ஆணவம் என்பது தற்பெருமை, அகங்காரம் அல்லது நான், எனது என்கிற எண்ணமாகும். சைவ சித்தாந்தத்தில் ஆணவம் என்பது ஒரு அடிப்படை மலமாகும். இந்த மலத்தின் நாற்றம் இப்போது நம் நாசியை வருடிக் கொண்டிருக்க ஆணவக்கொலைகள் அடுக்கடுக்காக அரங்கேறிக் கொண்டே உள்ளன.
‘நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள் தெரியுமா? உங்களை ஏன் கைது செய்திருக்கிறார்கள் தெரியுமா?” என்று நீதிபதி கேட்க அதற்கு அந்த மனிதன், “தெரியுமே என் மகளை நான்தான் கழுத்தில் கயிற்றை இறுக்கி, மரத்தில் கட்டிக் கொலை செய்தேன்” எனப் பதில் சொல்கிறார். இந்தியா முழுவதும் காதலித்து மாற்றுச் சாதியில் திருமணம் செய்யும் தம்பதிகளை ஆணவக்கொலை செய்வது தொடர் நிகழ்வாகிவிட்டது.
“இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா என் மகளுக்குச் சாதின்னா என்னான்னே தெரியாது சார்” என ஒரு தந்தை சொல்கிறார். அதே தந்தை தன் மகளைக் காதலித்த பையனைத் திருமணம் பேசி முடிப்போம்ன்னு வரவழைத்துச் சாலையில் பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளும் பயங்கரம், இந்நொடிவரை நடந்தேறிக் கொண்டுயிருக்கிறது. ஆவணக் காப்பகத் தரவுகளின் படி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 2100 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இது அரசாவணங்கள் காட்டும் கணக்கு. ஆனால் கணக்கில் வராதது ஏராளம்.
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மொத்தம் 23 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன்பின் 2025வரை நடந்த கொலைகளுக்கான வழக்கு நடைபெற்று வருகிறது.
90 களில் பட்டியில் சாதியைச் சேர்ந்த ஆணும், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்தால், அதில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஆணை ஆணவக்கொலை செய்துவிட்டு பெண்ணை அழைத்துச்சென்று விடுவார்கள். இப்போது இருவரையும் கொலை செய்யும் மாற்றம் நடந்தேறி வருகிறது. இருப்பினும் இந்த ஆணவக்கொலைகளில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முதலில் பட்டியல் சாதியினர்தான் குறிவைக்கப்படுகிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரித்துள்ள சாதிய ஆணவக் கொலைகளுக்குச் சாதிய இறுக்கம் ஒரு முக்கியக் காரணம். இதற்குமுன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதி, அவர்களின் இரு குடும்பமும் அவர்களின் அருகிலிருக்கும் இரண்டு, மூன்று வீடுகளோடு அந்த விஷயம் முடிந்துவிடும். ஆனால் இப்போது ஊர், சொந்தம், சாதிக்காரர்கள், சாதிச்சங்கங்கள் என இத்தனை பேர் அந்தத் திருமணத்திற்குள் வருகிறார்கள். சமீபத்தில் நடந்த கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் இத்தனை பேர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயத்தின் காரணத்தால்தான் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. இங்கு பொருளாதார அடிப்படையைவிடச் சாதியின் பெருமை அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
குறிப்பாக முற்பட்ட சாதியெனப் பீற்றிக்கொள்ளும் கோயில் அர்ச்சகர்களில் மாத வருமானம் அதிகபட்சம் 20,000 தான் இருக்கும். இது உண்டியல் மற்றும் டிரஸ்ட் மூலம் கிடைக்கும் வருமானம். அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக மத்திய மாநில அரசுகள் கருதுகின்றன. ஆனால் ஏழை அர்ச்சகரின் மகளை ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து லட்சத்தைத் தாண்டி மாதச் சம்பளம் பெறும் பட்டியலினப் பையன் காதலித்துத் திருமணம் செய்ய நேர்ந்தால், அவன் பொருளாதாரம் அங்கே அடிபட்டு பட்டியல் சாதி மேலோங்கி அந்தப் பையனை ஆணவக்கொலை செய்ய நேரிடும். சரி முற்பட்ட சாதி மட்டுமா எனப் பார்த்தால், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட சாதிகளில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் ஆண் பட்டியல் சாதி என்றால் அடித்தோ அல்லது வெட்டியோ கொன்று விடுகிறார்கள்.
