மெட்ராஸ் இந்தியத் தொழிநுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் இருக்கிறேன். ‘பேராசிரியர்’ என்பதால் பாடம் நடத்துவது, பேப்பர் திருத்துவதுதான் எங்கள் பணி என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
ஆனால், ஒரு வாரத்தில் நான்கு மணி நேரங்கள் மட்டுமே பாடம் நடத்தும் பணி. மீதி நேரத்தை ஆய்வுக்காகச் செலவிட வேண்டும். ஆய்வுப்பணி என்றவுடன், ‘விண்வெளி ஏன் சுழல்கிறது?’, ‘உயிர் எங்கே செல்கிறது?’, ‘அதிவேகமான போக்குவரத்தை எப்படிச் சாத்தியப்படுத்துவது எப்படி?’, ‘செயற்கை நுண்ணறிவு நம்மை மிஞ்சி விடுமா?’ என்று எடுத்த எடுப்பில் கேள்விகளுக்குப் பதிலளிக்கப் போய்விட முடியாது.
ஆய்வு செய்வதற்கு அவசியமான ஒரு விஷயம் – ‘ஆய்வகம்’.
நம்முடைய துறையைப் பொறுத்து, எடுத்துக்கொள்ளும் கருப்பொருளைப் பொறுத்து, ஆய்வகம் தேவைப்படும்.
உதாரணமாக, உயிரியல் சார்ந்த ஆய்வுகளுக்கு ‘செல்களை’ உணரும் கருவிகள், நுண்ணோக்கிகள் போன்றவை தேவை. வாகனம் சார்ந்த ஆய்வுகள் என்றால், இயந்திரப் பொறிகள், வேகம் அளக்கும் கருவிகள் இப்படி வெவ்வேறு ஆய்வுகளுக்கு வெவ்வேறு கருவிகள் தேவை.
ஒரு வீடு கட்டும்போது, என்னென்ன அறைகள் எவ்வளவு அகலத்தில் தேவை, என்னென்ன பொருட்கள் வைக்கப்போகிறோம் என்று ஓரளவுக்குச் சிந்தித்துக் கட்டிவிடுவோம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல புதுப் புதுச் சாதனங்கள் தேவைப்படும். குளிரூட்டிகள் பொருத்த வேண்டும், குழந்தைகளுக்குப் படிக்க என்று ஓர் இடம் வேண்டும். இப்படி நாளுக்கு நாள் தேவைகள் மாறிக்கொண்டே போகும் அல்லவா?
வீடு கட்டுவதற்குப் பணம் தேவை. இடம் வாங்குவதற்குப் பணம் தேவை; அடுப்பு, கட்டில், மேஜை என்று ஒவ்வொரு பொருள் வாங்குவதற்கும் பணம் தேவை. ஆக, ஆய்வகத்தை நிறுவுவதற்கும், ஆய்வுக் கருவிகளை வாங்குவதற்கும் பணம் வேண்டும். இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?
உண்மையில், இன்று அமெரிக்காவும், ஐரோப்பாவும், சீனாவும் ஆய்வுகளில் நிமிர்ந்து நடைபோடுவதற்கு ஆய்வுக்குக் கொட்டப்படும் பணம்தான் காரணம். உலகின் மிகச் சக்திவாய்ந்த நாடாக இருக்கும் அமெரிக்கா, தனது ஜிடிபியில் சுமார் 3.5% அளவை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்குச் செலவழிக்கிறது. இது பெரும்பாலும் தனியார் மற்றும் அரசு கூட்டாகச் செலவழிக்கும் தொகை.
கடந்த இருபது ஆண்டுகளில், சீனாவின் அறிவியல் வளர்ச்சி என்பது மிகப்பெரியது. இப்போது சீனா தனது ஜிடிபியில் சுமார் 2.4% அளவை அறிவியலுக்குச் செலவழிக்கிறது. இது 2000-ம் ஆண்டில் 0.9% மட்டுமாகவே இருந்தது.
இந்தியாவின் நிலை தலைகீழ். இந்தியா தற்போது ஜிடிபியில் சுமார் ~0.65% மட்டுமே அறிவியல் ஆய்வுகளுக்குச் செலவழிக்கிறது. தனியார் முதலீட்டும் மிகவும் குறைவு.
