகளாய் வைத்திருந்த சமூகம் நமது நேற்றைய பழஞ்சமூகம்.

மேற்சொன்ன சேவைச் சாதிகளுக்குத் துண்டு துக்காணி நிலம் இருந்திருக்கிறது. அந்நிலம் விடுதலைக்கானதாய், சுயமரியாதைக்கானதாய் இருந்தது என்று சொல்லமுடியவில்லை. அதுவும்கூடச் சுமந்து செல்ல வேண்டிய இன்னொரு சிலுவையாய் இருந்தது.

குடியரசு, சனநாயகம் என்கிற மேற்கத்திய விழுமியங்களை நமது நாடு தழுவிக் கொண்டதன் பின்னரே நிலம் தனது முழுப்பரிமாணத்தை அடைந்தது. பார்ப்பனர்கள் கையில் இருந்த நிலம் முழுமையும் செல்லுபடி ஆவதாய் இருந்தது. இடைச்சாதிகளின் நிலம் பாதி செல்லுபடி ஆனது. கடின உழைப்பை ஊதியமின்றி வாங்கி இரத்தம் உறிஞ்சும் இன்னொரு ஏற்பாடாகவே சேவைச்சாதிகளின் கைகளில் இருந்த நிலம் இருந்தது.

எனில், இங்கு நிலத்தைவிட உயர்ந்த மதிப்பை உடையதாக சனநாயக உரிமைகளே இருந்தன. சொல்லப்போனால், சனநாயகம் மலர்ந்தபிறகே நிலம் நிலமாக மாறியது.

ஆகவேதான், நவீன அரசுகள் தோன்றிய பின் நிலங்களைக் கைவிட்டுவிட்டுத் தலைநகரங்களுக்குப் படையெடுத்த பார்ப்பனர்கள், ஒரே மூச்சில் சனநாயகத்தை ஒழித்துக்கட்ட விடாப்பிடியாக முனைந்து கொண்டிருக்கிறார்கள். 


றாம் சந்தோஷ் வடார்க்காடு

தமிழிலக்கிய மரபில் தமிழ்ப் பிரதிகளில் பயின்றுவரும் நிலத்தையும் காலத்தையும் கவனத்தில் கொள்ளும் மரபு மிக மூத்ததாகும். இது பொதுவாகத் திணைக் கோட்பாடு என்று அறியப்படுகிறது. ஆனால், திணை என்பது, நிலம் மட்டுமல்லாது, நிலத்தையும், இன்ன பிறவற்றையும், குறிப்பாக ஒழுக்கத்தையும் (உரிப்பொருளையும்) உள்ளடக்கியதாகும். மேற்கின் இலக்கியக் கோட்பாடுகளிலிருந்து, தமிழைத் தனித்துவப்படுத்துவதாக இக்கோட்பாடு உள்ளது.

திணை என்ற சொல்லுக்கு நிலம், பகுப்பு, ஒழுக்கம் எனப் பல பொருள்கள் உள்ளன; இவற்றின் கதம்ப வெளிப்பாடுமது. நிலத்தைப் பொறுத்து, கருப்பொருட்களும், நிலத்திற்கென்ற ஒழுக்கமும் திணைக்கோட்பாடாக விரிக்கப்பட்டுள்ளது. திணை என்பது பிரதிக்கான நிலம் என்றும், அது உண்மையான நிலம் இல்லை என்றும் துரை சீனிச்சாமி சொல்லுவார். அவர், திணையை ஒழுக்கமாகக் கொள்ளக்கூடியவர்; திணையை நிலமாகக் கொள்ளும் கேரளாவைப் பின்னணியாகக் கொண்ட அய்யப்ப பணிக்கரோ, தொடர்ந்து வெறும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று மட்டும் வகைப்படுத்துவதை நெகிழ்த்தி, காலமாற்றத்தைக் கருத்தில் கொண்டும் அக்கோட்பாட்டின் பரந்த பயன்பாட்டிற்காகவும் திணைகளை மேற்கொண்டு பல திணைகளாக விரிக்கலாம் என்பார். உதாரணத்திற்குப் பனி சூழ்ந்த நிலத்தை ஆறாவது திணையாகக் கொள்ளலாம் என்ற கூற்று; அன்றி, இன்றைய சூழலில் மனிதர் வதிவிடமாக மெய்நிகர் (Virtual) வெளியும் உள்ளதால், மெய்நிகர்த் திணை என்ற விரிவாக்கத்தைச் சில ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தளவில், சங்க இலக்கியம், காப்பியம், புராணம் தொடங்கி, இன்றைய நாவல், சிறுகதை ஆகியவற்றுள் நிலம் ஒரு முக்கியப் (முதற்) பொருளாக இடம்பெற்று வந்துள்ளது. தொல்காப்பியம் எனும் இலக்கண, இலக்கியக் கோட்பாட்டு நூலின் பாயிரத்தில் இடம்பெறும் “வடவேங்கந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்பது நில வரையறை ஆகும்; சிலப்பதிகாரத்தைத் தமிழ்க் காப்பியம் என்று சொல்லக் காரணம், அது சேர, சோழ, பாண்டியர் ஆண்ட மூன்று பெரு நிலங்களிலும் நிகழ்வதாலேயே. (மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மொழி வழங்கு நிலத்தை நாடாக வரித்துச் சொன்ன மரபுடையதாகத் தமிழ் விளங்குவது வியப்பிற்குரியது.)

