‘சீதை’ என்று தாத்தா செல்லமாக என்னை எழுப்பினார். சிறு பிராயத்தில் சாமியிடம் சென்றுவிட்ட தன் தாயின் நினைவாக ‘சீதை’ என்று பெயர் சூட்டினாராம் எனக்கு. ‘சீதா’ என்று வைத்திருந்தால்கூடப் பரவாயில்ல. அது என்ன, ‘சீதை’. ஏதோ சபால நடக்குற நாடகத்துல வர்ற கதாபாத்திரம் மாதிரி இருக்கு. கணவன் காட்டுக்குப் போனால் கூடவே போய் கஷ்டப்பட நான் என்ன ராமாயண சீதையா? இல்லை, அரக்கன் என்றுகூடத் தெரியாமல் ராவணனிடம் சிக்கிக்கொள்ளும் அளவுக்கு முட்டாளா? என் தோழிகள் என்னை ‘சீத்’ என்றுதான் அழைப்பார்கள். இன்று எனக்குப் பதினெட்டு வயது பூர்த்தியாகிறது.. அதைக் கொண்டாடவே தாத்தா உற்சாகமாக என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், எனக்கோ எரிச்சலாக இருந்தது. நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்குப் போய் கொண்டாடலாம் என்றால் அதற்கும் அனுமதி இல்லை. குளித்து முடித்து வந்தவுடன் தாத்தா ஏதாவது பரிசு கொடுப்பார். பிறந்த நாள் பரிசை வேண்டா வெறுப்பாகப் பெற்றுக்கொள்ளும் குழந்தை நானாகத்தான் இருப்பேன். மறைந்த தன் தாயின் ஏதாவது ஒரு பொருளைப் பேத்திக்குப் பரிசாகக் கொடுப்பது அவரின் வழக்கம்.
“என்ன தாத்தா போன வாட்டி கம்மல், இந்த வாட்டி என்ன, பாட்டியோட வளையலா?”
“இல்லடி குட்டி இந்த வருஷம் உனக்குப் பதினெட்டு ஆயிடுச்சியில்ல, அதனால ஒரு சிறப்புப் பரிசு.”
பொன்னால் செய்த தன் தாயின் குஞ்சத்தைத் தாத்தா என் கண்முன் நீட்டியவுடன் எனக்கு அழுகையே வந்துவிட்டது.
“செவத்துல போய் முட்டிக்கொள்ள வேண்டும் போல இருக்கு. காது வரையே முடி இருக்குற எனக்கு, எதுக்கு இந்த ஐட்டம்? ஐயோ! நீ கிஃப்ட்டுனு குடுக்குறத எல்லாம் சேத்து வச்சி நான் ஓர் அருங்காட்சியகம் தான் திறக்கவேண்டும் போல. ‘கற்காலத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை முறை’ என்று’ போர்டு போட்டா பொருத்தமா இருக்கும்.”
“ஆனா, சுப்பிரமணி நீ எவ்ளோ பரவால்ல. உன் பையன் ராமமூர்த்திகிட்டப் போய், ‘அப்பா எங்க என் பிறந்தநாள் கிஃப்ட்டு’னு கேட்டா, அதான் தாத்தா குடும்பப் பொக்கிஷத்தையே குடுத்திட்டாரேன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடும்.”
இன்று எப்படியாவது நண்பர்களுடன் வெளியே சென்று பதினெட்டைக் கொண்டாடியே தீர வேண்டும். சொன்னால் இதுகளுக்குப் புரியாது. ‘இது என்ன ஆடி பதினெட்டா, ஊரையே கூட்டிக் கொண்டாட’ என நக்கல் பேசுங்கள். சஞ்சனா, ஏதோ பிறந்தநாள் ஸர்ப்ரைஸ் வைத்திருப்பதாகச் சொல்லி என் தலையில் அடித்துச் சத்தியம் செய்தாள். பதினெட்டில் அப்படி என்ன சிறப்பு? ஓட்டுநர் உரிமம் வாங்கலாம், ஓட்டுப் போடலாம், இனிமேல் நான் வயது வந்தோரென்று சொல்லிக்கலாம். சஞ்சனா என்ன ஸர்ப்ரைஸ் வச்சிருக்கானே தெரியலையே. ஆனா, கண்டிப்பா செம ஃபன் இருக்கும். வீட்டில் வடை பாயசம், சாப்பாடு, கோயில் அர்ச்சனையெல்லாம் முடிந்து பெயிலில் வெளியே வர மூன்று மணி ஆகிவிட்டது.