இப்போது, அறிவியல் ஆய்வுகளுக்குப் பணம் இல்லை என்று இந்தக் கட்டுரையில் புலம்புவதை விட, ஆய்வுகளில் பணத்தை முதலீடு செய்வதால் என்ன மாற்றம் நடக்கலாம் என்று பார்க்கலாம்.
கல்விக்காகச் செலவழிப்பது என்பது எதிர்காலத்துக்கான முதலீடு என்று நாம் ஒப்புக்கொள்கிறோம். அதேபோல, அறிவியல் ஆய்வுகளில் ஆய்வில் பணம் முதலீடு செய்வது, ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடுவது போன்றது.
கோவாக்சின் – இந்திய அறிவியல் கட்டமைப்பின் பலன்
2020ல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவிய போது, பெரும்பாலான நாடுகள் வேகமாகத் தடுப்பூசியை உருவாக்க முயன்றன. இந்தியா, இந்நேரத்தில் தனது தனிப்பட்ட அறிவியல் சக்தியை நம்பி, முழுக்க முழுக்க உள்ளூரில் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசியைக் கொண்டு வந்தது – அதுதான் கோவாக்சின்.
இந்தியா இன்று உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒன்றாகத் திகழ்வதற்கான காரணம், ஒரே நாளில் நிகழ்ந்த மாற்றமில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய நம்முடைய மருத்துவக் கட்டமைப்பானது, பல முக்கியத் தடுப்பூசிகளுக்கான கண்டுபிடிப்புகளுக்குத் தோளாக இருந்துவருகிறது.
உதாரணமாக, ‘மருத்துவப் பலன்கள் மிகுந்த, பக்கவிளைவுகள் குறைந்த’ உலகின் முதல் காலராவுக்கான தடுப்பூசி, 1893 முதல் 1896க்குள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டது. இந்தத் தடுப்பூசியை உருவாக்கியவர், பாரிஸில் உள்ள பாஸ்தர் நிறுவனத்தில் (Institute of Pasteur) பயின்ற மருத்துவர் வால்டமர் ஹாப்கைன் (Dr. Waldemar Haffkine). கொள்ளைநோய்க்கான (plague) உலகின் முதல் தடுப்பூசியையும் 1897இல் இவர் கண்டுபிடித்தார். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், மும்பையில், ஹாப்கைன் நிறுவிய கொள்ளைநோய் தடுப்பூசி ஆராய்ச்சி மையம் மட்டுமின்றி, மேகாலயாவின் ஷில்லாங்கில் பெரியம்மைக்கான தடுப்பூசி உற்பத்தியும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது (1890 முதல்).
மேலும், 1899ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள “கிங் – தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (King Institute of Preventive Medicine and Research)” தொற்றுநோய்களுக்கான தடுப்பு மருந்துகளை ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யும் மையமாக நிறுவப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, இந்தியாவில் குறைந்தபட்சம் நான்கு வகையான தடுப்பூசிகள் (பெரியம்மை, காலரா, கொள்ளைநோய், டைபாய்டு) கிடைக்கக் கூடிய கட்டமைப்பு இருந்தது.
தடுப்பூசி தேவைகள் அதிகரித்ததை அடுத்து, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்திய அரசாங்கம் புதிய தடுப்பூசி ஆராய்ச்சி மையங்களை நிறுவ முடிவு செய்தது. இதன் அடிப்படையில், 1905ஆம் ஆண்டு, ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள கௌசலியில் “மத்திய ஆய்வு நிறுவனம் (Central Research Institute)” அமைக்கப்பட்டது. பின்னர், 1907இல், நீலகிரியின் குன்னூரில் இந்திய பாஸ்தர் நிறுவனம் (Pasteur Institute of India) அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் ரேபீஸ் நோய்க்கான தடுப்பு மருந்துகளில் மட்டும் கவனம் செலுத்திவந்த இந்த நிறுவனம், பிறகு இன்ஃப்ளூயன்சா மற்றும் பிற தொற்றுநோய்களுக்குத் தடுப்பூசி உருவாக்கும் நிறுவனமாக விரிவுபட்டது.
