தவக்
பின்னிரவில் முதல் துளி தெறித்து
கீழுதட்டில் பட்டது
வேறெதையும்விட அவனுக்கு
அந்த முதல் முத்தம் ஞாபகம் வந்தது
அப்போதைப் போலவே
அப்படியே இருந்துவிட்டான்
துளிகள் பெருக
வாழ்வின் சாளரங்கள் ஒவ்வொன்றாகத்
திறந்தபடியிருந்தன.
நீர்மட்டம் உயர்ந்து
தயங்கித் தயங்கி ஒரு சிறு அலை
அவன் கால் விரலைத் தீண்டியதில்
நிகழ்வுக்கு மீண்டவன்
விளக்கேற்றிப் பார்த்தபோது
துளிகளால் நிறைந்த அந்தத் தனி அறை
மௌனமாய் இருந்தது
பாய்
போர்வையை வேகமாகச் சுருட்டி
மேடான மூலைக்குச் சென்று போர்த்திக்கொண்டு உட்கார்ந்தவன்
ஏய் ஜெயா
ஒழுகற இடத்தில்
ஒரு தட்டு வைத்திருக்கலாம் இல்ல
என்று தன்னிச்சையாய்க் குரலெடுக்கையில்
பதிலாக
கூரையிலிருந்து
துளிகள் மேல் ஓர் துளி விழுந்தது
தவக்.
பாவப்பட்ட மழை
பச்சிளம் மேகம்
பச்சிளம் வாசனை
ஈரம்
எறவானம்
குடைக் கம்பி
ஊறிய உள்ளங் கைகள்
தேநீர்
கவிதை…
பிறகு
வெளியே
விட்டு
சார்த்தப்படும்
கதவு.
மந்திரவாதிகள்
அவன் அங்கேயே நின்றுவிட்டான்
அவன் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கப் போவதில்லை
பிறகு நீயேன்
இத்தனை அழுத்தம் கொள்கிறாய் என்கிறீர்கள்
அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது
அங்கேயே நின்றுவிட்டதனாலேயே
அவன் தப்பித்தலாகாது
அந்த உதாசினம்
அது என்னை உச்சாடனம் செய்கிறது
நொடிக்கு நொடி
உச்சாடு
உச்சாடு
உச்சாடு
நான் அவன் திசை பார்த்து
மந்திரங்கள் முணுமுணுக்கிறேன்
மாந்திரீகம்
மாந்திரீகம்
இதோ முடிந்தது
இந்த வெற்றிலையைப் பாருங்கள்
அவன்
என் தஸ்தாவேஜுக்களைப்
பாதம் பணிந்து வாங்கிச் சென்று
கையொப்பமிடுவது தெரிகிறதா.
கையளவு குரு-1
குருவே குருவே
வயதின் மரியாதையும்
திறமையின் மரியாதையும்
ஒன்றல்லவே
யான் உங்களைப் பணிவதும் அவ்வண்ணம்தானே
எமது திறமையை ஆய்வீர்களா
ஏனிந்த குருப் பிரசங்கித்தனம்
அவசரப்பட்டு முற்படாதீர்கள்
நேர்பட்டத் திறமை அது
உங்கள் பாழ்பட்டத் திறமையினை
அடிக்கோடிட்டுப்
பணிவாய் நிற்கும்
உங்கள் நிபுணத்துவத்திற்குப்
பெருமை முலாம் பூசவேண்டும் அவ்வளவுதானே
ஒரு வார்த்தை சொல்லுங்கள்
உங்கள் திறமையின் மானத்திற்கு
ஒரு சிலை வைத்தவன் என்கிற முறையில்
உங்கள் மகோன்னத மகத்துவங்களை
நான் காத்தருள்வேன்
ஏகலைவன்கள்
தத்தமது திறமைகளையும் கூட
பிச்சைக்கு வெட்டிப் போடும்
எளிய ஆன்மாக்கள்.
கையளவு குரு -2
குருவே
சற்று அமைதியாயிருங்கள்
அம்பைக் கொடுத்துவிட்டு
ஏன் சதா குத்திக்கொண்டே இருக்கிறீர்கள்
உங்களுக்கு இலக்கென்பது
ஒரு சொல்
ஆனால் அதுவொரு
மலர் பிஞ்சு கனி
சிறகு பறவை வானம்
சுதந்திரம்
வாழ்வு
மற்றும் ஒரு சாவு
மேலும்
குருவே
நீங்கள் ஒரு கையளவு.
தந்தையும் தாயும்
நகர்புறச் சாலையில்
கைப்பற்றி அழைத்துச் செல்லும்
மகளின் விரல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்
அனிச்சையாய்
இறுகி இறுகி
இளகின அவை
நானப்போது
நம் பழம்பெரும் கிணற்றில் அவளை
நீச்சலுக்கு இறக்கிக் கொண்டிருந்தேன்
அவள் வேகத்திற்கு ஈடாகாக் கால்கள்
பின்னிக்கொள்கின்றன
இடறும்போதெல்லாம்
திரும்பிப் பார்த்து இறுகப் பற்றுகிறாள்
நானப்போது
கொஞ்சதூரமும் நடக்க மறுத்தவளை
அசதி உணர்த்த முடியாமல்
மீண்டும் தோளில் தூக்கிக்கொண்டிருந்தேன்
பிரமாண்டமான கட்டடங்கள் முன் நிற்க வைத்து
கதை சொல்கிறாள்
நானப்போது
ஐஸ் வண்டிக்காரரின் ஹாரனைத்
தயக்கத்தோடு கேட்டு
அவளிடம் தந்துகொண்டிருந்தேன்
நகரும் படியில் நிறுத்தி
என்னை அசாதாரணமாக முன்னேற்றுகிறாள்
நானப்போது
ரங்கராட்டினத்தில் ருதுவானவளை
அணைத்துக்கொண்டிருந்தேன்
பஞ்சுப் பொதியான மெத்தையில்
படுக்கவைத்து
போர்வையைக் கழுத்துவரை இழுத்துவிட்டு
நன்றாகத் தூங்கச் சொல்கிறாள்
அப்போது
உறக்கத்தில் நானிட்ட மருதாணி
சிவந்து கொண்டிருந்தது அவளுக்கு
வைகறை கலைந்தது
பரிபூரணம்
கண்கள் சிவந்து
ரெப்பைகள் கரைய
மாரடித்து அழுதுகொண்டிருக்கிறாள்
நானப்போது
என்னவாகவும்
இருந்திருக்கவில்லை.
Art : chanceee
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் கவிஞர் இயற்கை. இயற்பெயர் ஏ.சுரேஷ். செஞ்சியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேரச் சமூக அறிவியல் பாட ஆசிரியராகவும் மீத நேரம் விவசாயியாகவும் பணி செய்து வருகிறார்.
கட்டை விரல்களின் கல்லறை, கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை என இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இதில் இரண்டாவது தொகுப்பு சௌமா இலக்கிய விருதைப் பெற்றுள்ளது.
வெயில்நதி என்னும் நவீன இலக்கியச் சிற்றிதழை நடத்தி வந்தவர். நடுநாட்டு வட்டார மொழியிலான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றில் ஆர்வம்கொண்டு இயங்கி வருகிறார்.








Leave a Reply