Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

அரை மஞ்சள் சூரியன்

லதா அருணாச்சலம்
லதா அருணாச்சலம்
January 2, 2026
அரை மஞ்சள் சூரியன்

சிமாமந்தா எங்கோஸி அடிச்சி
தமிழாக்கம்- லதா அருணாச்சலம் 


ஆபாவினூடாகச் செல்லும் அழுக்குச் சாலையில் மக்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருப்பதை உக்வுதான் முதலில் பார்த்தான். ஆடுகளை இழுத்துக் கொண்டு, கிழங்குகளையும் பெட்டிகளையும் தலையில் சுமந்து கொண்டு, கோழிகளையும் சுருட்டி மடிக்கப்பட்ட பாய்களையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, கெரோசின் விளக்குகளைத் தலையின் மீது வைத்துக் கொண்டுமிருந்தார்கள். குழந்தைகள் சிறிய குண்டான்களைத் தூக்கிக் கொண்டோ அல்லது தம்மினும் சிறிய குழந்தையைப் பிடித்து இழுத்துக் கொண்டோ வந்தார்கள். சிலர் அமைதியாகவும் மற்றும் சிலர் உரக்கப் பேசிக் கொண்டும் கடந்து செல்வதை உக்வு பார்த்தான்; அவர்களில் பலருக்குத் தாங்கள் எங்கு செல்கிறோமென்று கூடத் தெரியாதென்பதை உக்வு அறிவான்.

அன்று மாலை கூட்டத்திற்குப் பின் சீக்கிரமே வீடு வந்த முதலாளி. “நாம் நாளையே உமாஹியாவுக்குக் கிளம்புகிறோம்” என்றார். “எப்படியிருந்தாலும் உமாஹியாவுக்குச் செல்ல வேண்டும்தானே? ஓரிரு வாரங்களுக்கு முன் போகிறோம், அவ்வளவுதான்”. தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியைப் பார்த்தபடி வேகமாகப் பேசினார். அவ்வாறு அவர் இருப்பது தன்னுடைய சொந்த ஊர் வீழ்ந்து விட்டதை ஒப்புக் கொள்ள மறுப்பதாலா அல்லது ஒலான்னா அவருடன் பேசாமல் இருப்பதாலா என்று உக்வு திகைத்தான். அவர்களிருவருக்கிடையே என்ன நடந்ததென்று உக்வுக்குத் தெரியவில்லை. ஆனால் கிராமச் சதுக்கத்தில் நடந்த கூட்டத்திற்குப் பின்புதான் நடந்ததென்று அவன் உணர்ந்தான். வினோதமான மௌனத்துடன் அன்று வீடு வந்து சேர்ந்தாள் ஒலான்னா. இயந்திரத்தனமாகப் பேசினாள். சிரிக்கவில்லை. உணவைப் பற்றியும் பாப்பாவைப் பற்றியுமான எந்தவொரு முடிவையும் அவனையே எடுக்கச் சொல்லி விட்டுப் பெரும்பாலான நேரம் வெராந்தாவிலிருந்த மர நாற்காலியிலேயே சாய்ந்து கிடந்தாள். கொய்யா மரத்தை நோக்கி நடந்து சென்று அதன் தண்டைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டபோது அண்டை வீட்டார்கள் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூறுவதற்கு முன் ஓடிச் சென்று அவளை இழுத்து வர வேண்டுமென்று தனக்குள் கூறிக் கொண்டான். ஆனால் அங்கு அவள் நீண்ட நேரம் நிற்கவில்லை. அமைதியாகத் திரும்பி வந்தவள் மீண்டும் வெராந்தாவில் அமர்ந்து கொண்டாள்.

மிக அமைதியாகக் காணப்பட்டாள். “நம்முடைய உணவுப் பொருட்களையும் துணிமணிகளையும் எடுத்து வை உக்வு” என்று கூறினாள்.

“செய்கிறேன் மா”

அவர்களுடைய பொருட்களை மிக வேகமாக எடுத்து வைத்தான் – குறைந்த அளவே பொருட்கள் இருந்தபடியால் நுஸுக்காவைப் போல எதை எடுப்பது எதை விடுவது என்ற பல விதமான தேர்வில் செயலிழந்து நின்று பின் குறைந்த அளவே எடுத்து வந்தது போன்ற நிலை இங்கு ஏற்படவில்லை. அடுத்த நாள் அதிகாலை அவற்றையெல்லாம் காரில் வைத்த பின்னர் எதையும் விட்டு விடவில்லை என்று உறுதி செய்வதற்காக வீட்டைச் சுற்றி வந்தான். ஒலான்னா ஆல்பங்களை முன்னரே எடுத்து வைத்து விட்டாள். எஜமானர் காரில் எண்ணெயையும் தண்ணீரையும் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கையில் அவர்கள் வண்டியின் முன் காத்து நின்றார்கள். சாலையில் கொத்துக் கொத்தாக மக்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள்.