நவீன இலக்கியத்தில் புனைவுகளோடு ஒப்பிடும் போது நிலம் கவிதையில் தெளிவான பின்னணிகளில் வருவதில்லை. பொதுமொழி நீங்கி வழக்கு மொழி பயின்று வரும் எழுத்துகளை வட்டார இலக்கியம் என்று தனித்துக் குறிப்பிட்டாலும், அவையன்றி, எழுதப்படும் எல்லா இலக்கியங்களுமே ஒருவகையில் வட்டார (நாட்டுத்) தன்மை உடையதே; அவை தமக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டே வெளிப்படுவதால்.

கவிதைகளை உலகக் கவிதைகள் என்றும் நாட்டுக் கவிதைகள் என்றும் இரண்டாக வகைப்படுத்தலாம் என்பார் ஞானக்கூத்தன். இங்கு உலகம் என்பது பொதுமை குறித்து நிற்கிறது; உலகிலுள்ள யாவருக்கும் பொதுவானவற்றை, உள்ளடக்கமாகவும், நடையாகவும், உணர்வாகவும் கொண்டு எழுதப்படுவது என்பதே அது. இவ்வாறு உண்மையின் முழுமையை ஆராயும் போது, பிரதிகள் யாவும் ஒரேசமயத்தில், உலக இலக்கியமாகவும் அதேசமயம் நாட்டு இலக்கியமாகவும் உள்ளன.

கடந்த பத்தாண்டுகளாக எழுதி வரும் ‘சில’ இளம் கவிஞர்களை எடுத்துக்கொண்டு, அவர்தம் கவிதையில் பயின்று வரும் நிலத்தை ஆராய்ச்சி செய்த போது (காண்க: எனது கட்டுரையான, ‘அவரவர் உலகம் பொதுத்தன்மையும், வித்தியாசமும்), பின் வரும் முடிவுகளைப் பெற்றேன்.

திணை என்பது ஒரு புனைவு நிலம்; அது வாஸ்தவத்திற்குரியதல்ல.

பழைய மரபின் அடிப்படையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று தற்காலப் பிரதிகளை வகைப்படுத்துவது கேள்விக்குரியது.

திணை மயக்கம் சங்க இலக்கியத்திலேயே இடம்பெற்றுள்ளது; எனவே, புதிய திணைகளை வரிப்பது தவறில்லை. [முன்னத்தி ஆய்வுகளை ஒட்டிய முடிவுகள்]

கவிதைகள், புனைவுகளில் பழைய மரபைத் தாண்டி, கிராமம், நகரம் என்ற பகுப்பு புதிதாக வந்துள்ளது; இதில் மேலும் சில கூடலாம்.

சிலர் தங்கள் கவிதைகளில் வழக்குச் சொற்களைப் பயன்படுத்தினாலும், அவற்றைக் கிராமமென்றோ, நகரமென்றோ பிரித்தறிய முடியாத வகையில் எழுதி இருக்கின்றனர்.

வழக்குப் பயன்பாட்டினைப் பொறுத்தளவில் புனைவுகள் வழக்கினை அனுமதிப்பதாகவும், கவிதையைப் பொறுத்தமட்டில், மேற்கொண்டு புரியாத தன்மைக்குள் அவற்றைக் கொண்டு செல்வதாகவும் அறியப்படுகின்றது.

ஒரேசமயத்தில், ஒரு நிலத்தின் தன்மையும், இன்னொரு நிலத்தின் தன்மைகளும் பிரதியில் பயின்றுவருவது மிக இயல்பான மாற்றமாக அறியப்படுகிறது.

வதிவிடமாக, வாழ் நிலமாக, நினைவேக்கமாக, பயணப்பட்ட அளவில் மட்டும், காணாத போதுமேகூட நினைவிலும், கற்பனையிலும் மீட்டெடுக்க முடிந்ததாக, வேண்டும்போது உடனடியாகப் பயணப்பட (மெய்நிகராகவும்) இயன்றாக, அதன் பொருட்டு தன் வரம்பை நெகிழ்த்திக் கொண்டதாக இலக்கியத்துள் நிலம் வருகிறது. 


லஷ்மி சரவணகுமார்

எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அனார்யா என்னும் அவரது சுயசரிதை தன்மையிலான நூல் மராத்திய இலக்கியத்தின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். தனது சிறுவயதில் சொந்த ஊரில் எதிர்கொண்ட சாதிய ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் வறுமைகளையுமே அந்த நூலில் எழுதியிருப்பார். அந்நூல் வெளியானபின் அடுத்த பத்து வருடங்களுக்கும் மேல் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாதளவிற்கு அவருக்கு எதிர்ப்பு. அவர் எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை. போலியாகச் சித்தரிக்கவில்லை. ஆனால் அவர் எழுத்திலிருந்த உண்மை அந்த ஊர்க்காரர்களையும் மட்டுமல்ல, சாதிய மனோபாவம் கொண்ட அத்தனை பேரையும் உலுக்கியது. எனில் எது அவரது சொந்த ஊர்?