கார்ல சான் என்ன பிக்கப் பண்றதா திட்டம். ஈ.சி.ஆரில் பீச் கிட்ட கேக் வெட்டப் போகிறோம் என்று சொல்லி வீட்டில் பெர்மிஷன் வாங்கியாயிற்று. ஆனா, உண்மையான ஸர்ப்ரைஸ் வேற லெவல்ல இருக்குமென்று எனக்குத் தான் தெரியும். போகும் வழியில் ரூபாவையும் மனோஜையும் பிக்கப் செய்துகொண்டு ஈ.சி.ஆரில் ஒரு பீச் ஹவுஸை அடைந்தோம். சானுக்குப் பல நண்பர்கள். அதில் ஒருவனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவன் கொண்டாட்டத்துடன் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். போகும் வழியில் வாகனத்திலேயே உடைகளை மாற்றிக்கொண்டோம். வழியில் காரை ஓரிடத்தில் நிறுத்தி கேக் வெட்டி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம் சாட்சிக்காக. நாங்கள் சென்றடையும் போது மணி ஐந்து ஆகிவிட்டது. சரணைத் தவிர வேறு யாரும் இல்லை. என்னைச் சரணுக்கு அறிமுகப்படுத்திவைத்தாள் சான்.
“கம் பர்த்டே பேபி இன்றைக்கு பார்ட்டியே உனக்குத்தான்” என வரவேற்றான் சரண். உருண்டை முகம், அலைஅலையாய் தலை முடி, பட்டர் ஸ்காட்ச் நிறத் தேகம். அந்த உருண்டை முகத்தில் சின்னதாய் இரண்டு கண்கள். அடர் பச்சை நிற க்ரொக்கடைல் டீ-ஷர்ட்டும் நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தான். சரண் மிகவும் சார்மிங் ஆக இருந்தான்.
“சான் எங்கே யாரையும் காணோம்?”
“அவர்கள் எல்லாம் எட்டு மணிக்கு மேல நத்தை மாதிரி ஊர்ந்து வருவார்கள்” எனச் சரண் சொன்னான்.
“அவ்ளோ லேட்டா ஆரம்பிச்சா, நான் எப்ப வீட்டுக்குப் போறது?”
“வீட்டுக்கு விடிந்ததற்கு அப்புறம்தான் போக முடியும்” எனச் சொல்லிச் சிரித்தான். பயத்தில் நான் சானைப் பார்த்தேன்.
“சரிடி எட்டு மணிக்கு கேக் வெட்டிட்டு கிளம்பிடலாம், ஒன்பது மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம். வழியில டிராபிக் ஜாம்னு சொல்லிச் சமாளிச்சிடலாம்” எனச் சொன்னாள்.
எனக்கும் அந்த இடத்தைவிட்டுப் போக மனம் இல்லை. என்றோ ஒரு நாள் சரி எப்படியாவது சமாளிச்சிடலாம். எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. போனை சைலென்டில் போட்டுவிட்டேன். சரண் மிகவும் மரியாதையாக நடந்துகொண்டான். ஆரஞ்சு ஜூஸ் தவிர எந்த ட்ரிங்க்ஸும் என் பக்கம் வராமல் பார்த்துக்கொண்டான். சானின் மற்ற நண்பர்கள்போல நான் இல்லை என்று அழகாகப் புரிந்துகொண்டான். என்னிடம் மரியாதையாகப் பேசுவதும் நண்பர்களிடம் ‘மச்சான்’ ‘ப்ரோ’ என்று இயல்பாகவும் இருந்தான். பிரெண்டோட பிரெண்டோட பிரெண்டுன்னு ஒரு முப்பது பேராவது வந்திருந்தார்கள் அன்று. மியூசிக் ஆரம்பித்ததும் சரண் கூலர்ஸ் வாட்ச் எல்லாம் கழட்டி வெச்சிட்டு குத்துப் பாட்டுக்கு எல்லாம் இறங்கி அடிக்க ஆரம்பித்தான். நேரம் போய்க் கொண்டே இருந்தது. எனக்கு பயம் தொற்ற ஆரம்பித்தது. என் நிலைமையை ஊகித்து அவனே சானிடம் கூறி எங்களைக் கிளம்பச் சொல்லிவிட்டான்.
ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு ஒருவழியாக வாகனத்தில் உடை மாற்றி, ரூபாவையும் மனோஜையும் விட்டுவிட்டு, சான் என்னை வீட்டில் விடும்போது பதினொரு மணி. முப்பது மிஸ்டு கால், பல திட்டுகளுக்குப் பிறகு என் படுக்கையில் விழுந்தபோது ஒரே சிரிப்பாக இருந்தது. இரவு முழுவதும் நாங்கள் தூங்கவே இல்லை. வாட்ஸ்அப்பில் சாட் செய்துகொண்டே இருந்தோம். சரணைப் பற்றி நிறையப் பேசினோம். அவன் பார்ட்டிக்குக் கூப்பிடும்போது என் பிறந்தநாளை பற்றிக் கூறியதால் அவன்தான் என்னையும் அழைத்து வரும்படி கூறினானாம். அவனுக்கு நிறைய கேர்ள் ஃபான்ஸ் என்று சான் சொன்னாள். ரூபா சரணின் அழகான சிரிப்பைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். ரூபாவுக்கு முன் நான் முந்த வேண்டும் என்று நினைத்தேன்.
அடுத்த ஒரு வாரத்துக்குள் சரணின் பேஸ்புக் ஃப்ரெண்ட் ஆகிவிட்டேன். இன்ஸ்டாவிலும் ஃபாலோ பண்ணத் தொடங்கிவிட்டேன். அவன் சமூக வலைத்தள பதிவுகள் சுவாரசியமாக இருந்தன. அவனின் பன்முகத் தன்மையைக் காட்டின. தினமும் ஏதாவது ஒரு பறவையையோ இயற்கைக் காட்சியையோ புகைப்படம் எடுத்துப் பதிவிடுவான். சில நாட்களில் இயற்கை விவசாயம் பற்றி ஏதாவது ஆய்வுக் கட்டுரையைப் பதிவிடுவான். அவன் பைக்கில் சென்ற தொலைதூர ஆன்மீகப் பயணங்களைப் பகிர்வான். அவனின் ரசிகையாகிப் போனேன். ஒருநாள் அவனின் பின்கழுத்தில் சிவனின் திரிசூல டாட்டூ போட்டிருந்தான். அந்தப் புகைப்படத்திற்கு நூறு சிவப்பு இதயங்களையாவது வென்றிருப்பான். அந்தத் திரிசூலத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அவனுடன் பழக ஆரம்பித்தவுடன் அவனைப் பற்றி பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். ஒருநாள் யூவல் நோவா ஹரியின் ‘சேப்பியன்ஸ்’ புத்தகத்தில் வரும் ‘கோக்னிடிவ் ரெவலூஷன்’ பற்றிப் பேசினான். மறுநாள் சு.வெங்கடேசனின் ‘வேள்பாரியில்’ வரும் முருகன் – வள்ளி காதல் கதையை இவன் கதைபோல் விவரித்தான்.
“யாருடா நீ? இயற்கை ரசிகனா? சிக்ஸ் பேக் வைத்திருக்கும் சந்நியாசியா? சோலோவாக சிவனைத் தேடும் யாத்ரிகனா? பார்ட்டி அனிமலா ? புத்தகப் புழுவா? சமூக ஆர்வலனா? பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்த ஒரு ரகளையான கலவை. ஆனால், எதையும் அவன் திட்டமிட்டுச் செய்வதில்லை. தன் வாழ்நாளின் சில மணித்துளிகளை பதிவு மட்டுமே செய்கிறான். பொதுவாகவே ஜென்டில்மென்களைப் பெண்களுக்குப் பிடிக்கும். இவன் அதற்கும் மேலே ஏதோ ஒன்று. இந்த அபூர்வக் கலவை என்னிடம் மட்டும் மரியாதையாகப் பேசுவது சற்று நெருடலாகவே இருந்தது. நான் இன்னும் அவனது நம்பிக்கையான நட்பு வட்டத்திற்குள் செல்ல அது தடையாக இருந்தது. நான் அவனுக்கு ஒரு நல்ல இன்டெலக்சுவல் கம்பானியன் என்று அவன் மனதில் பதிய வைக்க முயற்சி செய்தேன்.
அவனுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை நான் தேடித் தெரிந்து கொண்டேன். பாரம்பரிய விதைகள், அபூர்வப் பறவைகள், ஆன்மீகம் என எல்லாவற்றிலும் அக்கறை காட்ட ஆரம்பித்தேன். அவனுடனான உரையாடல்கள் நீள ஆரம்பித்தன. இடைவெளிகள் குறைய ஆரம்பித்ததன் அறிகுறியாக அவன் சில விஷயங்களை என்னுடன் பகிர ஆரம்பித்தான். தன் நண்பர்களிடம் கூடப் பகிராத அந்தரங்கள் என எனக்குப் புரிந்தது. சரியான திசையில் என் படகைச் செலுத்துவதில் மகிழ்ந்தேன். இளம் வயதில் தாயை இழந்து, எப்போதும் பிஸியாகவே இருக்கும் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் கழிந்த தன் பால்ய காலத்தை விவரித்தான். தன் சிறிய வட்டத்திற்குள் இருந்து மெதுவாக வெளியேறி நட்பு வட்டத்தைப் பெருக்கி வாழ்க்கையைச் செதுக்கியதைப் பகிர்ந்தான். அவனுடைய வலிகள் நிறைந்த பயணம் என்னைப் பாதித்தது. இன்று அவன் வைரமாக மின்னினாலும் அவன் இதயத்தில் கசிந்த ரத்த வடுக்கள் இன்னும் மறையாமல் இருப்பதை உணர்ந்தேன். உலகத்துக்குத் தெரியாத ஒரு முகத்தை என்னிடம் மட்டும் காட்டியிருக்கிறான். சமயம் வரும் போது அவன் இழந்த அரவணைப்பைத் தர நான் காத்திருந்தேன்.
சரண் இரண்டு குழந்தைகளின் கல்விக்குப் பண உதவி செய்வது பற்றி ஒருமுறை என்னிடம் கூறி இருந்தான். அவன் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை மற்றவர்களுக்காகவே செலவு செய்கிறான். தன் பணக்காரத் தந்தையிடம் கூட பணம் வாங்க மாட்டான் என்று தெரியும். நாங்கள் இருவரும் வெளியே செல்லும் போது நானே பில்லைக் கட்டிவிடுவேன். பாக்கெட் மணி குறைந்தால் தாத்தாவிடம் ஏதோ சொல்லி சிறிது பணம் வாங்கிக் கொள்வேன்.
எப்போதும் முதல் ரிங்கிலேயே போன் எடுப்பவன், இரண்டு நாட்களாகப் பதில் அளிக்கவில்லை. அப்படியே எடுத்தாலும் ஏதோ வேலையில் இருப்பதாகக் கூறி அவசரமாக போனை வைத்து விடுகிறான். சில நாட்களுக்குப் பிறகு நேரில் சந்தித்த போது சற்றுப் பதற்றமாகக் காணப்பட்டான். விசாரித்த போது தான் தெரிந்தது யாருக்கோ ஒரு சிறிய அறுவைச் சிகிச்சைக்காகப் பணம் தருவதாக வாக்களித்திருக்கிறான். அவர்கள் மருத்துவமனையில் இவன் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று. தந்தை கிள்ளி கொடுத்தாலே போதும் ஆனால், கேட்க மனமில்லை. பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல என் மனதும் விசாலமானது, என்னிடம் இருந்த சிறு தொகையை அவனிடம் கொடுத்து உதவ நினைத்தேன். மறுத்துவிட்டான். எப்படிச் சமாளித்தான் என்று தெரியவில்லை அடுத்த இரண்டு நாட்களில் பணத்தைக் கொடுத்து விட்டான்.
எங்கள் இருவருக்கும் இருந்த நட்பு இலையுதிர் காலங்களிலும் பூக்கத் தொடங்கியது. ஆண், பெண் என்ற பாகுபாடே அற்றுப் போனது. என்னை அவன் சில நேரங்களில் மறதியில் மச்சான் என்று கூப்பிட ஆரம்பித்தான். அதைத் திருத்தும் எண்ணமே எனக்கில்லை. அவனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். என் பத்தொன்பதாவது பிறந்த நாள் வந்தது. இந்த முறை தாத்தா என்ன பரிசு கொடுப்பார் என்று ஆவலாக இருந்தேன். கெம்பு கல் பதித்த தங்க வங்கிகள் கிடைத்தன. அவற்றின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும். ஏதாவது நல்ல காரியத்துக்குத் தேவைப்படும் என்று பத்திரமாக எடுத்து வைத்தேன். இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் அன்று முழுவதும் இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், அவனோ ஓர் என். ஜி. ஓ. தொடங்கும் வேலையில் இருந்தான். தனது இருபத்தைந்தாவது வயதிற்குள் தாயின் பெயரில் ஓர் என். ஜி. ஓ. தொடங்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவு.