வீட்டின் பின்னாலிருந்த மண் சுவரின் மரக் கதவு கிறீச்சென்ற ஒலியுடன் திறக்க அனிக்வேனா அங்கிருந்து வந்தான். அவன் எஜமானரின் உறவுமுறைச் சகோதரன். அவனுடைய தந்திரமான உதட்டுச் சுழிப்பு உக்வுக்கு அறவே பிடிக்கவில்லை;அவன் எப்போதும் அவர்களுடைய உணவு நேரத்திலேயே வருவான், ஒலான்னா அவனையும் உண்ண அழைத்தால், அவர்கள் உண்பது கைகளை வாயில் கொண்டு போய்த் தொட்டுக் கொள்வது போன்ற நாசூக்கான வேலை என்ற அர்த்தத்தில் அவன் மிகையான ஆச்சரியத்துடன் ஓ!ஓ! என்பான். இப்போது இறுக்கமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் எஜமானரின் அம்மா நின்று கொண்டிருந்தார்.

“நாங்கள் கிளம்பத் தயாராகி விட்டோம் ஓடேனிக்போ. உன் அம்மா அவர் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு எங்களுடன் வர மறுக்கிறார்” என்றான் அனிக்வேனா.

பானட்டை மூடினார் எஜமானர். “மம்மா, நீங்கள் உகே செல்வதற்கு ஒத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்”.

“எக்வுஜிக்வானானு நோஃபு, அப்படிச் சொல்லாதே! நீ இங்கிருந்து உடனே ஓட வேண்டும், அதனால் நான் உகேவுக்குச் செல்வது என்று நீதான் சொன்னாய். நான் அதற்குச் சரி என்று கூறியதாக நீ கேட்டாயா? உனக்கு “ஓ” என்று நான் சொன்னேனா?”

“அப்படியென்றால் எங்களோடு உமாஹியாவுக்கு வர விரும்புகிறீர்களா?” என்றார் எஜமானர்.

“சாமான்களால் நிரம்பியிருந்த காரை நோக்கினார் மம்மா; ஆனால் நீ ஏன் ஓடுகிறாய்? எங்கே ஓடுகிறாய்? ஏதாவது துப்பாக்கிச் சத்தம் கேட்டதா உனக்கு?”

அபாகனா, உக்போவிலிருந்தெல்லாம் மக்கள் ஊரை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஹௌஸா சிப்பாய்கள் பக்கத்தில் வந்து விட்டார்கள், சீக்கிரமாகவே ஆபாவுக்குள் நுழைந்து விடுவார்கள் என்பதுதான் அதன் அர்த்தம்”.

“ஆபா ஒரு போதும் வீழ்ந்ததில்லை என்று நம் டிபியா சொன்னதை நீ கேட்கவில்லையா? என்னுடைய சொந்த வீட்டை விட்டு யாருக்காக நான் ஓட வேண்டும்? அலு மேலு! உன்னுடைய அப்பா இப்போது நம்மைச் சபித்துக் கொண்டிருப்பார் என்று உனக்குத் தெரியுமா?

“மம்மா, நீங்கள் இங்கே இருக்க முடியாது. ஆபாவில் யாருமே இருக்கப் போவதில்லை”.

எஜமானர் கூறுவதை விட கோலாக்கொட்டை மரத்தில் ஏதாவது பழுத்து வெடித்த நெற்று இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முக்கியமானது என்பது போல கண்ணைச் சுருக்கி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

கார்க் கதவைத் திறந்த ஒலான்னா அதன் பின்னிருக்கையில் பாப்பாவை அமரச் சொன்னாள்.

“கேட்ட வரையில் நல்ல செய்தி இல்லை, ஹௌஸா ராணுவத்தார் நெருங்கி வந்து விட்டார்கள்” என்றான் அனிக்வேனா.நான் உகே செல்லப் போகிறேன். நீ உமாஹியா அடைந்தவுடன் எனக்குச் செய்தி அனுப்பு”. திரும்பி நடக்கத் தொடங்கினான்.

“மம்மா!” என்று கத்தினார் எஜமானர்.” இப்போது போய் உங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வாங்க”!

அவருடைய அம்மாவோ கோலாக்கொட்டை மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். “நான் இங்கேயே தங்கி வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் ஓடிப் போன பின்பு இங்குதான் திரும்பி வருவீர்கள். நான் இங்கே உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பேன். இங்கிருந்து, என்னுடைய சொந்த வீட்டிலிருந்து நான் யாருக்காக ஓட வேண்டும்? க்போ?”