தஞ்சை இலக்கியம், கரிசல் இலக்கியம், கொங்கு இலக்கியம், தாமிரபரணி இலக்கியம் எனத் தமிழ் இலக்கியத்தில் நிலங்களைப் பொறுத்துத்தான் எத்தனை வகைமைகள்? இந்த வகைமைகள் நிலத்தினையா குறிக்கின்றன?  இல்லை நிலத்தை அதிகாரமாகக் கொண்டிருக்கும் நிலவுடமைச் சமூகத்தின் எச்சமான நினைவுகளையே அடையாளப்படுத்துகிறது. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, மெளனி, எம்.வி.வெங்கட்ராம் என எனக்குப் பிடித்தமான தஞ்சை எழுத்தாளர்கள் அனேகமுண்டு. ஆனால் இவர்களின் புனைவில் வரும் தஞ்சைதான் அசலான தஞ்சையா? இவர்களின் காலத்தில் நிகழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் எங்கும் அடிக்குறிப்பாக இடம் பெறாமல் போனதேன்? எந்த ஊராக இருந்தாலும் அதற்கு வெவ்வேறு முகங்கள் இருக்கின்றன. நிலவுடமைச் சமூகத்தில் பிறந்த ஓர் எழுத்தாளர் தனது புனைவுகளில் காட்டும் நிலத்திற்கும், அதே நிலத்தில் உழைப்புக் கூலிகளாக இருந்து இலக்கியத்திற்கு வரும் எழுத்தாளர் காட்டும் நிலத்திற்கும் எத்தனை வேறுபாடுகளுண்டு.

கீழ்தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடிக்கு அருகில் சித்தமல்லி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்த தியாகி எஸ்.ஜி.முருகையன் குறித்து இன்று எவராவது பேசுவதுண்டா? ஒன்பதாம் வகுப்புப் படிக்கையிலேயே இடதுசாரி கொள்கைகளைப் பேசுகிறார் என்கிற ஒரே காரணத்திற்காகப் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறார். அதன்பிறகு முழுநேரக் கட்சி ஊழியராகப் பணியாற்றியவர் கற்றதெல்லாம் மார்க்சியத்தை மட்டுந்தான். இளம் வயதிலேயே ஊர்த் தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெல்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரை எதிர்த்து அன்று போட்டியிட்டவர்கள் எல்லாம் ஆதிக்கச் சாதியில் பிறந்த பெரும் பணக்காரர்கள். ஊர்த் தலைவராக ஆனதோடில்லாமல் நாற்பத்தி எட்டு பஞ்சாயத்துகளுக்குப் பெருந்தலைவராகவும் வெல்கிறார்.

பண்ணையார்களால் ஆளப்பட்ட அன்றைய தஞ்சை மாவட்டத்தில் கிராமங்களுக்குச் சாலைகள் கிடையாது. சரியான பள்ளிக்கூடங்கள் கிடையாது. ஏன்? சாலைகள் போட்டால் மக்கள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்வார்கள், பள்ளிக்கூடம் கட்டினால் படிக்கப் போவார்கள். தங்களை அண்டிப் பிழைக்கமாட்டார்கள் என்பது பண்ணையார்களின் எண்ணம். முருகையன் பெருந்தலைவரானதும் நாற்பத்தியெட்டுக் கிராமங்களுக்கும் சாலைவசதி வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுகிறார். அதற்கெல்லாம் அரசாங்கத்தில் நிதியில்லை என ஆட்சியர் கையை விரித்துவிட, ‘அப்படியானால் நாங்களே சாலையைப் போட்டுகொள்ளலாமா? எனக் கேட்கிறார். ‘உங்களால் எப்படி முடியும் என ஆட்சியர் கேட்க ரஷ்யாவில் லெனின் காலத்தில் மக்கள் உழைப்புக் கொடையாகச் சாலைகள் அமைத்ததைக் குறிப்பிடுகிறார். நம்பிக்கையில்லாமல் ஆட்சியர் சம்மதிக்க ஒவ்வோர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசும் முருகையன் ஒரு நாளைக் குறித்து மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளையும் மக்களையும் திரட்டுகிறார்கள்.
 அன்றைய தினம் சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனத்திற்குள் முப்பத்தியாறு கிலோமீட்டர் தூரத்திற்கான சாலை போட்டு முடிக்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். இன்றளவும் அந்தச் சாலைதான் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அந்தச் சாலை அவரது பெயரில் இல்லை. ரஷ்யா வரை இந்தச் செய்தி பரவி பத்திரிகைகளில் வெளியாகி அவர் ரஷ்யாவிற்கும் சென்று வருகிறார். அவரது சாதனைகளில் இது ஒரு துளிதான். ஆயிரம் பக்கத்திற்கு வாழ்க்கை வரலாறு எழுதும் அளவிற்குக் கீழ்த்தஞ்சை மக்களுக்காக உழைத்த மகத்தான தலைவர் அவர்.
தஞ்சை  எழுத்தாளர்கள் உச்சத்தில் தங்களது படைப்புகளை எழுதிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் கீழ்த் தஞ்சை மாவட்டத்தின் உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரும் நம்பிக்கையை விதைத்த முருகையனும் வாழ்ந்து கொண்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக  இருந்த காலத்திலேயே கொல்லப்பட்ட முதல் இந்தியத் தலைவர் அவர். வாழும் காலம் முழுக்கத் தனக்காகவோ தனது குடும்பத்திற்காகவோ எதையும் சேர்க்கவில்லை. குடிசை வீடுதான். அவரைக் குறித்துத் தமிழ் இலக்கிய உலகில் சிறிய குறிப்புகூட இல்லை என்பது எத்தனை பெரிய துயரம்?

