இழிச் சொற்களே பாதைகளாக, இழிச் சொற்களே கட்டிடங்களாக, இழிச் சொற்களே மனிதர்களாக நிறைந்துள்ளது எனது வெளி. புழங்கமுடியவில்லை. சமூகத்தோடு புழக்கம் என்பது உயிர்களோடு என்பதன்றி இழிச்சொற்களோடு என மாறாட்டமிட்டுள்ளது. இந்த இழிச்சொற்களின் காலம் அண்மையமானதா என்றால் ஆம் என்பதும் இல்லை என்பதும் இரு உண்மைகளாக விரிவுகொள்கிறது. இவ்வகையில் எனது நிகழ்காலம் என்பது இறந்தகாலத்தின் இழிச்சொற்களின் மறுபிரசவிப்பாகவும், நிகழ்காலச் சமூகப் புலகத்திற்கான உளவியல் தடையாகவும் விளைந்து நிற்கிறது. மேலும் இந்தப் பின்தொடரும் இழிச்சொற்களின் கூட்டமானது எனது இயல்பின் காட்சிகளைத் துண்டித்து, அந்த இழிச்சொற்களையே காட்சிகளாகப் பரிணமிக்கச் செய்கிறது. இதில் எனது இருப்பென்பதை அவலக்காட்சியாக, கேலிக்கைப் பொருளாக கழிவிரக்கத்திற்கான பண்டமாக பிறர் கண்களை நிறைக்கிறது. எனது அசல் குணாம்சம்மான எதிர்ச்சொல், எதிர்ச் செயல், எதிர்ப் பிம்பம் என்பது பிறரால் அறியவேபடாத அல்லது அறிந்துகொள்ளவே விரும்பாத விடுபடலாகச் சேகரமாகிறது.
இந்தத் தெருவைக் கடக்கிறபோதுதான், இதோ இந்தப் பச்சை வண்ணம் பூசப்பட்ட வீட்டிற்குள்ளிருந்துதான் “வீட்டு முன்னாடி நிக்காதிங்கடா பற நாய்ங்களா…” சொற்கள் விரட்ட விரட்ட நாங்கள் தெருத் தெருவாக ஓடினோம். இன்றும் அந்தத் தெருக்களைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் அந்த வீட்டிலிருந்து குரல் வந்து விரட்டுகிறதோ இல்லையோ எனது கால்கள் நடையை மறந்து ஓடவே விரும்புகிறது. அன்று செவிக்குள் ஒலித்த ஒரு குரல் நீண்டு, வீடுகளின் குரலாக, தெருக்களின் குரலாக வளர்ந்திருக்கிறது. நானும் ஓட்டத்தையே நடயென, பதற்றத்தையே இயல்பெனவும் நம்பினேன். பின் வருடங்களில் அப்பகுதியில் என்னுடன் பயின்ற பல நண்பர்கள் இருந்தனர். அவர்களின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். பண்டிகை தினங்களில் உணவும் வழங்கினர். எல்லாம் மாறிப்போயிருப்பதாய்ப் புறமும் சான்று பகர்கின்றது. ஆனால் அகம் பழைய சுருக்கத்திலிருந்து விடுபட இன்னும் வேறு தேவை ஏதோவொன்று இருப்பதைச் சுட்டிக்கொண்டேயிருந்தது.
முன்னர் சுடுகாடு இப்போது அது எங்கள் வீடு. ஒரு கோடையில் எங்கள் வீடு கொழுந்துவிட்டு எரிந்தது. வீடு கட்ட வானம் தோண்ட சாம்பலும் எலும்புகளும் அள்ள முடியவில்லை. சிசுவற்ற வீட்டில் ஆடியது தொட்டில். பால்கட்டும் இரவுகளிலெல்லாம் பீச்சியடிக்கிறது தாலாட்டு. வீட்டின் தெற்கு மூலையில் கசியும் கேவலில் கன்னிவாசனை. வடக்கு மூலைக்குச் சூடம் ஏற்றச் சொல்லும் தாத்தா. பெண் தெய்வம் உள்ளது என்கின்றார். அம்மாவின் மேல் அவ்வப்போது முனி வந்து ஆடும். பேய்களும், சாமிகளும், மரணமும், வாழ்வும், சுடுகாடும், வீடும், எது நிழல் எது நிஜமென அறியாது ஒரு கூட்டு வாழ்வு, கூட்டு அச்சத்திற்குப் பஞ்சமின்றி இருந்தது.
தினம் இரவு என்பது பாழுங்கிணறு. தாய் தனது ஐந்து குழந்தைகளோடு தினந்தினம் அந்தக் கிணற்றை நெருங்கி எட்டிப் பார்ப்பதும், பின் நீண்ட நேரம் அழுது கொண்டு நிற்பதும்… நான் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு அண்ணாந்து அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசித் தம்பி அவளது கையில் இருந்தான். அம்மா கிணற்றுக்குள்ளே வீசிவிடாதே என்று கூறவேண்டும்போல இருந்தது. ஆனால், கூறவில்லை. அழுதுகொண்டுமட்டுமே இருந்தேன். அன்று விழுந்ததுபோல் இன்று எங்களுக்குப் பதிலாய் அந்த நிலா வேகமாக உச்சி ஏறி கிணற்றுக்குள் விழவேண்டும். “அசன் அலி முதலாலிக்குத்தானே இதுகலப் பெத்த அவன்ட்ட போயி சோத்துக்குக் கேளுடி” என்ற அப்பாவின் குடி போதை உளறல் இந்நேரம் தெளிந்திருக்கும். கோழிக்குண்டு கண்களை உருட்டி இதோ நாய் வந்துவிட்டது. அதைத்தொடர்ந்துதான் அப்பாவின் இருமல் சத்தம் எங்களை நெருங்கும். அப்பாடா இந்த இரவும் நாங்கள் கிணற்றுக்குள் விழவில்லை.