“உன்னுடைய குரலை உயர்த்திப் பேசுவதை விட மென்மையாகப் பேசிப் பார்ப்பது உகந்ததாக இருக்கலாம்” என்று ஆங்கிலத்தில் கூறினாள் ஒலான்னா. உணர்வற்றும் மிகுந்த முறைமையுடனும் இருந்தது அவள் பேச்சு. எஜமானரிடம் அவள் அப்படிப் பேசி உக்வு பார்த்ததேயில்லை, பாப்பா பிறக்கும் முன்பிருந்த சில மாதங்களைத் தவிர.

ஒலான்னா நிச்சயமாக ஆங்கிலத்தில் தன்னை அவமதிக்கிறாளென்ற உறுதியாக நினைத்து அவர்களைச் சந்தேகப் பார்வையுடன் பார்த்தார் எஜமானரின் அம்மா.

“மம்மா, எங்களுடன் வரமாட்டீர்களா? “பிகோ, தயவு செய்து எங்களுடன் வாருங்கள்.”

“உன்னுடைய வீட்டுச் சாவியைக் கொடு. அங்கே எனக்கு ஏதேனும் தேவைப்படலாம்”

“தயவு செய்து எங்களோடு வாங்க”

“சாவியை என்னிடம் கொடு”

அவரையே அமைதியாக வெறித்துப் பார்த்த எஜமானர் பின்னர் கொத்துச் சாவியை அவரிடம் ஒப்படைத்தார். “தயவு செய்து எங்களோடு வந்து விடுங்கள்” மீண்டும் கூறினார். பதிலேதும் கூறாமல் சாவிக் கொத்தைத் தன்னுடைய சுற்றாடையின் ஒரு நுனியில் முடிந்து கொண்டார்.

காரில் ஏறினார் எஜமானர். அதை ஓட்டுகையில் ஒருவேளை அவர் மனம் மாறி அனிக்வேனேயின் பின் ஓடுகிறாரா அல்லது நிற்கச் சொல்லித் தன்னை நோக்கிக் கையசைக்கிறாரா என்ற எதிர்பார்ப்பில் அம்மாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தார். ஆனால் அம்மா அப்படிச் செய்யவில்லை. அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தாலும் கையசைக்கவில்லை. அவர்கள் அழுக்கான சாலையை நோக்கிக் காரைத் திருப்பும்வரை உக்வுவும் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தான். சுற்றத்தார்கள் யாரும் இல்லாத நிலையில் அவர் எப்படித் தனியாக இருக்கப் போகிறார்? ஆபாவிலிருந்து அனைவருமே வெளியேறி விட்டால் அங்கு மார்க்கெட்டே இல்லாத போது அவர் எப்படி உணவுண்ணப் போகிறார்?”

எஜமானரின் தோளைத் தொட்டாள் ஒலான்னா.”அவருக்கு ஒன்றும் ஆகாது, நலமாக இருப்பார். கூட்டரசுப் படைகள் ஆபா வழியாகப் போனாலும் இங்கே தங்க மாட்டார்கள்”

“ஆமாம்” என்ற எஜமானர் சாய்ந்து அவளது கன்னத்தில் முத்தமிட்ட போது அவர்கள் மீண்டும் சகஜமாகப் பேசிக் கொள்கிறார்களென உக்வு மகிழ்வான நிம்மதியடைந்தான். கடந்து செல்லும் அகதிகளின் தொடர் மெலிதாகத் தேய்ந்து கொண்டிருந்தது.

“பேராசிரியர் அச்சாரா உமாஹியாவில் நமக்கு ஒரு வீடு பார்த்து வைத்திருக்கிறார்” எனறு கூறினார் எஜமானர். அவருடைய குரல் மிக உரத்தும் அதி உற்சாகத்துடனும் ஒலித்தது. “பழைய சில நண்பர்கள் ஏற்கெனவே அங்கு இருக்கிறார்கள்,எல்லாமே விரைவில் சரியாகி விடும். எல்லாமே மிக மிக இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பி விடும்”.

ஒலான்னா பதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்ததால், “ஆமாம் ஐயா” என்றான் உக்வு.