பாண்டியக்கண்ணனின் சலவான் நாவலில் ஒரு சிறுநகரம் வருகிறது.  விருதுநகரும் சில இடங்களில் எனது நகரமான திருமங்கலமும் வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை எவ்விதமான பூச்சுகளும் இல்லாமல் எழுதிய இந்நாவலைக் கரிசல் இலக்கியத்தில் சேர்த்துக் கொள்வார்களா? ஒரு வீட்டின் மலக்கிடங்கைச் சுத்தம் செய்யும் பகுதி நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. எவ்வாறு சுத்தம் செய்வார்கள்? சுத்தம் செய்யும்போது எத்தனை விதமான இடர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் படித்தால் நான்கு நாட்களுக்கு உறக்கம் வராது. தூய்மைப்பணியாளர்களின் இந்நிலையானது தமிழ்நாட்டின் எல்லாச் சிறுநகரங்களோடும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்த ஒன்றுதான். தின்று கொழுத்து மலத்தைக் கழிப்பவனுக்கும் அதனைச் சுத்தம் செய்வதை வேலையாகச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவனுக்கும் ஒரு நகரம் ஒரே விதமான நினைவுகளைத் தரும்?

கொல்லனின் ஆறு பெண்மக்கள் கதையில் கொல்லனின் இறப்பிற்குப் பின் ஊரின் பிற சாதிக்காரர்கள் கொல்லனின் மகள்களை அரவணைத்துக் கொள்வதாக வருகிறது. கிராமங்கள் போற்றுதலுக்குரியவை, அன்பான மனிதர்களால் நிரம்பியவை என்கிற கருத்தாக்கம் ஆதிக்கச் சமூகத்திலும் பொருளாதார ரீதியில் பாதுகாப்பான சூழலில் வளர்ந்தவர்களிடமும் வலுவாக இருக்கிறது. சொத்து சொகத்திற்காக அடித்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு நிலத்தின் மீது எந்தப் புகார்களும் இருப்பதில்லை. சொந்தமாக நிலமில்லாத ஒருவன் தனது வாழ்விற்காக மற்றவர்களின் நிலங்களில் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். கல்வி ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவனைக் காப்பாற்றப் போவதில்லை. கல்விக்காகவும் அதன் பிறகு வேறு வேலைகள் தேடி இடம்பெயரவும் செய்யும் ஒருவனுக்குச் சொந்த நிலத்திலிருந்து எடுத்துச் செல்ல என்ன இருக்கிறது? எந்த ஊர் எனக்கு வாய்ப்புகளை வழங்குகிறதோ, எனக்கான அடையாளத்தை வழங்குகிறதோ அதனைச் சொந்த ஊராக நினைத்துக் கொள்ளலாம். ஒரு சராசரி மனிதனாக இந்த நிலைக்கு என்னால் வந்தடைய முடியும். என் வாழ்க்கை பாதுகாப்பானது என்கிற இடத்தில் நான் தேடுவதையும் மற்றவர் குறித்துச் சிந்திப்பதையும் நிறுத்திவிடுகிறேன். ஆனால் ஓர் எழுத்தாளனுக்கு இந்த நிறைவு ஆபத்தானது. நான் வந்து சேர்ந்திருக்கும் நகரில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டவனின் நிலை என்ன?

நூறு வருடங்களுக்கு முன்னால் சென்னை ஒரு நகரமாக வளர்ந்தபோது இதன் வளர்ச்சிக்காக திருவண்ணாமலை திண்டிவனம் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் உழைப்புக் கூலிகளாக அழைத்துவரப்பட்டனர். மூன்று தலைமுறைகளாக இந்நகரின் கட்டுமானத்திலும் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய இம்மக்கள் திடீரென ஒருநாள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து துரத்தப்பட்டுச் சென்னைக்கு வெளியே வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தப்படுகிறார்கள். இருபது வருடங்களில் வளர்ந்த புதிய துறைகளில் வேலைக்கு வந்தவர்களால் இந்நகரில் எல்லா வசதிகளோடும் வாழ முடியும் போது நூறு வருடங்களுக்கும் மேலாக இந்நகரைக் கட்டமைத்த உழைக்கும் மக்களுக்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏன் ஒரு அரசால் செய்து தரமுடியவில்லை. ஓர் எழுத்தாளன் இவற்றை தானே இந்த சமூகத்தினை நோக்கிக் கேள்வியாக எழுப்ப வேண்டும். நகரங்கள் குறித்துப் பொதுச் சமூகத்தின் மனநிலையில் இருக்கும் எண்ணங்களையே எழுத்தாளர்களும் பிரதிபலிக்கக் கூடாது.

