ஊருக்குள்
ஊருக்குத் தெரியாமல் பூத்திருந்த தனிமை
தினமும் பேருந்தில் காண்கிறேன்
கொடுத்து வைத்தவர்
யாரோ எவரோ
கடைசி வரை தெரியவில்லை
பரபரப்பான நெடுஞ்சாலையிலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ளது
ஊருக்குள்
ஊருக்குத் தெரியாமல் பூத்திருந்த ஓர் இடத்தைப் போல
தனித்து விடப்பட்ட
எளிய
பழங்கால திருச்சபை மாதிரி
கூடவே எழுந்தருளியுள்ளது
ஒரு ஒண்டி மரத்தடி
சாமரம் வீசி உபசரிக்க
கிடையாய்க் கிடந்து
யாருக்குத்தான் அந்தத் தனிமையோ…?
என் அழிவிற்குக்
காரணமில்லாத என் பக்கம்
நான் நின்றால் போதாதா ?
ஒரு ஊரைச் சுற்றிப் பார்ப்பது மாதிரி தனதூரைப் பார்க்காதவன் போல
ஒரு குணமிருந்தது
வேண்டுமென்றே ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளாத
ஒரு பழக்கம் இருந்தது
எப்படியாவது பணத்தைப் புரட்டிக்கொண்டு வாழும் கடமை இல்லாமலிருந்தது.
கைமீறித் தாமதமாயினும்
இதெல்லாம் புரியும் காலமொன்று
எனக்கென வந்தபோது
பக்க பலமாய்
என் அழிவிற்குக் காரணமில்லாத
என் பக்கம்
நான் நின்றால் போதாதா?
பாதைகளை வகுத்துக்கொள்ளாத உயிரிகளின் உலகு
மனிதாபிமானமற்ற உலகை
ஒருமனிதாபிமானியாக
பார்த்துக்கொண்டிருக்கும் வேளை
என்னை யாரேனுமப்படி
கவனித்துக்
கொண்டிருக்கிறார்களா என
நோட்டமிட்டேன்
கேட்கும் இடங்களில் உள்ளோர்
பலனில்லை என்கிற திருப்பத்தை எடுத்து
அந்தி தாழும் ஊரினில் இறங்கி
பாதைகளை வகுத்துக்கொள்ளாத உயிரிகளின் உலகில்
கலந்துகொண்டிருக்கிறார்கள்
வேண்டுமென்றே செய்யப்பட்ட உண்மையைப் போல
அவர்களை
அப்படி
பார்த்துக்கொண்டிருந்ததைச்
சட்டெனத் தவிர்த்தேன்
பரஸ்பரம்
நடையைக் கட்டினேன்
எனதுலகுக்கு.
Art : FANTAZMA








Leave a Reply