அந்த வீட்டில் எதுவுமே சரியாக இல்லை. ஓலைக் கூரையும், விரிசல் விழுந்த, வண்ணம் பூசாத சுவர்களும் அவனை அலைக்கழித்தன. ஆனால் வீட்டுக்கு வெளியே இருந்த குகை போன்ற ஆழமான கழிவறை மலக் குழியையும் அதிலிருந்து ஈக்கள் வெளியே பறந்து வராமலிருக்க அதனை மூடியிருந்த துருவேறிய துத்தநாகத் தகரத்தையும் பார்த்து அதைவிட அதிர்ச்சியடைந்தான். அது பாப்பாவைப் பயங்கரமாக அச்சுறுத்தியது. முதல் முறையாக அவள் அதைப் பயன்படுத்திய போது உக்வு அவளை அசையாமலிருக்கும்படி அழுந்தப் பற்றிக் கொள்ள ஒலான்னா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். பாப்பா அழுது கொண்டே இருந்தாள். பின் வந்த நாட்களிலும் அவள் அழுது கொண்டேயிருந்தாள், இந்த வீடு எஜமானர் வாழத் தகுதியற்றது என அவளுக்கும் கூடத் தெரிந்து விட்டது போலிருந்தது. மூலையில் சிமெண்ட் தரையோடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, புல் மண்டியிருந்த சுற்றுப் புறம், அழும் குழந்தைகளின் ஓலம் கேட்குமளவும் சமைக்கும் எண்ணெய் பிசுக்கின் வாசத்தை உணரும் அளவிலும் வீடுகள் மிக நெருக்கமாக அமைந்திருந்தன. பேராசிரியர் அச்சாரா இந்த வீட்டை வாடகைக்கு எடுத்ததில் எஜமானரை ஏமாற்றி விட்டார் என உக்வு உறுதியாக நம்பினான்; அந்த மனிதனின் முட்டைக் கண்களில் ஏதோ வஞ்சகம் தெரிந்தது. அதுபோக அந்தச் சாலையின் முனையிலிருந்த அவருடைய வீடு பெரியதாகவும் பளீரென்ற வண்ணமும் பூசப்பட்டிருந்தது.

“இது நல்ல வீடு இல்லை மா” என்றான் உக்வு.

சிரித்தாள் ஒலான்னா. உன்னைப் பாரேன். நிறையப் பேர் வீடுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாதா? இந்தத் தட்டுப்பாடு மிகவும் கடுமையானது. அப்பவும் நாம் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமையலறை, வரவேற்பறை மற்றும் சாப்பாட்டு அறையுடன் இருக்கிறோம். உமாஹியாவின் உள்ளூர்வாசியுடன் பரிச்சயமிருந்தது நமது அதிர்ஷ்டம்தான்”.

எதுவும் பேசவில்லை உக்வு. இதுபற்றி அவள் இவ்வளவு மனநிறைவுடன் இருக்கத் தேவையில்லை என்று விரும்பினான்.

“அடுத்த மாதம் திருமணம் வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” சில நாட்கள் கழித்து அவனிடம் கூறினாள் ஒலான்னா. “மிகச் சிறிய நிகழ்வு. வரவேற்பும் இங்குதான் இருக்கும்”.

உக்வு அதிர்ச்சியடைந்தான். அவர்களுடைய திருமணத்திற்காகக் கச்சிதமானதொரு நிகழ்வைக் கற்பனை செய்து வைத்திருந்தான், நுஸுக்காவிலிருக்கும் வீடு கொண்டாட்டமாக அலங்கரிக்கப்பட்டும், அப்பழுக்கற்ற விறைப்பான மேசை விரிப்புகள் மீது விதவிதமான பதார்த்தங்கள் அடுக்கப்பட்டுமிருக்க வேண்டும். இந்த உயிரற்ற அறைகளும் கரையான் மண்டிய சமையலறையும் கொண்ட வீட்டில் திருமணத்தை வைத்துக் கொள்வதை விட போர் முடியும் வரை அவர்கள் காத்திருப்பது நல்லது.

எஜமானரும் இந்த வீட்டைப் பற்றி அதிகம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. மாலையில் இயக்குநகரகத்திலிருந்து திரும்பியதும் வெளியே அமர்ந்து பியாஃப்ரா வானொலியையும், பிபிசியையும் திருப்தியாகக் கேட்டுக் கொண்டிருப்பார் அந்த வெராந்தாவில் சேறு படிந்த தளங்களே இல்லை என்பது போலவும், அந்தப் பச்சை மர பெஞ்சு நுஸுக்காவின் பஞ்சு போன்ற மெத்தென்ற இருக்கை போலவும் அவருக்குத் தோன்றுகிறது போல. வாரங்கள் நழுவிச் செல்ல அவரது நண்பர்கள் அங்கு வரத் தொடங்கினர். சில சமயம் சாலையின் முடிவில் உள்ள ரைஸிங் சன் மதுக் கூடத்துக்கு அவர்களுடன் செல்வார் எஜமானர். மற்ற பொழுதுகளில் வெராந்தாவில் அமர்ந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். அவர்களின் வருகை உக்வுக்கு வீட்டின் இழிநிலையைக் கண்டு கொள்ளாமலிருக்க வைத்தது. இப்போதெல்லாம் அவன் மிளகு சூப்பும் மதுவும் பரிமாறுவதில்லை, ஆனால் அவர்களுடைய குரல்களின் சீரான எழுச்சியையும் தாழ்வையையும், சிரிப்பையும், பாடல்கள் மற்றும் எஜமானரின் கூக்குரலையும் அவனால் கேட்க முடிந்தது. பிரிவினைக்குப் பின் வாழ்க்கை நுஸுக்காவிலிருந்ததைப் போல நெருக்கமாக வந்து கொண்டிருந்தது; நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது.