தமிழ் இலக்கியத்தில் பெரும்பாலான படைப்புகள் நிலத்தைப் புனிதப்படுத்துவதையும் அதன் மீதான ஏக்கங்களை ரொமாண்டிசைஸ் செய்வதையும் பிரதானமாகச் செய்திருக்கின்றன. தாமிரபரணி ஆற்றங்கரைக் குளியலும் பறவைகள் வந்தமரும் புங்கமரங்களும் மட்டுமே திருநெல்வேலியின் சித்திரமாக எத்தனை கதைகளிலும் நாவல்களிலும் எழுதப்பட்டுள்ளன. அது மட்டுந்தான் அந்நகரமா?  ஒரு நகரமோ கிராமமோ அந்த ஊரைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் ஒரேவிதமான நினைவுகளைத் தருவதில்லை. ஒருவேளை உணவுக்காக என்னைக் கொத்தடிமையாய்க் கைகட்டி நிற்கச் செய்த ஊரைக் குறித்து எந்த வகையில் எனக்குப் பெருமிதமான நினைவுகள் இருக்கும்? இந்தியாவின் பெரும்பாலான சிறுநகரங்களும் கிராமங்களும் இன்றளவிலும் சாதிய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிரம்பியதாகவே இருக்கின்றன. தோழர் நக்கீரன் தனது ஒரு கட்டுரையில் இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் சேரிகள் கிழக்கு திசையிலேயே அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். யாரும் யாருக்கும் சொல்லித் தராமலேயே இந்த நிலவியல் அடையாளங்கள் எவ்வாறு யாரால் உருவாக்கப்பட்டன என்கிற கேள்வி முக்கியமானது.

இன்றைக்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களின் மூலம், உலகின் எந்தவொரு நகரின் முழுமையான வரலாற்றையும் நம்மால் வாசித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு நிலமும் அதற்கான பிரத்யேகச் சிக்கல்களைக் கொண்டுள்ளது. ஆனால் அங்கெல்லாம் எழுத்தாளர்கள் அந்தச் சிக்கல்களின் மூலங்களை அடையாளம் கண்டு அதனைத் தொடர்ந்து கவனப்படுத்துவதைத்தான் பிரதானமாகச் செய்தார்கள். மாறாக இந்தியாவில் நாவல் வடிவம், தங்களது கடந்த கால நிலத்தின் ஏக்கங்களைத் தொடர்ந்து எழுதியதன் வழியாகவே பிரபலமானது. நீலகண்ட பறவையைத் தேடி, கங்கைப்பருந்தின் சிறகுகள், கங்கைத்தாய், மையழிக் கரையோரம் என ஏராளமான நாவல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

கிராமங்களில் இருந்தும் சிறு நகரங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பெருநகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்ட இந்த முப்பதாண்டுகளில் கிராமங்கள் அதன் அதிகாரங்களையோ சாதியக் கட்டுமானங்களையோ இன்னும் இழந்துவிடவில்லை. முன்னைவிடவும் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்குள் சாதிய இறுக்கமும் அதிகரித்திருக்கிறது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நாளில் கூட அழகின் அடையாளமாக இலக்கியவாதிகளால் புகழ் பாடப்படும் நெல்லை மாநகரில் ஒரு ஆணவப்படுகொலை. யதார்த்தம் இப்படியிருக்க இன்றைக்கும் பெரும்பாலான படைப்புகள் கிராமங்களையும் சிறுநகரங்களையும் விதந்தோதுவது எத்தனை பெரிய நகைமுரண்?

சென்னை திருப்பூர் கோவை என்றில்லாமல் இன்றைக்கு மிகச் சிறிய நகரங்களில் கூட வெவ்வேறு மாநிலங்களில் இருந்து குடியேறத் துவங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கலாச்சார ரீதியிலும் வாழ்க்கை முறையிலும் நமது நகரங்கள் வேகமாக மாற்றங்களை அடைந்துவருகின்றன. பழைய மனநிலையோடும் இறுக்கங்களோடும் எப்படி வாழ முடியாதோ அப்படி மொழியையும் நாம் கையாள முடியாது. ஒரு எழுத்துக் கலைஞன் கூட்டுச் சமூகத்தினைக் குறித்த பெருங்கனவினைக் கொண்டவனாக இருக்க வேண்டியது அவசியம். ஒரே மொழி பேசுகிற மக்களுக்குள்ளேயே சாதியின் காரணமாக ஏற்றத்தாழ்வுகளும் கொலைகளும் நடக்கக் கூடிய நிலத்தில் வெவ்வேறு மொழி அடையாளங்களுடன் ஏதிலிகளாக வந்து வாழக்கூடிய மனிதர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமூகத்தின் முன்மாதிரியாக  எழுத்தாளன் இருக்கவேண்டுமானால் இதன் நன்மை தீமைகளை எந்தச் சாய்வுகளுமின்றி எழுத வேண்டியது அவனது கடமை.