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, காசநோய் (Tuberculosis) மிகுந்த பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படுத்தும் நோயாகக் கருதப்பட்டது. அதனால், 1948ஆம் ஆண்டு சென்னையிலுள்ள கிங் நிறுவனத்தில், BCG எனப்படும் காசநோய்க்கான தடுப்பூசி ஆய்வகத்தை நிறுவி, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கினர். பின்வரும் ஆண்டுகளில், இந்த நிறுவனம் இந்தியாவெங்கும் காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது. தற்போது, காசநோய்க்கான நவீனத் தடுப்பு மருந்துகளையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.
இந்திய அரசு ஆதரவு அளித்ததால், தடுப்பு மருந்து சார்ந்த நிறுவனங்களின் வலையமைப்பு, இந்தியாவை உலகளவில் ஒரு முன்னணித் தடுப்பூசி நாடாக மாற்றியது. இதுவே தடுப்பூசியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாகவும், குறைந்த செலவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் சாத்தியத்தையும் அளித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள், டிப்தீரியா, போலியோ, டைபாய்டு, பெரியம்மை, காலரா, காசநோய், ஜப்பானிய மெழுகு நோய் (Japanese encephalitis), மஞ்சள் காய்ச்சல் (yellow fever) ஆகிய நோய்களை எதிர்க்க உதவின. தற்போது, டெங்கு, சிக்குன்குனியா, ஜிக்கா போன்ற நோய்களுக்கு எதிராகவும் மருந்துகள் உருவாக்கத்தில் உள்ளன.
இந்தியா – உலகின் மருந்தகம்
மருத்துவ ஆய்வுகளாலும், தொடர்ந்த மருந்துத் தயாரிப்புகளாலும், “உலகின் மருந்தகம் (pharmacy of the world)” என்று பெயர் எடுத்துள்ளது இந்தியா. உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 3000 மருந்து நிறுவனங்களும், 10,500க்கும் மேற்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகளும் உள்ளன என்பதை இங்கே நினைவுகூரவேண்டும்.
2019ஆம் ஆண்டு இந்தியாவின் உள்ளக மருந்துச் சந்தை மதிப்பு 20.03 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவைக் கடந்தது. 2020இல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்பில் மருந்துகளை ஏற்றுமதி செய்தது, இந்தியா. இது உலகளாவிய ‘ஜெனெரிக் (generic)’ மருந்து ஏற்றுமதியில் 20% ஆகும்.
இந்தியாவின் உண்மையான மேலதிகாரம் என்பது, தடுப்பு மருந்து உற்பத்தியில் இருக்கிறது. உலகளாவிய தேவை இருக்கும் தடுப்பூசிகளில் 60% அளவிற்கு, உயர் தரத்திலும், குறைந்த விலையிலும் தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதியும் செய்கிறது.
உற்பத்தியில் நாம் தீவிரமாக இயங்கினாலும், புதிய மருந்துகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான முதல் வெற்றியாக, நாம் ‘கோவாக்சின்’-ஐ எடுத்துக் கொள்ளலாம்.
தடுப்பூசி தயாரிப்பில், ஆரம்ப கட்டமான வைரஸைத் தனிமைப்படுத்தும் நிலை முதல் தயாரிப்பு வரை — அனைத்தையும் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய ஆய்வகங்களில் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தோம்.
இந்தச் சூழ்நிலையில் நாம் கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி – இந்த அளவிற்கு விரைவில் ஒரு தடுப்பூசி உருவாக்க இயன்றதற்குப் பின்புலமாக என்ன இருந்தது? காரணம் — இந்தியா, வைரஸ் மற்றும் தொற்றுநோய் சார்ந்த ஆராய்ச்சியில் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை மேம்படுத்தி வந்தது. புனேவில் உள்ள ‘தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology)’ உலகத் தரத்தில் உள்ள வைரஸ் பரிசோதனை மையமாக உருவாக்கப்பட்டது. பல புதிய வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்ய உயிரியியல் ஆய்வகங்களும் உருவாக்கப்பட்டன. இந்த வரலாறு இல்லையென்றால், கோவாக்சின் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை.
