அடக்கடவுளே!….
பிச்சைத் தட்டுக்குச் சில்லறை
அர்ச்சனைத் தட்டுக்குச் சிறிய தாள்
உண்டியலுக்குப் பெரிய தாள்
நானாவிதச் சில்லறைகள்
மீ சமர்ப்பயாமி யூ
புது நோட்டுக் கட்டுக்களை
யூ சமர்ப்பியாமி மீ
கடவுளை மந்திரிக்கிறான் ஒருத்தன்
நேற்றுவரை கடற்கரையில்
தம் பெயர்களைச் சேர்த்து
மணலெழுதியவர்கள்
இன்று தனித்தனி அழைப்பிதழ்களால்
இருவேறு தூரத்திலிருக்கிற
இரு மண்டபங்களுக்கு
ஒரே நேரத்தில் வரச் சொல்கிறார்கள் அவரை
எப்போதும்
சூதே வெல்லட்டுமென்கிற பிரார்த்தனை
வைரலானதைத் தொட்டு
தருமத்தின் பிருஷ்டம் தனை
விடாப்பிடியாய்க்
கவ்வியிருக்கிறது சூது
போதுமடா சாமி..
இனிச் சிலையாக இருந்து விடுவதே உசிதம்
ராஜ அலங்காரம்
திருமஞ்சனம்
ஊஞ்சல் சேவை
தெப்போற்சவம்..
கடவுளைத் தூக்கி
உண்டியலில் போட்டார் கடவுள்
“அடக்கடவுளே!!”..
என்றது அசரீரி.
தேநீர்
இந்தத் தேநீர்
என்னிடம் மாட்டிக்கொண்டு
எப்படியெல்லாம் முழிக்கிறது
ஒரு சமயம் அது
டீ மாஸ்டரின்
கையெழுத்துப் பிரதி
ஒரு சமயம் அது
புதைமண்ணிலிருந்து வெளிப்பட்ட
பழைய செப்புத்தகடு
அதன் மொழி
நானறியாததாயும் மேலும்
நான் மட்டுமே படித்துணரும்படியாயும்
நான் அதனுடன் யுகங்கழிக்கும்
கட்டாயத்திலிருந்தேன்
அரக்குச் சீலிட்ட
வாசிக்கக் கூடாத
பழுப்புக் காதித ஆவணமாகத்
ததும்பும் தேநீரைப்
பிரிக்கத் தயங்கி
வெகு நேரங்கழித்து
வீடு திரும்பியிருக்கிறேன்
அதுவொரு நீர்த்த டைரி
சில மிடறுகளில் துவர்க்கிறார்கள்
நான் நேசித்த சிலரும்
என்னை நேசித்த சிலரும்
இப்போதும் கூட
ஒருவழிப்பாதையில் மலையுச்சிக்கு
வந்திருக்கிறேன்
அந்தச் செவலை ஆட்டுக்குட்டியைத்
தடவிக்கொடுக்க
தேநீரை அருந்த
ஐந்து நிமிடங்கள் போதுமென்கிறாள் தோழி
நீங்களே சொல்லுங்கள்
ஐந்து நிமிடங்கள் போதும்தானா?
ரெங்கநாயகி
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகள்ல
அவதான்
எங்கூரு தில்லானா மோகனாம்பா
ஏழு கல்லு பேசரியோட நகநகன்னு
கன்னமெல்லாம் சேந்து மின்ன
அப்பவே
ஆறடிக்கு வளந்து நின்ன
போஷாக்குக்காரி
ஜதி புடிச்சு ஆடினான்னா
நடராஜரே சவுரி வெச்சுண்டு
ஆடின மாதிரி
திமிலோகப்படும் சபாமண்டபம்
திலகம் துலங்க
மஜந்தா கரை பட்டு உடுத்திண்டு
படியிறங்கி மாடவீதில நடந்தான்னா
கோயில் மாடெல்லாம்
எழுந்து வழிவுடும்
மூலஸ்தானம் முன்னாடி
உள்ளங்கைத் தீர்த்தம் வாங்கி
உதட்டக் குவிச்சு உறிஞ்சான்னா
அடி வயிறு சிலிர்க்க
ஆம்பிளைங்க உசிரையும் சேத்தே
உறிஞ்சுப்பிடுவா இரகஸியமா
குளக்கரைப் படிக்கட்டுல உக்காந்து
பருத்த பூவன் பழத்த உறிச்சு
கொஞ்ச கொஞ்சமா
அவ உதட்டக் கவ்விக்
கடிச்சுத்திங்கற அழகப் பாக்குற ஆண்மைக்குள்ள
அரபுக் குதிரை கணைக்கும்
அவ கடந்து போறச்சல்லாம்
பக்கத்தாத்து பாகவதர் மாமா
பிலஹரியைப் பாதியில உட்டுட்டு
“நாதிர் தின்னா…. திரனன திரனன
நாதிர் தின திரனா”….ன்னு
கூலிங் கிளாஸ் பாக்கியராஜா
தலைய சிலுப்பிக்கிட்டுப் பாடுவாரு
ரோஸ்வுட் பளபளக்கிற ஊஞ்சல்ல
அவ கால எத்தி ஆடுற வாகுல
இந்த உலகமே ஒரு நிமிஷம்
பின்னால போயி முன்னால வரும்
பேரென்னவோ
ரெங்கநாயகி தேவதாசி
ஊருக்குள்ள
ஜாதிக்காக அடிச்சுண்ட
அத்தன பயலுகளும்
பேதம் பாக்காம
அவளுக்கு தாசனாயிருந்து
சேவசெஞ்சு
பெருமையடைஞ்சவனுவதான்.
அதுவொரு மூச்சிரைக்கிற கதை
அந்தச் சிறுவனுக்கு
விளக்குப் பிடிக்கிற வேலையை வாங்க
நடையாய் நடந்தான்
குடிகார அப்பன்
கட்…
கட்…
மட்ட ரகக் கவ்வலில்
கலைந்து விட்ட
உதட்டுப் பிங்கைப்
பாதியில் எழுந்து சரிசெய்தாள்
யாரோ ஒரு அக்கா
நீளத் திரைச் சீலை
காற்றில் அசைவது போலக் காட்டுவது
கவிதையாக்கிவிடும் காட்சியை
என்கிறான் யாரோ ஒரு அண்ணன்
அவளுக்காக எழுதப்பட்ட
வசன முனகல்களை
மனப்பாடம் செய்து விட்டு
ஒரு முறை சொல்லிப் பார்க்கிறாள்
ஹா… ஹக்… ஹ்ம்..
மட்டமான வாசனை
திட்டமான வெளிச்சம்
முக்குகிற முனகல்
குமட்டுகிறது சிறுவனை
செயற்கையான நெருப்பை
கொழுத்தெரிவதாய்க்காட்ட
காமிராவைச்
சாய்த்துப் பிடிக்கச்
சொல்லிக் கொண்டிருந்தான்
யாரோ இன்னொரு அண்ணன்
வாங்கின பேட்டாக் காசு
வழுவழுக்கவுமில்லை
குமட்டவுமில்லை
வீட்டிலிருக்கிற
குடிகாரனுக்கு.
Art : Jennie Rafols








Leave a Reply