என் முன்னோடிகளைப் போலவே நானும் என் கடந்த காலத்தையும் என் பால்ய கால நகரையும் விதந்தோதி எழுதுவேனானால் நான் இந்தச் சமூகத்திற்கு விளையும் தீமை. இந்த மொழிக்கோ சமூகத்திற்கோ எந்த நன்மையும் அதில் ஏற்படப்போவதில்லை. ’எனக்கு எல்லா நிலங்களும் சொந்தமானவை, எந்த நிலத்திற்கும் நான் சொந்தமானவன் அல்ல.’ என்ற நாடோடி மனம் வாய்க்க வேண்டியது அவசியம். நிலம், கடந்தகாலம், சாதி என அடையாளங்கள்  அதிகாரமாக மாறக்கூடிய ஒரு காலகட்டத்தில் அடையாளமற்றவனாக எழுதுவதே எனக்கான விடுதலையாக எண்ணுகிறேன். 


கரிகாலன்

நிலம் என்பது வெறும் புவியியல் பரப்பு மட்டுமல்ல. அது மனிதர்களின் வாழ்க்கை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படுகிறது. நிலத்தையும், காலத்தையும் முதற்பொருள் என்கிறார் தொல்காப்பியர். உலக இலக்கியங்களில் நிலமே தொடர்ச்சியான கருப்பொருளாக இருந்து வந்திருக்கிறது.

நிலம் மனிதர்களின் அடையாளமாகவும் அவர்களது கலாச்சாரத்தோடு தொடர்புடையதாகவும் இருந்து வருகிறது. இறையாண்மை மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பிற்கான மையமாக நிலம் இருக்கிறது. அடுத்தவர் நிலத்தை அபகரிக்கவும், விரிவுபடுத்தவுமே உலகத்தில் யுத்தங்கள் நிகழ்ந்தன. நிலம் இழப்பது என்பது அதிகாரத்தை இழப்பது. நிலம் பிடுங்கப்பட்டவர்கள் அகதிகளாகிறார்கள். அடிமைத் தொழிலுக்கு ஏவப்படுகிறார்கள்.

நிலமே தனிநபர் மற்றும் சமூகத்தின் கூட்டு அடையாளங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. போலவே, காலனித்துவம், காலநிலை மாற்றம் போன்ற சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கவும் செய்கிறது. இலக்கியம், நிலத்தை பௌதீகமாக மட்டுமே அணுகவில்லை. அதைவிட மிக அதிகமான முக்கியத்துவத்தைத் தருகிறது. கலாச்சாரம், வரலாறு, இவற்றின் சக்திவாய்ந்த சின்னமாக நிலம் இருக்கிறது . நிலம் மனித இருப்போடும் அடையாளத்தோடும், ஆன்மீகத்தோடும் நெருங்கியது. இதன்பொருட்டே உலகப் பனுவல்களில் நிலம் ஒரு கதாபாத்திரமாகவே செயல்படுகிறது. மனிதர்கள் நிலத்துடன் தொடர்பு கொள்ளும் முறையைத் திரும்பத் திரும்ப எழுதுவதுதான் இலக்கியத்தின் வேலையாக இருந்து வந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் மனிதர்களை மட்டும் எழுதவில்லை. அவை நிலத்தையும் எழுதின. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தமிழ் நிலம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த நிலத்திற்கேற்ற வாழ்க்கை முறைகள், தொழில்கள் மற்றும் நம்பிக்கைகள் விவரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மக்களின் வாழ்க்கை, கடவுள், தொழில் மற்றும் காதல் போன்றவை விவரிக்கப்பட்டன. நிலம், மக்களின் வாழ்வியலை மட்டுமல்லாது, அவர்களின் உணர்ச்சிகளையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிற கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. சங்க இலக்கியம் என்றில்லை. நவீன இலக்கியமும் நிலத்தை வெறும் பின்னணியாக மட்டும் கொண்டிருக்கவில்லை. நிலம் ஒரு பாத்திரமாக நவீனப் பனுவல்களில் உருமாற்றம் அடைகிறது.