இந்தத் தடுப்பூசி இந்தியா முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான மக்களுக்குச் செலுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில், கோவிஷீல்டும் கோவாக்சினும் இரண்டுமே ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டன. ஆனால், கோவாக்சின் முழுக்க முழுக்க உள்ளூரில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி என்பதால், நம் நாட்டின் மருத்துவத் தன்னிறைவை அது உலகிற்குக் காட்டியது. இந்தியா தன்னைத்தானே பாதுகாத்ததோடு நின்றுவிடாமல், “வாக்சின் மைத்ரி” (Vaccine Maitri) என்கிற திட்டத்தின் கீழ், 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்குக் கிட்டத்தட்ட 15 கோடி தடுப்பூசிகளை அளித்தது. இது அறிவியலின் வழியாக இந்தியா மேற்கொண்ட மனிதாபிமான உதவி. ‘நட்பு நாடுகள்’ என்பது ‘விருந்து’ சாப்பிடுவது மட்டுமல்ல! இதில், வங்காள தேசம், நேபாளம், மியான்மார், பிரேசில், ஈரான், இலங்கை, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஓஷனியா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன. சில இடங்களில் இது விற்பனைவழியாக இருந்தாலும், பல இடங்களில் இலவசமாகவும் அளிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி மூலம் இந்தியா, நேரடியாக ரூ.2000 கோடி வரை வருமானம் பெற்றுள்ளது. மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் உலக நாடுகளுடன் விற்பனை ஒப்பந்தங்களை மேற்கொண்டு பல கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியது.
அறிவியலும் அரசியலும் – இரட்டை மாட்டு வண்டி
இந்தக் கட்டத்தில் நாம் ஒரு முக்கியமான உண்மையை நோக்கவேண்டும் — அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையில் உள்ள எல்லைகள் தெளிவற்றவை. ஒரு அறிவியல் சாதனை — ஒரு பெரிய பொருளாதார அரசியல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இன்று இந்தியாவில், ஆராய்ச்சிப் பணிகள் பல துறைகளிலும் நடைபெறுகின்றன — பசுமை ஆற்றல், காற்றாலை, ஹைட்ரஜன் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினிகள், நேனோ துறைகள், விண்வெளி ஆராய்ச்சி என அனைத்தும். இந்தத் துறைகளில் நாம் முன்னேற வேண்டுமானால், கோவாக்சின் உருவாவதற்கு என்ன மாதிரி ஒரு கட்டமைப்பு இருந்ததோ, அதேபோல பல துறைகளுக்கும் தேவை. அதாவது அரசியல் ஆதரவு, அறிவியல் சுதந்திரம், மற்றும் நிதி முதலீடு. இந்த மூன்றும் ஒரே நேரத்தில் நடக்கும்போதுதான், இலக்கை எட்ட முடியும்.
மேலும், ஆய்வு நிறுவனங்களை அமைப்பத்தோடு பணி முடிந்துவிடுமா? வெறும் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவதோடு, அறிவியலில் ஆர்வம் அளிக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளைக் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துவது, மக்களுக்கு அறிவியல் ஆய்வுகளை எளிமையாக எடுத்துச் செல்வது என்று அறிவியல் நோக்கிய பல்வேறு கோணங்களில் இருந்து பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆய்வுகளில் தனியார் முதலீடும் அவசியம் என்றாலும், அரசாங்கம் செலவழிக்கும்போதுதான் சாமானிய மனிதனுக்கான ஆய்வுகள் வெளிவருது சாத்தியமாகும். உதாரணமாக, விவசாய ஆய்வுகளை எடுத்துக்கொள்வோம். இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும்பாலும் பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்தும் உயிரியல் தொழில்நுட்பங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. காரணம் தெளிவானது — ஒரு புதிய உயிரி தொழில்நுட்ப விதையை உருவாக்கினால், அதன் அறிவுச் சொத்துரிமை (Intellectual property) பத்தாண்டுகளுக்குப் பெரும்பாலும் தனியாரிடம் இருக்கும். அந்தக் காலத்துக்குள் அதிக லாபம் ஈட்ட முடியும். அதன் பிறகு அந்த விதை பொது உடமை ஆகிவிடும் என்பதால், தனியாருக்கு அதன்மீது ஆர்வம் இருக்காது. அதற்குள், அடுத்த தலைமுறை விதையை உருவாக்கி, விவசாயியை ஒவ்வொரு முறையும் புதிய விதையை வாங்கும் நிலைக்குக் கொண்டு வரலாம்.