இங்கே பொருளாதாரத்தை விட சாதி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஆணவக் கொலைகளைத் தடுக்க நாட்டில் சட்டம் இல்லையா? இருக்கிறது. அதை யார் சரியாகப் பயன்படுத்துவார்கள். சட்டம் போடும் அரசியல் இயக்கங்கள் முதலில் மாற வேண்டும். காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும். நீதிமன்றமும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
ஒரு ஆணவக் கொலை பட்டப் பகலில் நடக்கிறது அதைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள். காவல்துறை முதல் குற்றாணை பதிவுருத்தி அதில் இரு தரப்புப் புகார்களையும் கேட்டறிந்து அவர்களுக்குச் சாதக பாதகம் பார்க்காமல் சாதியின் அடிப்படையில் குற்றம் பதியப்பட்டு சாட்சி என்று ஒரு சம்பிரதாயமாக உருவாக்கி அந்த சாட்சியும் மிரட்டலுக்குப் பயந்தோ அல்லது கையூட்டு வாங்கிக் கொண்டோ பிறழ் சாட்சியாக நீதிமன்றத்தில் மாறி குற்றவாளிக்கு ஆதரவாக அல்லது குழப்பும் விதமாக நீதிமன்றத்தை ஏமாற்றுவது.
ஒரு ஆவணக் கொலை நடந்திருக்கிறது, ஒரு உயிர் துள்ளத் துடிக்கச் செத்திருக்கிறது. கொலையான குடும்பத்தினர் ஐந்தாண்டோ, பத்தாண்டோ நாயாக அலைந்து தீர்ப்பு வாங்குவது பற்றி தெரியுமா? அந்த வழக்கு காலம் கடந்து வீரியம் நீர்த்துப்போய் இறுதியாய் அப்படி ஒரு குற்றமே நடக்காதது போன்று தீர்ப்பு கிடைக்கிறது. உண்மையான குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார். இதன்பின்பு மீண்டும் எவ்விதப் பயமுமின்றி ஆணவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
ஆணவம்? விஞ்ஞானபூர்வமாகப் பார்த்தால் மனிதர்களுக்குள் நிச்சயமாக இல்லை எனக் கூறுகிறது. சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மனிதர்களுக்கு ஆணவம் இருந்ததா மொழி இருந்ததா? சாதி இருந்ததா? வேட்டையாடி, குகைகளிலும் மரக்கிளைகளிலும் உறங்கி வேட்டையாடிய பண்டங்களை அனைவரும் பகிர்ந்து உண்டு கழித்தனர். யாரும் யாருடனும் இனச் சேர்க்கை செய்து கொள்ளலாம் அங்கே ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாகுபாடு யாருக்கு யார் பிறந்தார்கள்? யார் யாருடைய உறவு என்பது கிடையாது. அதனால் அங்கே ஆணவம் கிடையாது.
ஆற்றங்கரை நாகரீகம் வளர்ந்து பண்டமாற்றமுறை அழிந்து காசு பணம்தான் எல்லாம் ஆன பின்பு வந்ததுதான் ஆணவம். பணம் ஒருவனிடம் மட்டுமே குவிந்து அவன் ஜமீன்தாராக மாறி ஆயிரக்கணக்கான நிலங்களை ஆக்கிரமித்து ஆள் தேள் வைத்து ஜம்பம் அதிகமானதும் வந்ததுதான் ஆணவம். முதலில் ஆணவம் கிராமங்களில்தான் இறுக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணம் படிப்பறிவு இல்லாதது. அப்படியே படித்த இளைஞர்களால் படிக்காத ஊர்ப் பெரியவர், ஊர்த் தலைவர், சாதித்தலைவர் சொல்வதை வன்முறையைத் தூண்டக்கூடிய நிலை உருவாகிறது.
முதலில் அரசியல் அமைப்புகள் கிராமத் தலைவராக ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால் அவர் முதலில் சாதி அடிப்படையில் வேட்பாளராக இருக்கக் கூடாது என்று கண்டறிந்து அவரைத் தேர்தலில் நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இரண்டு, படித்த பட்டதாரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆணவத்தனமான முடிவுகள் எடுப்பது கொஞ்சம் குறையும்”. இவற்றைக் குறைக்க வேண்டும் என்று எத்தனை சட்டங்கள் போட்டாலும் அதைக் குடிமக்கள் உணர மறுக்கிறார்கள்.