இதுவரை சரண் என்னிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. நானாக அவன் நிலை கண்டு வற்புறுத்திச் செய்தவையே. அவனுக்கு ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசு கொடுக்க வேண்டும் என ஆசை பட்டேன். எனக்குப் பயன்படாத தங்கக் குஞ்சத்தையும் வங்கிகளையும் கொடுத்து உதவப்போகிறேன். அவன் கனவுகளுக்குப் பேருதவியாக இருக்கும் என் பரிசு. விஷயம் தெரிந்த போது வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டான். என் பாட்டியின் நகைகள் ஒரு நல்ல விஷயத்திற்கு முதலீடாக இருக்கும் என்று புரிய வைத்தேன். உன் தாத்தாவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொன்னான். நான் அனுமதி வாங்கிவிடுவேன் என்று உறுதி அளித்தேன். தயங்கினான். நான் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழி இல்லாமல் ஒரு யோசனை சொன்னான். புது நிறுவனத்திற்குத் தன் தாயுடன் சேர்த்து என் பாட்டியின் பெயரையும் சூட்டலாம், உன் குடும்பத்தாருக்கு இதில் சம்மதம் என்றால் ஏற்றுக் கொள்கிறேன் என்றான். நிச்சயமாக நான் இது குறித்து வீட்டில் சொல்லப் போவது இல்லை. காரியம் முடியும் வரை எப்படியாவது இவனைச் சமாளிக்க வேண்டும்.
திறப்பு விழா அன்று எல்லோரும் வருகிறார்கள் என்று சொல்லிச் சமாளித்தேன். நகைகளை எங்கள் இருவரின் பிறந்த நாள் அன்று அவனுக்குப் பரிசாகக் கொடுத்தேன். புது அலுவலகம், வங்கிக் கணக்கு, இணையத்தளம் போன்ற வேலைகளில் இருந்தான். ஆகஸ்ட் பதினெட்டு அன்று நாள் குறிக்கப் பட்டது. நானும் சானும் வீட்டிற்குத் தெரியாமல் தான் போய் வர வேண்டும். ஆகஸ்ட் பதினெட்டு அன்று எல்லோரும் வெளியே சென்றிருந்த வேளையில் தாத்தாவிடம் பொய் சொல்லிவிட்டு, அவனது புது அலுவலகம் செல்லக் கிளம்பினோம். திருவான்மியூர் ஆறாவது அவென்யூ ஐந்தாவது தெரு செல்ல வேண்டும். நான்காவது தெரு வரை வந்து விட்டோம். ஆனால், அதன் பிறகு ஐந்தாவது தெருவைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏழாவது அவென்யூ ஆரம்பித்துவிடுகிறது. இருபது நிமிடங்களாக அலைந்தோம். இந்த நேரத்தில் மனோஜ் வேறு தொடர்ந்து அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தான். எதற்கு என்று தெரியவில்லை. சரணின் நம்பரும் பிஸியாகவே இருக்கிறது. இப்போது தாத்தா வேறு போன் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
“எதுக்கும் போன் அட்டென்ட் பண்ணுடி, உங்கள் தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏதாவது வந்திருக்கப் போது” என்று சான் பயமுறுத்தியதால் எடுத்தேன்.
“சீதே, உன்ன பார்க்க உன் ஸ்நேகிதனோட அம்மா வந்து ரொம்ப நேரமா காத்திருக்காங்க. அவங்க பையன் ஒரு மாசமா வீட்டுக்கே சரியா வரலியாம். உனக்கு எங்க இருக்கான்னு தெரியுமான்னு விசாரிக்க வந்திருக்காங்க. பார்த்தாலே ரொம்ப பாவமா இருக்கு.”
“யாருன்னே தெரியலையே தாத்தா எனக்கு.”
“கூட மனோஜும் வந்திருக்கிறான்.”
“மனோஜா? அவங்க பையன் பேரு என்னவாம்?” சற்று நேரத்துக்குப் பிறகு தாத்தா சொன்னார்:
“சரணாம்!”
நானும் சானும் திருவான்மியூர் ஆறாவது அவென்யூ நான்காவது தெருவிற்கும், ஏழாவது அவென்யூ முதல் தெருவிற்கும் இடையில் வழி தொலைந்து நின்றோம்.
Art : Nilankur Das
சித்ரா பாஸ்கரன் ஆங்கிலத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது ’முளைக்கா விடைகள்’, ‘கல்யாணி’, ‘வன்யா’ ஆகிய சிறுகதைகளும் ‘தற்செயலாய் வாழ்க்கை’ என்னும் கவிதையும், மார்ஷ்லேண்ட் –புத்தகவிமர்சனத்தின் மொழிபெயர்ப்புக் கட்டுரையும், சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளன.








Leave a Reply