மானதா தேவி என்கிற தேவதாசியின் ஒரு நேர்மையான வாக்குமூலமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. இந்தக் கதையின் நாயகி மனம் திறந்து பேசும் போது, வாசகராக நாம் பதறிப் போய் விடுவோம். கொஞ்சம் நடிங்க பாஸ் என்பது போல், மனிதர்களின் முகமூடிகள் வாசகர்களுக்கும் சமூகத்திற்கும் கொஞ்சம் நல்லது என்பதை இந்தப் புத்தகம் வழியாக நாம் புரிந்து கொள்ள முடியும்.
பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண் ஏன் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விதான் எனக்குள் எழுந்தது. படித்தவர்கள் அனைவரும் நேர்மையாகவும் அல்லது முன்னேறியர்வர்களாகவும் மட்டுமா இருக்கிறார்கள். கல்வி படிப்பு மற்றும் இலக்கியம் வாசிப்பவர்களை மக்கள் பெரிதாக விரும்பவில்லை. இலக்கியப் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான தைரியம் வருகிறது. அந்தத் தைரியம் தான் ஒரு சிலரை எந்த எல்லைக்கும் சென்று வாழ்க்கையோடு பரமபதம் விளையாட முடிவெடுக்க வைக்கிறது. அதனால்தான், படித்த பெண்கள் மீது அந்தக் காலத்தில் ஒரு ஒவ்வாமை இருப்பதை இந்தக் கதையிலும் படிக்க நேரிடுகிறது.
1929 ம் ஆண்டு, இந்தப் புத்தகம் வெளியான நாளிலிருந்து மானதா தேவி என்கிற பெண் யார்?, அவர் எங்கிருக்கிறார்? தற்போது உயிருடன் இருக்கிறாரா? அல்லது மானதாதேவி என்கிற பெண்ணே எழுத்தாளரின் கற்பனைக் கதாபாத்திரமா என்ற கேள்வி பல வருடமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தச் சச்சரவுகள் தாண்டி, இந்தப் புத்தகம் தேவதாசிகளின் அடிமனப் பேராசைகளைப் பற்றி பேசுகிறது.
நாயகி கல்கத்தாவில் மிகப்பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அதனால், இவரது எண்ணங்களும், சிந்தனைகளும் கற்பனை உலகில் இருப்பதற்குச் செல்வச்செழிப்பு ஒருவிதத்தில் வழிவகை செய்தது. அம்மாவும் இறந்த பிறகு, அப்பா மற்றும் சித்தியின் கண்காணிப்பில் வளர்ந்தார். இவர் பிறந்த காலகட்டம் 1900களில் இருக்கிறது. அந்நேரத்தில் நாடகங்கள், திரைப்படங்கள் வசதியானவர்களின் கொண்டாட்டமாக அவர்களுக்கு இருந்தன. பள்ளி, கல்லுரி நாட்களில் இருக்கும் விடுமுறை தினத்தில், நாடகங்கள், திரைப்படங்கள் பார்க்க மானதாதேவி நண்பர்களுடன் செல்வார். மேலும், இவருக்குச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் மீது மிகப்பெரிய ஈடுபாடு உண்டு. அவருடைய வீட்டில் பொழுது போக்கு, கொண்டாட்டங்கள் எத்தனை முக்கியமோ அதேயளவிற்குப் படிப்பும் முக்கியமென்று, அவரது அப்பா, வீட்டிற்கு வந்து பாடமெடுப்பதற்கு ஒரு ஆசிரியரை நியமித்தார்.
ஆசிரியரும் திருமணமாகாதவர் என்ற நிலையில், நாயகியின் கற்பனை இன்னும் ஆண் என்ற ஈர்ப்பின் வழியாக விரிவானது. ஒவ்வொரு பெண்ணும் தான் ஆசைப்பட்ட விஷயத்தை அடைய ஒருசிறு வாய்ப்பு அமைந்தாலும் அதை முழுவதுமாகப் பயன்படுத்தி விட முயற்சிப்பார். அதிலும், தான் ரசிக்கும் தான் தேர்ந்தெடுக்கும் ஆணைக் கவர்வதில் பெண்ணிற்கு மிகப்பெரிய வெறியே இருக்கும்.