ஆணவத்திற்கு அடிப்படைக் காரணம் பல சொல்லலாம் மிக முக்கியமானது :
1) அறிவு இல்லாமை (2) சாதித்திமிர் (3) உலகியல் பட்டறிவு இல்லாமை (4) நெருங்கிய உறவு விட்டுப் போய்விடுமோ என்பதால் எழும் சினம் (5) மறைவான பிற காரணங்கள் (6) தன் பிள்ளைகள் மீது அன்பு இல்லாமை (7) ஊரும் உறவும் என்ன பேசுமோ என்ற வீணான எண்ணங்கள். இவைதான் ஆணவத்தின் அடிப்படைக் காரணம். ஆணவக் கொலைகளில் கருக்கலைப்பு செய்வது கூட ஆணவக்கொலைதான் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆணவக்கொலைக்கான ஆத்திரத்தையும் பதற்றத்தையும் சமூக அக்கறையாளர்கள் கொட்டித் தீர்ப்பார்கள். அதேவேளையில் அதற்கு எதிராக ஆதரவாக மற்றொரு குரல் ஒலிக்கிறது.
கிறிஸ்தவ அமைப்புகள் குறிப்பிட்ட ஹிந்துக்களை மதம் மாற்றி விடுகிறார்கள். அந்தக் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த இளைஞர் பெரும் பணம் பெற்றுக் கொண்டு மதம் மாறுகிறான். லயோலா கல்லூரி, வேறு பிற கிறிஸ்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து அமெரிக்கா சென்று கைநிறைவாகச் சம்பாதித்தது உடன் வேலை பார்க்கும் உயர் ஜாதி பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்போ அந்தத் தற்கொலைக்கு யார் காரணம்? புனிதமான காதலா சாதி மறுப்புத் திருமணமே காரணம் என்கிறது ஒரு குரல். இல்லையென்றால் அந்தப் பெண்ணை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்வது ஆணவக் கொலைதானே.
அரசியல் தலைவர்கள் இதுப்பற்றிக் கருத்துக் கூறுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் இரு தரப்பில் இருந்து கிடைக்கும் வாக்கு வங்கி சிதைந்து போகும் என்ற சுயநலத்தால்தான்.
நெஞ்சைப் பதற வைக்கும் ஆணவக் கொலைகளின் உச்சம்
1) 2012 தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞன் இளவரசன், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திவ்யா இருவருக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் இருவீட்டாரின் எதிர்ப்பை மீறித் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருதரப்பினர் ஜாதித் தலைவர்களின் தூண்டுதலால் கலவரம் வெடித்தது. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள, மேலும் கலவரம் உச்சமடைந்தது. இதனால் திவ்யா தனது தாயாருடன் சென்றுவிட, மறுநாள் இளவரசனின் உடல் அரசுப் பள்ளி பின்புறமுள்ள தண்டவாளத்தில் கிடந்தது.
இது தொடர்பாக தமிழகமே அதிர்ந்தது. அரசியல் தலைவர்களும் சாதிச் சங்கத் தலைவர்களும் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவிப்பது போல் விளம்பரம் தேடிக் கொண்டார்கள். பத்திரிகையும், ஊடகங்களும், தனது வருமானத்தைப் பெருக்கிக் கொண்டன. கருத்தாளர்கள் என்ற பெயரில் கதைத்துக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள், ஊடகத்தில் தோன்றி உச்சபட்ச வசனம் பேசி அடுத்த விவாதத்துக்குச் சென்று விட்டார்கள். இன்றளவும் அந்தத் தண்டவாளத்தில் இளவரசனின் ரத்தம் உறைந்து கிடைக்கிறது. அதன் மீது ரயில்கள் ஏறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆணவக் கொலைகள் அடங்காமல் ஆர்ப்பாரித்துக் கொண்டே இருக்கின்றன.
2) 2014-ஆம் ஆண்டு இராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்-வைதேகி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டுத் தப்பித்து ஓடி கேரளாவில் வசித்து வந்தவர்களை வைதேகியின் பெற்றோர் நம்ப வைத்து தேனிக்கு அழைத்து வந்து, கழுத்தை நெரித்துக் கொன்றனர். மேலும் வைதேகி ஐந்து மாதம் கர்ப்பிணிப் பெண் என்று கூடப் பார்க்காமல், கொலை செய்து வைகை ஆற்றங்கரையில் புதைத்துத் தன் சாதி ஆணவத்திமிரைக் காட்டினார்கள்.