இந்த வகை உயிரி தொழில்நுட்ப விதைகள், அதிலிருந்து வரும் பயிர்களில் இருந்து மீண்டும் விதை உருவாகாத வகையில் உருவாக்கப்படுகின்றன. அதாவது, விவசாயி அந்தப் பயிரிலிருந்து விதை சேமித்து மீண்டும் பயிரிட முடியாது. இது தொடர்ச்சியான சார்பு நிலையை உருவாக்குகிறது.
மாறாக, உலர்ந்த நிலம், வறட்சி, நீர் தேங்கும் நிலம் போன்ற உயிரற்ற சூழ்நிலைகளை (abiotic stresses) எதிர்த்து வளரக்கூடிய, நீண்ட காலம் பயன் தரும் விதைகளை உருவாக்கும் ஆய்வுகள் மிக முக்கியமானவை. விவசாயி அந்தப் பயிரிலிருந்து விதை எடுத்து மீண்டும் பயிரிடலாம். இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆர்வம் தனியார் நிறுவனங்களுக்கு இல்லை. ஏனெனில் இது உடனடி லாபம் தருவதில்லை. இவ்வகை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பெரும்பாலும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள்தான். சமீப காலமாகவே இப்படி இரு அரிசி வகைகள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன.
இதன் பொருள் என்ன? ‘நாடு’ என்ற அளவில் அறிவியலுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு போலவே உங்களையும் என்னையும் போன்ற இந்த நாட்டின் எளிய மக்களின் வாழ்விலும் அறிவியல்-அரசியல் தொடர்பின் தாக்கம் உள்ளது.
அறிவியலுக்கும், அரசியலுக்கும், கட்டமைப்புக்கும் தடுப்பு மருந்து கதை ஒரு சின்ன உதாரணம்தான். இன்னும் பல கதைகள் உள்ளன. ஆபரேஷன் சிந்தூரில், பயன்படுத்தப்பட்ட – இந்திய ராணுவத்தால் ‘சுதர்சன் சக்ரா’ என்று அழைக்கப்படும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வந்த கதை என்ன?; சீனாவின் வரலாற்றை மாற்றிய அறிவியல் ஆய்வுகள்; இஸ்ரேல் – பாலஸ்தீன போரில், அறிவியலும் – அரசியலும் எங்கே விளையாடுகிறது; ஒரே நாளில் இயற்கை விவசாயத்துக்கு மாறியதால் வீழ்ந்த ஸ்ரீலங்காவின் தேயிலைத் தோட்டங்கள் என்று பல கதைகள் உள்ளன.
இந்தக் கதைகள் ஒரு உண்மையை மட்டும் உறுதியாகச் சொல்கின்றன — அறிவியலும் அரசியலும் தொடர்பற்றவை அல்ல, ஒன்றோடொன்று பிணைந்தவை. இன்றைய உலகளாவிய கட்டமைப்பில், அறிவியல் உந்துதலின்றி அரசியல் தீர்வுகள் முடியாது; அரசியல் துணையின்றி அறிவியலால் வளர்ச்சி காண முடியாது.
ஹேமபிரபா – இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IIT Madras) இல் உலோகியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். நேனோ பொருட்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலைக் கல்வியை முடித்த பிறகு, பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழில் அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் கதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல் – “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”. அன்றாட அறிவியலையும் நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்துப் பேசும் “அறிவுக்கு ஆயிரம் கண்கள்” நூல், பரவலாக பாராட்டைப் பெற்ற இவருடைய நூல். “ஹம்போல்ட்: அவர் நேசித்த இயற்கை” ஆகிய நூலையும் இளையோருக்காக எழுதியுள்ளார். மேலும், 1960-களில் வெளியாகிய “How Babies Are Made” என்ற ஆங்கில நூலை, “குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஒரு கருவின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் குழந்தை பிறப்பை அறிவியல் முறையில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நூல் இது. பல்வேறு தளங்களில் பொது மக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.








Leave a Reply