இதற்கிடையில், அவள் அதிகமாய் நேசித்த தோழியின் கல்யாணமும் சில மாதங்களிலேயே ஒரு பிரிவில் முடிந்து விட்டது. தோழியின் தாயார் இரண்டாவது மனைவி என்பதை மறைத்து விட்டார்கள் என்ற காரணத்திற்காகத்தான் அந்தத் திருமண உறவு பிரிவடைய காரணம் என்பதே நாயகியால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏனென்றால், இவளது வாழ்வியல் முறையில் செல்வச் செழிப்பும், கற்பனை சூழ்ந்த எண்ணங்களுமே அதிகம். அதனால், யதார்த்த வாழ்க்கையின் கடுமையினை அவரால் புரிந்து கொள்வதற்கும், எதிர் கொள்வதற்கும் தெரியாமல் தத்தளித்தார். பெரும்பாலும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் அவர்கள் உலகை விட்டு நகராமல் இருப்பதைப் போல், இவளும் யதார்த்த வாழ்க்கைக்குள் நுழையாமல் இருந்தாள். ஆனால், காலம் அப்படியெல்லாம் இருக்க விடாதே. மனிதர்களை எந்தத் திசையில் தூக்கிப் போட்டு விளையாட வேண்டும் என்பதைக் காலம்தான் முடிவெடுக்கிறது. அதனால்தான், அறிவியலிற்கு அப்பாற்பட்டு, விதியை மதியால் வெல்ல முடியாது என்று நம்புகிறார்கள்.
அவள் பள்ளிக்கூடத்தில் படித்த படிப்பு, அவள் வாசித்த நாவல்கள், கவிதைகள் எதுவுமே அவளது சிந்தனையைத் தவறென்று சொல்லவில்லை. அதனால், அவளது வளரிளம் பருவத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தன்னுடைய பதினைந்து வயதில், வீட்டை விட்டுக் காதலுக்காக ஓடி வந்து விட்டாள்.
வசதியான வீட்டை விட்டு, ஒடி வந்த பின் காதலனுடன் மிகவும் சந்தோசமாக வாழ்க்கையைக் கழித்தாள். அதன்பின், எப்பொழுதும் போல், திரைப்படங்களில் காண்பிப்பது போல், இந்தக் காதலனும் ஏமாற்றுக்காரன். ஒரு நாள் தெரியவந்த போது, இருவருக்கும் சண்டை வந்து பிரிந்து விட்டார்கள்.
பணம் சூழ வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு, பணம் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளது கற்பனை உலகம் அவளுக்கு ஆசையைத் தான் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதனால் தான், ஆசையும், பாவமும் ஒருசேர மனதிற்குள் புகுந்து விட்டால், அதுவொரு நோயாக மாறி விடும் என்கிறார்கள் நமது முன்னோடிகள். அந்த நோயையும் அவளுக்குத் தெரிந்து, அதை வளர அனுமதித்தாள்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கேற்ப விபச்சாரம் செய்ய வந்தாள். குடிசைப்பகுதியில், சகவாசம் சரியில்லாதவர்களுடன் இணைந்து விபச்சாரத்தில் ஈடுபட்டாள். கர்ப்பமாகாமல் இருப்பதற்கு, மருந்து மாத்திரைகள் எடுத்ததால், உடல்நலமும் கெட்டுப் போனது. அவளது ஆசைக்கு உடல் மிகவும் முக்கியம் என்பதால், அதற்கான சிகிச்சையை முறையாக எடுத்துக் கொண்டாள். அவரது ஆசையும், பாவமும் ஒரு சேர அவளை விபச்சாரம் செய்வதற்கு வழிவகுத்தது.
வாழ்க்கையைக் கொண்டாட்டமாகவும், அதே நேரத்தில் பெண் என்கிற அடையாளத்தை எப்படி ராணி மாதிரி வாழ முடியும் என்ற வேட்கையும்தான் இந்தத் தொழில் மீது ஈடுப்பாட்டை அதிகரிக்கச் செய்தது. அவரது காலத்திலும் பெண்கள் நிம்மதியாக வாழ்வதற்குச் சமூகத்தில், பெண்களுக்கு அடைக்கலமாக இருக்கும் இடங்களில் உண்பதற்கு உணவும், பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும் கிடைக்கும் என்று இருக்கிறது. ஆனால், அவை மட்டும் மானதாதேவிக்குப் போதுமானதாக இல்லை. உடலுறவின் மூலம், ஆணைத் தன் வசப்படுத்தி, அதன்மூலம் பணம், பொருள், வசதி என்று அனைத்தையும் அடைந்து விட முடிகிறது. இவைதான் அவளது வாழ்க்கைக்கு ஆன்மாவாக இருந்தன.
சில நேரங்களில் மனிதர்கள் நரகத்தில் இருந்தாலும், அங்கேயும் தென்றல் வீசும் என்பது போல், இவள் விபச்சார உலகத்தில் இருக்கும் நேரத்தில், இலக்கிய உலகில் எழுத்தாளர்கள், விபச்சாரம் செய்யும் பெண்களின் வாழ்வும், யதார்த்த உலகிற்குள் இருக்கிறது என்ற வகையில் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தனர். அதனால் இளம் ஆண், பெண்களிடம் இந்தக் கருத்தாக்கம் ஒருவிதப் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. இலக்கியம் வாசிப்பவர்களும், எழுத்தாளர்களும் விபச்சாரம் செய்யும் பெண்களுடன் இயல்பாகப் பேசிப் பழகினர்.