முழங்கால் வரை நீண்டு தொங்கும் மினுமினுக்கும் கண்ணாடிகள் பதித்த மேலங்கியை அணிந்து வரும் ஸ்பெஷல் ஜூலியஸை உக்வுக்கு மிகப் பிடிக்கும். அவன் ஒரு ராணுவ ஒப்பந்தக்காரன். அவன்தான் எஜமானருக்கு அட்டைப்பெட்டி நிறைய தரமான பிராண்டுகளின் பியர் போத்தல்களும் விஸ்கியும் கொண்டு வருபவன்; காரை மறைக்கும் பொருட்டு அதன்மீது தென்னங்கீற்றுகளைப் பரப்பியும் முகப்பு விளக்குகளுக்குத் தார் கறுப்பு வண்ணமும் அடிக்கும்படி யோசனை கூறியவனும் ஸ்பெஷல் ஜூலியஸ்தான்.

“வான்வழித் தாக்குதல் நடப்பது அரிது, ஆனாலும் எச்சரிக்கை என்பது நமது தாரக மந்திரம் என்று கையில் பிரஷைப் பிடித்துக் கொண்டே கூறினார் எஜமானர். கொஞ்சம் தார் ஒழுகி சக்கரத்தின் மேற்தகட்டின் மீது பட்டு அதன் நீல வண்ணத்தை அழித்து விட்டது. பின்னர் எஜமானர் உள்ளே சென்றவுடன் முகப்பு விளக்குகளில் மட்டுமே கறுப்பு வண்ணம் தெரியும்படிச் சிந்தியதைக் கவனமாகத் துடைத்தெடுத்தான் உக்வு.

உக்வுக்கு மிக உகந்த விருந்தாளி பேராசிரியர் எக்வேனுகோ. அவர் அறிவியல் குழுவின் தலைவர். அவருடைய ஆள்காட்டி விரல் மிக நீளமாக இருக்கும். அதில் தாளமிட்டுக் கொண்டே தானும் தன்னுடைய சக ஊழியர்களும் என்ன செய்கிறோமென்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போது அந்த விரல் நீண்ட மெல்லிய வாள் போலவும் அதை அவர் கூர்தீட்டிக் கொண்டிருப்பது போலவும் தோன்றும். ஒக்புனிக்வே என்றழைக்கப்படும் வெடி மருந்து, தேங்காய் எண்ணெயிலிருந்து பிரேக் ஆயில், உலோகக் கழிவிலிருந்து கார் எஞ்சின்கள்,கவசப் பாதுகாப்புடைய வாகனங்கள், கை வெடிகுண்டுகள். அவர் ஏதேனும் அறிவிப்பு செய்யும் போதெல்லாம் மற்றவர்கள் உற்சாகக் குரலெழுப்புவார்கள், சமையலறை ஸ்டூலில் அமர்ந்தபடியே உக்வு கூடக் குரலெழுப்புவான். பேராசிரியர் எக்வேனுகோவின் முதல் பியாஃப்ரன் ராக்கெட் பற்றிய அறிவிப்பே உள்ளதிலேயே அதிகக் கைதட்டல் பெற்றது.

“இன்று மதியம்தான் அதை ஏவினோம், இந்த மதியத்தில்தான்” என்று நகத்தைத் தடவிக் கொண்டே கூறினார். “நம்முடைய சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ராக்கெட். என் மக்களே, நாம் நமது பாதையில் நடக்கிறோம்”.

“மிகுந்த கூர்மதியுடையவர்களைக் கொண்டது நமது நாடு” யாரென்று குறிப்பாக இல்லாமல் பொதுவாகக் கூறினான் ஸ்பெஷல் ஜூலியஸ். “பியாஃப்ரா அறிவாளிகள் நிரம்பிய நாடு!”.

“அறிவாளிகள் நிரம்பிய நாடு” அதையே திருப்பிக் கூறினாள் ஒலான்னா. புன்னகைக்கும் சிரிப்புக்கும் இடையேயான நுட்பமான கணம் அவள் முகத்தில் நிழலாடியது.

கைதட்டல்கள் விரைவில் பாடல்களுக்குத் தாவியது.

ஒற்றுமை என்றென்றும்!
ஒற்றுமை என்றென்றும்!
நமது குடியரசு வெல்லும்!

அவர்களோடு இணைந்து பாடிய உக்வுக்குத் தானும் மக்கள் பாதுகாப்புப் படையிலோ அல்லது புதர்களுக்குள் ஒளிந்திருக்கும் நைஜீரியன்களைத் தேடிப் பிடிக்கும் போராளிப்படையிலோ சேர வேண்டுமென்ற ஆசை மீண்டும் எழுந்தது. போர் பற்றிய செய்திகளே அன்றைய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சீரான வேகத்தில் முரசொலி முழங்க கம்பீரமான குரல்.