3) அதே 2024 உசிலம்பட்டியைச் சேர்ந்த திலீப் குமார் – தேவி இருவரும் காதலித்து வந்த நிலையில் விமலாவின் குடும்பம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்பெண் மனமுடைந்து தனிமையானாள். இதனைத் தொடர்ந்து விமலாவுக்கு வேறு திருமணம் ஏற்பாடு செய்ய அதை அவள் மறுக்க அவளை அடித்துக்கொன்று யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் பெற்றோர் நாடகமாடினார்கள்.
4) 2015-இல் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், சுவாதி காதல் செய்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு நாள் கழித்து கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் கிடந்தார். இதற்கு யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுப் பின்பு விடுவிக்கப்பட்டார். இதை விசாரித்த டி.எஸ்.பி தற்கொலை என்று முதல் குற்ற விசாரணை தயாரித்து கொலையாளிகளைத் தப்பிக்க வைத்தார்.
5) 2016 உடுமலையைச் சேர்ந்த சங்கர் – கௌசல்யா காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்தனர். இவர்களை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மக்கள் திரண்டிருக்கும் பஸ் ஸ்டாண்டில் வைத்து மக்கள் மத்தியிலும் சி.சி.டி.வி கேமரா பார்வையோடு துடிதுடிக்க வெட்டிக் கொன்றார்கள். நீதிமன்றத்தில் சாட்சிகளின்றி கெளசல்யாவின் தந்தை மற்றும் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
6) 2018 கிருஷ்ணகிரி ஓசூரில் நந்திதாஸ் – சுவாதி இருவரும் எதிர்ப்புகளை மீறித் திருமணம் செய்தார்கள். இவர்களை ஏற்றுக்கொள்வதாகப் பொய் சொல்லி காரில் அழைத்துச் சென்று அடித்து நொறுக்கி சுவாதிக்கு மொட்டை எடுத்து மூனு நாமம் சாத்தி- முகத்தைச் சிதைத்து- காவிரி ஆற்றில் வீசிச் சென்றனர்.
7) 2019 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கனகராஜ் – தர்ஷினி காதல் திருமணம் செய்தவர்களை கனகராஜ் அண்ணன் வினோத் இருவரையும் கூலிப்படையை வைத்து நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துவிட்டார்.
8) இதைப் போன்று தெலுங்கான மாநிலத்தில் 2018-இல் நடந்த ஆணவக் கொலை இந்தியாவை உலுக்கியது. வசதியான பெண் அமிர்தா ஏழைத் தொழிலாளியின் மகன் பிரேன் இருவரும் காதலித்து வந்த நிலையில் எதிர்ப்பு மீறித் திருமணம் செய்து கொண்டனர். ஐந்து மாதத்திற்குப் பிறகு அமிர்தா கர்ப்பமடைந்தாள். அமிர்தாவின் அப்பா மாருதிராவ் கூலிப்படையை வைத்து பிரேனை வெட்டிக் கொன்றார். அமிர்தா நியாயம் கேட்டு, நீதிமன்றத்திற்கும் வீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறாள். கையில் ஒரு மாதக் குழந்தையுடன்…..?.
திருநெல்வேலியில் ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை மனிதநேயத்திற்கு எதிரான கொடூரமான செயலாகும். சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த கவின்குமார் தன் சொந்த ஊருக்கு வரும்போது, சரவணன் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல் உதவி ஆய்வாளர்கள். தனது நீண்டகால நண்பர் சுபாஷினியோடு கல்லூரிக் காலம் முதல் பழக்கம் ஏற்பட்டு கவின் பழகி உள்ளார். இதைத் தெரிந்துகொண்ட சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், கவின் குமாரைத் திட்டமிட்டு அழைத்துச் சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். இதுபோன்று தமிழகமெங்கும் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நெஞ்சம் பதறப் பதற நடைபெற்று வருகின்றன.
எங்கு யார் ஆணவக் கொலை செய்யப்படுகிறார்கள் என ஆராய்ந்து பார்த்தால் தலித் ஆண், பெண் தலித்துக்கள் அல்லது பழங்குடிகள்தான் படுகொலை செய்யப்படுகிறார்கள். முற்பட்ட, பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட இனத்தில் இருந்து தலித் ஆண், பெண் எடுத்தல் ஆண் ஆணவப்படுகொலை செய்யப்படுகிறான். ஆண் முற்பட்ட அல்லது பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் தலித் பெண் ஆணவக்கொலை செய்யப்படுகிறாள். மொத்தத்தில் – ஆணாகியும் பெண்ணாகியும், தலித் பழங்குடிகளில் பிறக்கக் கூடாது. அப்படிப் பிறந்தால் மற்ற சாதியோடு கலக்கக் கூடாது. மீறினால் படுகொலைகள் நிகழும் என்பது நிதர்சனமான உண்மைகள்.
