காலத்தின் வழித்தடம்
கொடும்பாலையின்
நெடிய சமரில்
சித்தம் சற்றே கலங்கியிருந்ததில்
பிழையேதுமில்லை.
வெட்சிப் போரின்
சூட்சுமம் கூட அறியாது
சக்கரமேந்தியவள்
தன்னுடல் மட்டுமே ஆயுதம்
எனும் உண்மை துலங்குகையில்
தசாப்தங்கள் ஐந்தை
எட்டிப் பிடிக்கும் தூரத்திலிருந்தாள்.
ஓருடலையே பலமுறை
பதம் பார்த்ததில்
மழுங்கியிருந்த
துரோகத்தின் கூர்முனையை
இடக்கையால் சற்றே
விலக்குகிறாள்.
கனன்று கனன்று
நீர்க்கத் தொடங்கியிருக்கும்
பலிபீடத்தின் சாம்பலை
சட்டை செய்யாமல்
சலனமற்று
காலத்தின் கணக்கை
சரி செய்தவாறே
கலைமான் மீதேறிப்
புறப்படுகிறாள் சமரி
சாகசம்
ஒரு மலரை எடுத்து
மெதுவாக வைப்பதுபோல
எளிய செயல்தான்.
யாருமே அறியாமல்
வைப்பதால் அது சாகசமாகிவிடுகிறது.
நிகழ்ந்த பிறகு
சாகசமே எண்ணும்
அளவிற்கு.
Art : Mike Summers
கவிஞர் சுபா தொழில்முனைவராக உள்ளார். மாணவர்களுக்கான கலை, மொழி, பண்பாடு சார்ந்த பயிலரங்குகளை நடத்தும், பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். ‘கடலெனும் வசீகர மீன்தொட்டி’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.








Leave a Reply