நிலையான விழிப்புணர்வே சுதந்திரத்தின் விலை! இது ரேடியோ பியாஃப்ரா, எனுகு! இன்றைய போர் நிலவரச் செய்திகள்.

பியாஃப்ரன் துருப்புகள் எஞ்சியுள்ள பகைவர்களையும் வெளியேற்றியுள்ளது, நைஜீரியர்களின் உயிரிழப்பு அதிகமாக உள்ளது, சுத்தமாகத் துடைத்தெறியும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது- இப்படியான பிரகாசமான செய்தியைக் கேட்ட பிறகு ராணுவத்தில் இணைவதைப் பற்றிக் கற்பனையில் மூழ்குவான் உக்வு. பயிற்சி முகாமிற்குச் சென்ற புதிய படைவீரன் போல அவன் இருப்பான். உறவினர்களும் நலம் விரும்பிகளும் பக்கவாட்டில் நின்று உற்சாகக் குரலெழுப்ப- பிரகாசமான விழிகளுடன், கஞ்சி போட்ட விறைப்பான சீருடையுடன், அதன் கைப்பகுதியில் அரைமஞ்சள் சூரியன் பளீரென்று துலங்க அவன் தோன்றுவான்.

தானும் ஒரு பங்காற்ற வேண்டும், ஒரு செயலைச் செய்ய வேண்டுமென அவன் ஏங்கினான். போரை வெல்ல வேண்டும். அதனால் பியாஃப்ரா மேற்கின் மையப்பகுதியைக் கைப்பற்றிய செய்தியும், பியாஃப்ரா படைகள் லாகோஸ் நோக்கி முன்னேறுவதும் ரேடியோ வழியாக வந்த போது அவனுள் நிம்மதியும் ஏமாற்றமும் கலந்த விநோதமான உணர்வு ஏற்பட்டது. அவர்களுக்கு வெற்றி கிட்டி விட்டது. ஓடிம் தெருவிலுள்ள அவர்கள் வீட்டிற்குச் செல்லவும் அவனது குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கவும் மற்றும் நேஸினாச்சியைப் பார்க்கவும் ஆர்வமாக இருந்தான். ஆயினும் போர் முடிந்து விட்டது, அதுவும் அவனது பங்களிப்பு எதுவும் இல்லாமலேயே முடிந்து விட்டது. ஸ்பெஷல் ஜூலியஸ் ஒரு போத்தல் விஸ்கியைக் கொண்டு வந்ததும், விருந்தினர்கள் அனைவரும் பியாஃப்ராவின் வலிமையைப் பற்றியும் நைஜீரியர்களின் மடத்தனத்தைப் பற்றியும் பிபிஸி செய்தி வாசிப்பாளர்களின் முட்டாள்தனத்தைப் பற்றியும் போதையுடன் பாடிக் கொண்டும் உரக்கக் கத்திக் கொண்டும் களியாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“ஆங்கிலேயனின் வாய்க்கொழுப்பைப் பார், “பியாஃப்ராவின் வியத்தகு செயல்” உண்மைதான்!

“ஹெரால்ட் வில்சன் அந்த முஸ்லீம் மேய்ப்பர்களுக்குக் கொடுத்த ஆயுதங்களெல்லாம் அவர்கள் நம்பியது போல நம்மை அவ்வளவு விரைவில் கொன்று குவிக்கவில்லை என்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது”

“நீ ரஷ்யாவைத்தான் குற்றம் சொல்ல வேண்டும், பிரிட்டனை அல்ல”.

“நிச்சயமாக பிரிட்டன். நுஸுக்கா பகுதியிலிருந்து சில எறிகுண்டுகளின் ஓடுகளை நம்முடைய பையன்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஒவ்வொன்றிலும் பிரிட்டன் போர்த் துறைச் சின்னம் இருந்தது”.

“அவர்களுடைய வானொலிச் செய்திகளிலும் பிரிட்டிஷ் உச்சரிப்புக் குறுக்கிடுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம்”

“அப்படியென்றால் பிரிட்டன் மற்றும் ரஷ்யா, அந்தக் கேடு கெட்ட கூட்டணி வெற்றியடையாது”.

அந்தக் குரல்கள் மேலும் மேலும் உயர்ந்து ஒலித்தன, உக்வு கவனிப்பதை நிறுத்தி விட்டான். எழுந்து பின் பக்க வழியாக வெளியே சென்றவன் சிமெண்ட் தரையோடுகள் போடப்பட்டு மேடாக இருந்த இடத்தில் அமர்ந்தான். பியாஃப்ரா இளைஞர் படையைச் சேர்ந்த பையன்கள் சிலர் துப்பாக்கி வடிவிலான குச்சியை வைத்துக் கொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்தனர். தவளை போல் குதித்துக் கொண்டு ஒருவர் மற்றொருவரை கேப்டன் என்றும் துணைப்படைத் தளபதி என்றும் அழைத்துக் கொண்டனர்.