கதாபாத்திரங்களை வடிவமைப்பதில், சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதில் இயற்கையோடான மனித உறவை ஆராய்வதில் இலக்கியப் பிரதிகளுக்கு நிலமே பிரதானம். பின் காலனித்துவப் புனைவுகளின் மையமாகவும் நிலம் திகழ்கிறது. தாயகம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் காலனித்துவச் சக்திகளுக்கு எதிரான எதிர்ப்பு இவற்றுக்கான தளம் அமைப்பதாகவே நவீன இலக்கியப் பிரதிகளில் நிலம் செயல்படுகிறது. Exodus by Leon Uris, A Tale of Love and Darkness, The Yiddish Policemen’s Union, The Hilltop, To the End of the Land, Borderlife போன்ற புனைவுகள் நிலமிழந்த யூதர்களின் வாழ்வை எழுதியவை. The pearl, One day of life, Tracks, pachinko போன்ற இலக்கியப் பனுவல்கள் நிலமற்றவர்களின் மனப்பதற்றங்களை, வாழ்க்கை நெருக்கடிகளைப் பேசுபவை.

சனாதனம் செயல்படுகிற இந்தியாவில் நிலம் தேசத்தோடு மட்டும் அல்லாமல் மதத்தோடும் தொடர்புடையதாக இருந்து வருகிறது. ஒரு தேசத்தின் குடிமக்களுக்கு அவரது தேசத்தின் இயற்கை வளங்களின் மீது உரிமை வேண்டும். ஆனால் இந்தியாவில் அதிகாரமாக இருக்கும் மதம், நில உரிமையற்றவர்களாகத் தலித்துகளை வைத்திருக்கிறது. இதனால் நிலமற்றவர்கள் சட்டப்பூர்வமாக, அரசியல் சாசனப்படி இந்தியராக இருப்பதற்கு உரிமையற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

இந்தியராக ஒருவர் இருப்பதற்கு நிலம் முக்கியம். குஜராத்தில், காஷ்மீரில் இன்னும் பல வட இந்திய மாநிலங்களில் இசுலாமியர்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் முயற்சிகள் அரசியல்பூர்வமாக சட்டபூர்வமாக நடந்தபடி இருக்கிறது. குஜராத் கலவரத்துக்குப் பிறகு, சொந்த தேசத்தில் இசுலாமியர்கள் நிலமற்றவர்களாக அகதிகளாக ஆக்கப்பட்டனர்.

சமூக உறவுகள் குடிகளின் நில உறவோடு தொடர்புடையவை. சொந்த நிலம் இல்லாதவர் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். நிலமற்றவர்களாக தலித்துகளை வைத்திருப்பதில் இந்திய சாதி இயங்கியலுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இந்தியாவில் தலித்துகளுக்கு நிலம் என்பது இடம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாமல் இருப்பு சார்ந்த பிரச்சனையாகவும் இருக்கிறது. பஞ்சமி நில அபகரிப்புகளை இத்தோடு இணைத்து ஆராய வேண்டும். இந்தியாவில் 71% தலித்துகளுக்கு நிலமில்லை. தலித்துகள் அதிகமாக வாழும் ஹரியானா, பஞ்சாப் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் 85% தலித்துகள் நில உடைமையாளர்களின் தயவில் வாழ்கின்றனர். கிராமப்புறங்களில் வாழும் 59% தலித்துகளிடம் நிலம் இல்லை.

நிலமில்லாமல் தலித்துகளுக்குச் சமத்துவம், சுதந்திரம் என்பதெல்லாம் கனவாகவே இருக்கிறது. இந்திய மைய நீரோட்ட வாழ்வில் இணைய தலித்துகளுக்கு நிலம் அவசியம் தேவை. The god of small things, Fakira by Anna Bhau Sathe, Battles of Our Own, This Land is Ours, I Have Become the Tide, Bheda போன்ற இந்திய நாவல்கள் அனைத்தும் நிலமற்றவர்களின் நிலம் மறுக்கப்பட்டவர்களின் அவலங்களைப் பேசுபவையே. உலகில் நிலவுகிற இனப்பிரச்சினை, போர், பொருளாதாரம், சமூக ஏற்றத்தாழ்வுகள், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல்,
நிலம் இழப்பு போன்ற நவீனச் சமூக நெருக்கடிகளின் மையமாக நிலம் இருக்கிறது. மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல. அவர்கள் ஒருநாள் இறந்து போவார்கள். அவர்களைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் தேவை. 


சாம்ராஜ்

“நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” என்கிறார் தொல்காப்பியர். நிலமும் பொழுதும் சேர்ந்தே மனித மனம் கட்டமைக்கப்படுகிறது.

வரலாற்றில் நிலம் என்பது எப்பொழுதும் அடையாளமாக அல்லது ஆதிக்கமாகத்தான் இருக்கிறது. வலு குறைந்தவர்களுக்கு வாழ்வதற்கான ஆதாரம். வலு கூடியவர்களுக்கோ ஆதிக்கம்.

நவீன இலக்கியத்தில் நிலப்பரப்பின் பாத்திரமென்ன? 19 ஆம் நூற்றாண்டு ரஷ்ய செவ்விலக்கியங்களை நிலம் அதில் பிரதானப் பாத்திரம் வகிக்கிறது. நிலமற்ற ரஷ்யப் படைப்புகளை நாம் வாசித்திருக்கிறோமா என்ன?