காதல் என்பது சாதி பார்த்து வருவதில்லை ஒரு முற்பட்ட, பிற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்ணைக் காதலித்துக் கைவிட்டு ஏமாற்றி விடக்கூடாது என்றுதான் தர்மச் சிந்தனையோடு அவளைக் கைப்பிடிக்கிறான் ஆண். பணம், பதவி அந்தஸ்துக்காக அல்ல. இதைத் தெரியாமல் கொலை செய்யும் ஆணவம் தொடருமானால், எத்தனை டார்வின் வந்தாலும் மனித இனம் இன்னும் பரிணாமம் அடைவதில்லை எனச் சொல்லலாம். பரிணாமம் என்பது விலங்குகளிடமிருந்து மனிதன் வளர்ச்சி அடைவது. ஆனால் மனிதன் இன்றும் மிருக குணத்தோடு இருப்பதால் நாட்டில் சாதித் திமிர் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டேயிருக்கிறது.
அம்பேத்கரும், பெரியாரும் கண்ட கனவுகள் போட்ட திட்டங்கள் மோசமாகிப் போனதற்கு அடிப்படைக் காரணம் அரசியல் தந்திரம். இங்கே சாதி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதை நிறுத்தினால் மட்டுமே சாதியாணவம் கொஞ்சம் குறையும். இடஒதுக்கீட்டில் மட்டும் பின்தங்கியவன், மிகவும் பின்தங்கியவன். முற்பட்டவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவன். அதே பொருளாதாரத்தில் கல்வியில் முன்னேறிய தலித் சமூகம் மட்டும் ரத்தக் கலப்பு ஏற்படும்போது ஆணவக் கொலைகள் அடுக்கடுக்காக நடக்கின்றன.
ஆணவத்தால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்வது. அடித்துத் துன்புறுத்தித் தண்டவாளத்தில் தூக்கிப் போடுவது, நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துக் கொல்வது. நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும் விஷம் வைத்துத் தாயையும் சேயையும் ஈவு இரக்கமற்றுக் கொல்வது என எல்லாமே சாதி ஆணவத்தால் நடக்கின்றன. இதற்குத் தனிச் சட்டம் தேவையில்லை, மாறாக முற்பட்ட, பிற்பட்ட மிகவும் பிற்பட்ட தாழ்த்தப்பட்ட விளிம்புநிலை என்ற இந்த இடஒதுக்கீட்டுப் பெயர்களை மாற்றி விட்டு அனைவரும் ஒரே சாதி அனைவரும் சமமாக சம்பந்தம் பண்ணலாம் என்று, சாதி வாரிய வாக்கு வங்கியை எப்போது அரசியல் கட்சிகள் கைவிடுகிறதோ, அப்போதுதான் அம்பேத்கரின் கனவு, பெரியாரின் கனவு இந்நாட்டில் மலரும்.
இல்லை என்றால் தடதடக்கும் ரயில் சக்கரங்களில் தொடர்வண்டியின் ஓசையோடு இளைஞர்களின் மரண ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். கதறக் கதற கர்ப்பிணிப் பெண்களின் கழுத்து நெரிப்பட்டு ஆற்றங்கரையில் தாயும் – சிசுவும் ஒதுங்கிக் கொண்டே இருக்கும். இது மாறனும் அல்லது மாற்ற வேண்டும். மனிதநேயம் மிக்கவர்கள் ஒருங்கிணைந்து அரசியல் சட்ட திட்டங்களை மாற்ற வேண்டும். உண்மையான சாதியற்ற நல்ல மனிதர்கள் ஒன்று சேர்ந்து இந்த நாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். சாதியற்ற சமுதாயம் நிலவிடப் புதிய சமுதாயம் மலர்ந்திடச் சபதமேற்க வேண்டும்.
Art : Leila Art
ஆர்.பி.கண்ணன் என்னும் இயற்பெயர் கோண்ட R.பாண்டியக்கண்ணன் விருதுநகர் மாவட்டம் கட்ராம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துறத் துறையில் பணி செய்கிறார். 2008 ஆம் ஆண்டு சலவான், மழைப்பாறை, நுகத்தடி, மேடை, துயர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply