நிர்மூலம்
கையருகே கிளைவிடும் மௌனத்தில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
என் தயவு
அகாலங்களில் தருவிக்கப்பட்ட துரோகங்களைப்
பழுக்கச் செய்து
புனரமைக்க மறந்துவிட்ட இருளால்
என்னைவிட்டு தொலைவில் போக எத்தனிக்கிறேன்
முடிவை எவரோ எழுதி
வேறு யாரிடமோ தந்து செல்கிறார்கள்
ஆனாலும்
சொல்லியிருக்க வேண்டிய தருணங்களை
உதாசீனமாய்க் கடந்திருந்தேன்
ஏற்பும் மறுப்பும் மும்முனைக் கூராய்
அறுத்து
என்னிடம் என்னைப் பரிமாறுகிறது
இம்மட்டிலும்
மிச்சம்
இரண்டு முனைகளிலும் இரண்டு
யூ டர்ன்கள் உள்ளன
மீண்டும் மீண்டும் ஒற்றை வருகையைத்தான்
உயிர் என்கிறார்கள்
பாடையில் தூக்கி வைத்து
வெகு நேரம் காத்திருக்கவும் செய்தார்கள்
ஓர் இடருக்கும் அடுத்த இடருக்கும்
நடுவே
காக்கப்பட வேண்டிய சுடரோ
எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை
எலும்பு மஜ்ஜை நரம்புச் சிக்கல் மொத்தமும்
உருகி எஞ்சும் வைகறையில்
மிச்சமெனக் கிடக்கிறது உயிர்ப் புரதம்
அதைக் கொண்டு போய்க் கரைப்பதற்கு
மேலுமொரு கடற்கரையை
வரைந்து கொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்
ஒரு லாங் பெல் அடித்து ஓய்ந்ததும்
சேகரிக்கப்படும் பண்பாட்டுக் கூறுகளில்
எது பெயர் எது நான் என்றான்
முன்பொரு
நான்
கதி
உள்ளிருந்து வெளியேற அனுமதிக்கும்
அர்த்தங்களை
இறுதிவரை தொழுது பண்படுவதைக் காட்டிலும்
அலைந்து திரிந்து
ஓய்ந்து வீழும்போது விடுகின்ற மூச்சுக் காற்றில்
பற்றி எரியட்டும் தெய்வத்தின் சாகசம்
எனது நிறமியை எழுதிப் பார்க்கிறேன்
அதனால் கார்வை இடறி
லயம் தொய்யாத காடு
இறுகுகிறது
முன்னர் பொழுதை நுணுகித் துளைக்கும் கருவி
நாக்குத்தான் என்கிறது
ஒரு கடுஞ்சொல்
தழல் அலைய
அவன் நான் இவன் எனப் பிரியும்
வேதிப் பொருள்களின் சூட்சுமத்தில்
நீந்தும் உயிர்த் துளிக்கு எதுவுமல்ல இலக்கு
ஓர் உள்
வேறொரு வெளி
Art : Simran Dhawan








Leave a Reply