தமிழில் இலக்கியப் பரப்பில் நாவலும், சிறுகதைகளும் தோன்றிய காலத்திலிருந்தே நிலம் பெரிதாகத் தீட்டப்பட்டிருக்கிறதா எனில் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பா.சிங்காரம் தீட்டியதைப் போல் பெரும் நிலப்பரப்புகளை எவர் தீட்டினார்கள்? தமிழ் நாவல்களில் கொஞ்சம் டெல்லி, ஹைதராபாத், பம்பாய், கோட்டயம் என இருக்கிறது. உள்ளூரில் தஞ்சாவூர், கரிசல் நிலம், மேற்கு மண்டலம், நாகர்கோவில் கொஞ்சம் தீட்டப்பட்டிருக்கிறது. இதுவும் கூட எண்பதுகளின் தொண்ணூறுகள் வரையான சித்திரம்தான்.

அதன் பின் நவீன இலக்கியத்தில் நிலங்கள் எழுந்து வருவது குறைவே. தலித் இலக்கியத்தில் நிலம் சார் nostalgia இருக்க முடியாது. பழி வாங்கும் நிலத்தில் மீது என்ன பரவசம் இருக்க முடியும்? அது நியாயமும் கூட.

நவீன இலக்கியத்தில் நிலம் ரியல் எஸ்டேட்காரர்களின் plot வரைப்படம் போலத்தான் இருக்கிறது.

ஒரு தலைமுறை அல்லது ஒன்றரைத் தலைமுறை பிழைப்பிற்காக ஊரை விட்டு வெளியேறியாயிற்று. தன் சொந்த நிலத்தின் வரலாறு, தொன்மை, பண்பாடு, தனித்தன்மை குறித்துப் பெரிதாக அறிதல் இல்லை. இது மனிதர்கள் அகம் சார்ந்து நிகழ்வது. புறத்தில் நிலங்கள் ஒரே தன்மை கொண்டவையாக மாறுகின்றன மாற்றப்பட்டு விட்டன. எல்லா இடங்களிலும் A2B இருக்கும் என்பதைப் போல எந்த வித்தியாசமும் அற்ற ஒன்றைத்தன்மை கொண்ட நிலங்கள் உருவாகிவிட்டன.

நம்முடைய கதை சொல்லிகளும், நம்பிக்கைகளும், நாட்டுப்புறக் கதைகளும், சிறுதெய்வங்களும், வனங்களும் பாரம்பரிய அறிவும் காணாமல் அடிக்கப்பட்டு விட்டன.

இச்சூழலில் மிக அரிதாகவே நிலம்சார் படைப்புக்கள் அரிதாகவே வருகின்றன.

நவீன இலக்கியத்திற்கு நிலத்தின் மீது பெரிய பற்றும், மரியாதையும் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

நிலத்தை ஒருவன் எழுத்தில் எழுப்ப அசாத்திய வலுவும், ஓர்மையும் வேண்டும். நிலம் அவனுக்குள் இறங்கியிருக்க வேண்டும்.

புறநகரில் அரை கிரவுண்ட் வாங்க அலையும் நடுத்தர வர்க்கம் போல்தான் நவீன இலக்கியம் நிலங்களில் அலைகிறது.

நிலம் என்பது வெறும் நிலமா என்ன?

முன்பொருமுறை ஒரு அரசியல்வாதி ஈழத்தமிழர்களைத் தமிழ்நாட்டிற்கு வரச் சொல்லுங்கள். இங்கே எங்கேயாவது நிலம் தந்து விடலாம் என்று பேசினார். ஈழப் பிரச்சனையை ஒரு பத்திர அலுவலகத்தில் வைத்து முடித்து விட்டார். ஓர் இனத்திற்கு நிலம் என்பது நிலம் மாத்திரமல்ல. அதோடு அதன் ஆயிரமாண்டு வாழ்வு பிணைந்திருக்கிறது. அதிலிருந்து அதன் கலாசாரம் பிறக்கிறது.

நிலத்தை எழுதுவதென்பது அதைப் போற்றுவதல்ல. அதனைப் புரிந்து கொள்வது. தன் வேர்களை அறிவது அதன் வழி இன்னும் சனநாயகத்தை நோக்கிப் பயணப்படுவது.

நாம் யார் என்று அறிவதின்வழிதான் நம் கால்கள் எவர் தலையில் இருக்கிறதென அறியவும், நம் தலையில் யார் கால் இருக்கிறது என உணரவும் முடியும். நிலத்தை எழுதுவதென்பது இதுவே.

நிலங்களைத் தோண்டத் தோண்டத்தான் தண்ணீர் வரும். அதோடு நாம் உயிரோடு கொன்று புதைத்த மாபெரும் உண்மைகள் சேர்ந்து வெளிவரும். அதுவே நிலத்தை எழுதுவதென்பது. ‘இயேசு வருகிறார் நீ மனம் திருந்து’ என்பதை நம்புவதைப் போல் இவையெல்லாம் நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழும் என இப்போதைக்கு நம்புவோம். 


 

பச்சோந்தி
பச்சோந்தி

கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ரா.ச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம், ஜனசக்தி ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது தடாரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top