பருவம்
ஐந்தாயிரம் வருட நாகரீகம் பழக ஐந்து வருடங்கள் போதும் எனக்கு.
உன் மொழி கற்று ஏசுவேன் உன்னை மூன்று வருடங்கள் மட்டும் தா எனக்கு.
இசை? தாளங்கள் கருவிலேயே பழக ஆரம்பித்து விட்டேனே தெரியாதா உனக்கு?
அழுகை எனும் ஆயுதம் கொண்டு காரியம் சாதிப்பேன் மனோதத்துவமும் தெரியும் எனக்கு.
விஞ்ஞானம் மிகவும் பிடிக்கும் எனக்கு, பிரித்துச் சிதைத்து விடுவேன் சிரமம்தான் உனக்கு.
செல்வந்தன் நான், தொலைத்த பொருளைத் தேடும் பழக்கமில்லை எனக்கு.
மெய்ஞானமும் வரும் எனக்கு, தூங்கும் போது ஆடைகள் தேவையில்லை எனக்கு.
பாம்பைப் படிப்பேன், நெருப்பைத் தொடுவேன், பயம் என்பதே இல்லை எனக்கு.
தூக்கம் –விழிப்பு, விழிப்பு- தூக்கம், காலம் காலடியில் எனக்கு.
யானைகளைத் தூக்கி வீசுவேன், பூதங்களை விழுங்குவேன், முயல் வீட்டில் குடியிருப்பேன்,
பட்டாம்பூச்சியின் முதுகில் பயணம் செய்வேன் கற்பனை சற்று அதிகம் எனக்கு.
வேற்று கிரகம்தான் இது எனக்கு, சற்றே பொறு அடிமையாக்குவேன் உன்னை எனக்கு.
என் கடைக்கண் பார்வைக்காக தினம் ஏங்குகிறாயே? காதலியா நான் உனக்கு?
என் பாதம் தொழுது முத்தமிடுகிறாயே பலமுறை? கடவுள் நான் உனக்கு.
பாவம் மழலை, என்று மட்டும் சொல்லிவிடாதே அவமானம் எனக்கு.
அன்று
இசையும், இயற்கையும் இதயத்தில் சலனத்தை ஏற்படுத்தின அன்று
சாலையோர மரங்கள் ஸ்நேகமாய்க் கையசைத்தன அன்று
நேரம் கெட்ட வேளைகளில் அலைகளுடன் விளையாட ஆசை தோன்றும்
உணர்ச்சிவசப்படுதல் பழக ஆரம்பித்த தருணம்
மகிழ்ச்சிக்கும், கண்ணீருக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று புரிந்த காலம்.
இரகசியத்தை ஒரு பனிக்கட்டி போல் இதயத்தில் ஒளித்து வைத்த காலம்
சுற்றத்தைச் சட்டை செய்யாத உடல் மொழி
நொடிப்பொழுதில் மாறும் முகபாவனைகள்
கண்ணாடியில் முகம் பார்த்துச் சிரிக்கும் மடமை
கடற்கரையில் சிப்பிகளனைத்தும் உடையில் அள்ளும் சிறுமியின் பேராசை
சாளரத்தின் வழியே கைநீட்டி முதல் மழைக்காகக் காத்திருந்த தருணம் ….
—இன்று
மண்டைக்குள் எப்பொழுதும் ஒரு வண்டு துளை போட்டுக்கொண்டிருக்கிறது
விழிப்பும் முழிப்பும் வித்தியாசமில்லாமல் நகர்கின்றன
துள்ளும் இசை இதயத்தில் அசைவின்றிக் கடந்து செல்கிறது
சிருங்கார ரசம் இதயத்தைத் துளைக்கிறது
ஓயாமல் அடிக்கும் அலையும், கையசைக்கும் சாலையோர மரங்களும்
சாலை நிரப்பும் வசந்தமும் குதூகலம் அளிக்கவில்லை
இசையும், இயற்கையும் இதயத்தில் சலனத்தை ஏற்படுத்தின அன்று
இன்று இதயத்தில் சலனமே இல்லை
‘காலத்’ தந்தை கைப்பற்றி இழுத்துச் செல்கையில் சிப்பிகளனைத்தும் சிதறிய சோகம்
நொடிப் பொழுதில் சேர்த்த உறவுகளை உதறிவிட்டுச் செல்லும் நிர்பந்தம்
மகிழ்ச்சி, சோகம் இரண்டுக்கும் துணை போகும் மழையின் விசித்திரம்
சலனம், நிர்மூலம், அமைதி முற்றும் துறந்த பின் வருமா? இல்லை முற்றும் இழந்த பின் வருமா?
அகநானூற்றுப் பாடலாய் வாழ்க்கை!
வசந்தம்
ஐந்து நிமிடத் தேநீர்ச் சந்திப்பில் வாழ்க்கைத் துணை
திடீர்ச் சொந்தங்களின் ஸ்நேகப் புன்னகை
பத்துப் பொருத்தம் இருப்பதாகச் சொன்ன ஏரிக்கரை ஜோதிடர்
மோதிரம் மாற்றினால் நிச்சயம்
ஊருக்குப் பறைசாற்ற மங்கள நாண்
நினைவுகூர முடியாத அந்த முகத்திற்காகச் சிவக்கும் மருதாணி
நிச்சயிக்கப்பட்ட திருமணம் – திணிக்கப்பட்ட வசந்தம்
ஐந்து நிமிடத் தேநீர்ச் சந்திப்பிற்காகப் பேருந்து நிலையத்தில் பலமணிநேரக் காத்திருத்தல்
கணினித் திரையிலும், கைப்பேசியிலும் இரகசியமாய் ஓர் நிழற்படம்
அவன் சார்ந்த அனைத்தையும் ஸ்வீகரித்துக்கொள்ளும் அவளின் ஆளுமை
கர்வம் தவிர்த்து மண்டியிடும் ஆண்மை
பலநூறு முறை கைத்தலம் பற்றுதலே தலைவனுக்கான தகுதி
அவன் இருகைகளே அவளின் தோள்களில் மாலையாய்
முரண்களும், கருத்து மோதலையும் தாண்டி இழைந்தோடும் மனப் பொருத்தம்
காதல் திருமணம் – வெடித்துச் சிதறும் பருத்தி மரம்
Art : Rocío Licanno Pacheco-Weremëreg
சித்ரா பாஸ்கரன் ஆங்கிலத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது ’முளைக்கா விடைகள்’, ‘கல்யாணி’, ‘வன்யா’ ஆகிய சிறுகதைகளும் ‘தற்செயலாய் வாழ்க்கை’ என்னும் கவிதையும், மார்ஷ்லேண்ட் –புத்தகவிமர்சனத்தின் மொழிபெயர்ப்புக் கட்டுரையும், சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளன.








Leave a Reply