தோல் பதனிடும் தொழிற்சாலையில் சுண்ணாம்புக் குழிக்குள் வெந்து அழுகிய எனது அப்பாவின் குறியைத்தான் இந்த மாநகரச் செருப்புக்கடையில் லெதர் ஷுக்களாக, லெதர் செப்பல்களாகப் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளதோ…! அப்பா இறந்த அன்று அவரைக் குளிப்பாட்டிய பொழுதுதான் பார்த்தேன் அந்த அழுகிய குறியை. சுண்ணாம்புக் குழியில் வெந்து தான் ஒங்கல வளர்த்தேன் என்று அவர் கூறிய சொற்களும்… பின் தொடர உருவாகும் சமூகச் சித்திரம் புதிர்த் தன்மை மிக்கதாகயிருந்தது.
வேலைக்கு முன்னான குடி, வேலைக்குப் பின்னான குடியைக் காணும்போது இவரின் பிறப்பு குடிப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டதா என எண்ணத்தோன்றும். இவரின் இருப்பு வேலை செய்வதற்காக மட்டுமே நெய்யப்பட்டதா….. இவரின் வாழ்வு? இவரின் கனவு?… ஒன்றே ஒன்றுதான் குடி மற்றும் வேலையையே வாழ்வாகவும் கனவாகவும் இவரின் மீது முலாம் பூசியுள்ளனர். அவரும் நாளெல்லாம் உழைத்துத் துவண்டுகிடக்கும் தனது உடலை நாளை வேலைக்கு முகத்தில் சாராயம் அடித்து எழுப்பிக்கொண்டிருந்தார். நானோ குடிகாரன் பிள்ளையாக நடுத்தெருவில் தள்ளாடி வருபவர்கள் உருதோறும் அப்பனின் சாயலைத் தேடிக்கொண்டிருந்தேன். வயிற்றுப் பள்ளத்திற்குள் அப்பா வந்து நிறைவதற்குள் குடிகாரன் பிள்ளை என்கிற சொல் நீங்கமர நிறைந்து விடுகின்றது. எதை நீக்க எதைத் தாங்க… புரிந்து கொள்ள முதலில் முனைகின்றேன் அதற்காகவே எழுத விளைகிறேன்.
எதனால் இது நிகழ்கிறது என அறியாதிருந்த வயது. “போடா பறப்பயலே” என விரட்டியடிப்பதும், மீறி நின்றால் தண்ணீர் ஊற்றுவதும், “வெளியே நின்று ஜன்னல் வழியா டி.வி. பார்த்திருக்கிறோம்” என்ற தயக்க சொற்கள் அவர்களின் செவிப்பறையைச் சேர்ந்ததேயில்லை. எந்தக் காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டோம். எந்தக் காரணத்திற்காகத் துரத்தியடிக்கப்பட்டோம் என்பது தெரியாதபோதும் எதிர்வினையா அவர்களின் வீட்டுக்கதவை வேகமாகத் தட்டிவிட்டு ஓடிவிடுவதும், அவர்கள் வீட்டுப் பூத்தொட்டிகளை உடைப்பதும் பெரும் கழகச் செயல்பாடாக இருந்திருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் தாகத்திற்கு நீர்கேட்க, எனது சாதிப் பெயர்கேட்டு கொட்டாங்குச்சியில் நீர்கொடுக்க அதை வேண்டாம் என்ற மறுத்துத் தாகத்தோடே அன்று மதியம் முழுவதும் ஏன் இருந்தேன் என்று தெரியவில்லை. நடந்ததை யாரிடமும் கூறாமல் தனியே அழுதுகொண்டே இருந்ததும் ஏன் என்று தெரியவில்லை. இன்று அந்த வீட்டை, வீதியை, பள்ளியைக் கடக்கின்றபோதெல்லாம் மாயக்கரம் ஒன்று கொட்டாங்குச்சியில் நீரை நீட்டுவதும் நான் மறுத்து ஓடுவதும் அக்கரங்கள் என்னைத் துரத்துவதும் எனது சமூக ஊடாட்டத்தில் ஒருவிதப் பதற்றத்தையும் நடுக்கத்தையும் கொடுப்பது தொடர்கிறது. இது எவ்வகையான சித்ரவதை, இது எதனால் ஏற்பட்டது. இன்னும் இன்னுமாய் இது ஏன் தொடர்கிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி இழிச்சொற்களால் விரட்டியடிக்கப்பட்டுச் சிக்கலுறும், சிதைவுற்ற உளவியலை மீட்க கலையை, இலக்கியத்தைக் கருவியாகத் தெரிவு செய்திருக்கின்றேன்.
Art : Vanessa Fusco
திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் திண்டுக்கல் ஞானப்பிரகாசியார் புரத்தைச் சேர்ந்தவர். ஓவியரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவரது இயற்பெயர் பூண்டி ஜெயராஜ் ஆகும். ஜெயராஜின் பெற்றோர் தோல்பதனிடும் தொழிற்சலையில் வேலை செய்கின்றனர். இவர் தேவகோட்டையியிலுள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
புதிய கோடங்கி, ஏர், தலித் முரசு, உயிர் எழுத்து முதலிய இதழ்களில் தன் கவிதைகளை எழுதிவருகிறார். கொஞ்சோண்டு, நாச்சிமுத்து, ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம், ஒரு கொடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம், உச்சி சூரியனில் முளைக்கும் பனை ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.








Leave a Reply