சமூகத்தில் விழிப்புணர்வு செய்வதற்கும், இக்கட்டான நேரங்களில் மக்களுக்கு உதவுவதற்கு இவர்களிடம் பணமும் வசூல் செய்து பயன்படுத்திக் கொண்டனர். அதனால், இன்னும் வசதியாக தப்பு செய்வதில் தவறில்லை என்ற எண்ணம் இன்னும் ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தின் போது, பெரும் மக்களைத் திரட்டினார். அந்த மக்களுடன் மக்களாக விபச்சாரத் தொழில் செய்பவர்களும் இறங்கிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை இவர்கள் தங்களது தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டனர். அந்த இளைஞர்களும் காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டு, இந்தப் பெண்களுடன் பழக ஆரம்பித்து விட்டனர். நமது முன்னோர்களை அலட்சியப்படுத்தும் எந்தவொரு இனமும் அடிமையாகும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்தது.
காந்தியின் கொள்கையோ உன்னதமாகத்தான் இருந்தது. அவரது அறிவும், நோக்கமும் மாபெரும் ஒரு ஒளி. சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் மாபெரும் அறிவு மரம் குப்பைமேட்டில் வளராது என்பதே உண்மையானது என்றாள்.
அதுபோல் தான், இந்த இயக்கம் சார்ந்த இளைஞர்களை அறிவார்ந்த சிந்தனையிலிருந்து விலக்கி, உடலுறவுக்கும், மதுவுக்கும் அடிமைப்படுத்தி விட்டோம் என்றாள். உண்மையில், சில நேரங்களில் குற்ற உணர்வு ஏற்படும் போதெல்லாம், கூட்டமாக மனிதர்கள் இப்படித்தானே இருக்கிறார்கள் என்று சமாதானப்படுத்திக் கொள்வேன். முதலில் மனிதன் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால், எது பாவமென்று தெரிந்திருக்க வேண்டும். இங்கு எதுவுமே பாவம் என்று எனக்குத் தெரியவில்லை என்கிறாள்.
இந்த உலகில் மானதாதேவி நேசித்த, ஆசைப்பட்ட அனைத்துமே கவர்ச்சிகரமானவை. அவற்றில் உண்மையென்று எதுவுமிருக்காது. அந்த உண்மை இல்லாததால்தான், யாரையும் ஏமாற்றலாம், யாருக்கும் துரோகம் செய்யலாம், தன்னுடைய சுயநலத்திற்காகச் சமூகத்தையும், மனிதர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவையெதுவும் என்னைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்யவில்லை. அதனால்தான், எளிதாகக் கிடைக்கக்கூடிய, கவர்ச்சிகரமில்லாத உண்மை மீது தனக்கு ஈர்ப்பு வரவில்லை என்று தன் நேர்மையை வெளிப்படுத்தி விட்டாள்.
புனிதமான அனைத்தையும் களங்கப்படுத்துவதில் மனிதர்களுக்குத் தனி ஆர்வமுண்டு. மானதாதேவி தன்னால் முடிந்த அளவிற்கு அவளைச் சுற்றியிருந்த மனிதர்களையும், சமூகத்தையும் களங்கப்படுத்தி விட்டேன் என்று தெளிவாகக் கூறி விட்டாள். இதுவே இந்த நாவலைப் படித்து முடித்த பிறகு, வாசகருக்குப் பதற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.
மதுரையில் பிறந்த காயத்ரி மஹதி, வீட்டில் முதல் பட்டதாரி பெண். வீட்டில் அனைவரும் புத்தகம் வாசிப்பவர்கள். அதிலும் குறிப்பாக தாத்தா கட்டுரைகள் அதிகமாக வாசிப்பவர். அதனால் எனக்கும் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் வந்தது. மனநல ஆலோசகராக வேலை செய்வதால், உளவியலிலும் இலக்கியத்தை இன்னும் எளிதாக இணைக்க முடிந்தது.
தமிழ் இந்து, குங்குமம் தோழி, நீலம், குங்குமம் டாக்டர் போன்ற நாளிதழ் மற்றும் செய்தித்தாள்களில் தொடர்ச்சியாக உளவியல் சார்ந்த கட்டுரைகள் மற்றும் உளவியல் சார்ந்த புத்தகங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.








Leave a Reply