சாலையோரத்தில் கூவி விற்கும் விற்பனைப் பெண் தலையிலிருந்த தட்டு விழாமலிருக்கும் பொருட்டு ஆடி ஆடி சமன் செய்தபடியே நடந்து சென்றாள்.”காரி வாங்கலையோ காரி ! காரி வாங்குங்க!”.

எதிர் வீட்டிலிருந்த இளம்பெண் அவளை அழைத்த போது நின்றாள். சற்று நேரப் பேரத்திற்குப் பின் அந்த இளம்பெண் கத்தினாள், “மக்களைக் கொள்ளையடிக்க வேண்டுமென்றால் அதைப் போய் நேரடியாகச் செய், இப்படி இந்த விலைக்குக் காரியை விற்கிறேன் என்று மட்டும் கூறாதே”.

சீறியபடியே அங்கிருந்து அகன்றாள் விற்பனைப் பெண்.

அந்த இளம்பெண்ணை உக்வு அறிவான். அவளுடைய புட்டங்கள் எவ்வளவு கச்சிதமாக உருண்டு திரண்டிருக்கின்றனவென்றும் அவள் நடக்கும் போது அவை ஒத்திசைவாக எப்படி அசைகின்றதென்றும் நோட்டமிடவே முதலில் அவளைப் பார்த்தான். அவளுடைய பெயர் எபிரேச்சி. அண்டை வீட்டார் அவளைப் பற்றிப் பேசுவதை அவன் கேட்டிருக்கிறான்; ஒரு விருந்தாளிக்குக் கோலாக்கொட்டையைக் கொடுப்பது போல அங்கு வருகை புரிந்த ஒரு ராணுவ அதிகாரி ஒருவருக்கு அவளைக் கொடுத்து விட்டனர் பெற்றோர்கள். இரவில் அதிகாரியின் வீட்டுக் கதவை மெல்லத் தட்டி, பின் திறந்து அவளை மெதுவாக உள்ளே தள்ளி விட்டு விட்டார்கள். அடுத்த நாள் காலை பெருமிதத்தில் மிதந்த அதிகாரி அதேபோலப் பெருமிதம் பொங்க நின்றிருந்த பெற்றோர்களிடம் நன்றி கூறினான். எபிரேச்சியும் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

அவள் தன் வீட்டுக்குள் சென்று மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்த உக்வு, ஒரு அந்நியனுக்குத் தான் படைக்கப்பட்டதைப் பற்றி அவள் எப்படி உணர்ந்திருப்பாள், அறைக்குள் அவள் தள்ளி விடப்பட்ட பின்னர் என்ன நடந்திருக்கும், இதில் அதிகம் பழி சொல்ல வேண்டியது அந்தப் பெற்றோர்களையா அல்லது அந்த அதிகாரியையா என்றெல்லாம் நினைத்து ஆச்சரியமடைந்தான். அவன் பழி பாவம் பற்றி அதிகம் நினைக்க விரும்பவில்லை, ஏனென்றால் பாப்பா பிறப்பதற்கு முன்பான சில வாரங்கள், அவன் எப்போதும் மறக்க விரும்பும் அந்தச் சில வாரங்களில் எஜமானரும் ஒலான்னாவும் இருந்த நிலையை அது அவனுக்கு நினைவூட்டியது.

திருமண நாளன்று ஒரு மழைத்தடுப்புக் கூடாரத்தை ஏற்பாடு செய்தார் எஜமானர். ஒரு முதியவர் சீக்கிரமாகவே வந்து வீட்டின் பின்பக்கம் ஆழமற்ற சின்னக் குழியைத் தோண்டி அதில் நெருப்பு வளர்த்தார். அதனுடைய அடர்த்தியான நீலப் புகைக்குள் அமர்ந்தபடியே உலர்ந்த இலைகளை நெருப்புக்கு உணவாக அளித்துக் கொண்டிருந்தார்.

அவருக்காக அரிசிச் சாப்பாடும் இறைச்சியும் ஒரு தட்டில் வைத்து எடுத்துச் சென்ற உக்வுவிடம், “மழையெல்லாம் வராது, திருமணம் நடந்து முடியும்வரை ஒன்றும் நடக்காது” என்றார். அவருடைய மூச்சில் கடுமையான ஜின் வாசமிருப்பதை உணர்ந்தான் உக்வு. மிகவும் கவனத்துடன் இஸ்திரி செய்யப்பட்டிருந்த தனது சட்டைக்குள் புகை ஊடுருவுவதை விரும்பாத உக்வு திரும்பி வீட்டிற்குள்ளே சென்றான். ஒலான்னாவின் உறவுச் சகோதரர்களான ஓடின்சேஷோ, எக்கேனே இருவரும் தங்கள் ராணுவச் சீருடையில் வெளியே வெராந்தாவில் அமர்ந்திருந்தார்கள். தன்னுடைய காமெராவை அப்படியும் இப்படியும் அசைத்துக் கொண்டிருந்தார் புகைப்படக் கலைஞர். சில விருந்தாளிகள் வரவேற்பறையில் அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டு ஒலான்னாவுக்காகக் காத்திருந்தார்கள். அவ்வப்போது யாராவது ஒருவர் அங்கு வந்து பரிசுக் குவியல்களுக்கிடையே எதையோ வைத்து விட்டுச் சென்றார்கள்-ஒரு பானை, ஸ்டூல், மின்விசிறி, அவளுடைய அறைக்கதவைத் தட்டிய பின் திறந்தான் உக்வு.

“உங்களைத் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப் பேராசிரியர் அச்சாரா தயாராக இருக்கிறார் மா” என்றான்.

“சரி” கண்ணாடியிலிருந்து முகத்தைத் திருப்பினாள் ஒலான்னா.

“பாப்பா எங்கே? அவள் வெளியே விளையாடப் போகவில்லைதானே? அவளுடைய ஆடை அழுக்காவதை நான் விரும்பவில்லை”.

“அவள் வரவேற்பறையில் இருக்கிறாள் மா”.

கோணலாக இருந்த கண்ணாடி முன் அமர்ந்தாள் ஒலான்னா. அவளுடைய சுடர் வீசும், அப்பழுக்கறற பட்டு போன்ற முகம் முழுவதும் வெளித் தெரியும்படி கூந்தல் உயர்த்திக் கட்டப்பட்டிருந்தது. இவ்வளவு அழகாக அவளை முன்னெப்போதும் பார்த்ததில்லை உக்வு. ஆயினும் தலையின் ஒரு பக்கமாக அணிந்திருந்த தந்தம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத் தொப்பியின் ஊசிகள் சரியாக உள்ளனவா என்று உறுதி செய்து கொள்ளத் தொப்பியை அவள் தட்டிப் பார்த்த போது சோகம் பூசிய தயக்கம் அவளிடம் தெரிந்தது.

“மது எடுத்துச் செல்லும் சம்பிரதாயத்தை நமது படைகள் உம்முன்னாச்சியை மீட்ட பின்னர் வைத்துக் கொள்ளலாம்”. ஏதோ அந்த விஷயம் உக்வுக்குத் தெரியாதது போலக் கூறினாள்.

“ஆமாம் மா”

“போர்ட்-ஹார்-கோர்ட்டிலிருக்கும் கைநேனேவுக்குத் தகவல் அனுப்பி விட்டேன். அவள் வர மாட்டாளென்று தெரியும், இருப்பினும் அவளுக்குத் தெரிய வேண்டுமென்று விரும்பினேன்”

சற்றே தயங்கினான் உக்வு. “அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மா”

எழுந்து நின்று தன்னை ஒரு முறை நோட்டமிட்டாள் ஒலான்னா. இடுப்பிலிருந்து விரிந்து இறங்கி முழங்காலுக்குக் கீழே நின்ற விசிறி மடிப்புகளுடைய தந்த, இளஞ்சிவப்பு வண்ணம் கொண்ட தன் உடையின் பக்கவாட்டில் கைகளை ஓட்டினாள். இந்தத் தையல்கள் சீராகவே இல்லை. அரிஸே இதை விட அழகாக வடிவமைத்திருப்பாள்”.

உக்வு ஏதும் பேசவில்லை. அவனால் மட்டும் அவளை நெருங்கி அந்தத் துயரம் தோய்ந்த முகத்திலுள்ள இதழ்களிலிருந்து சோகமான புன்னகையை உருவி எடுத்து விட முடிந்தால் எப்படி இருக்கும், அவ்வளவு சிறிய செயலாக அது இருந்திருக்கக் கூடாதா?

ஒருக்களித்துத் திறந்திருந்த கதவைத் தட்டினார் பேராசிரியர் அச்சாரா. ஒலான்னா? தயாராகி விட்டாயா? ஓடேனிக்போவும் ஸ்பெஷல் ஜூலியஸும் ஏற்கெனவே தேவாலயத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்”.

“நான் தயாராக இருக்கிறேன், தயவு செய்து உள்ளே வாருங்கள்” என்றாள் ஒலான்னா. “பூக்களைக் கொண்டு வந்தீர்களா?”

பல வண்ணப் பூக்களைக் கொண்ட நெகிழிப் பூங்கொத்தை அவளிடம் நீட்டினார் அச்சாரா. சட்டென்று பின் வாங்கினாள் ஒலான்னா. “இது என்ன? எனக்கு இயற்கை மலர்கள் வேண்டும்”.

“இங்கே உமாஹியாவில் யாருமே பூக்களை வளர்ப்பதில்லை. சாப்பிடக் கூடியவற்றை மட்டுமே பயிரிடுகிறார்கள்” சிரித்துக் கொண்டே கூறினார் அச்சாரா.

“அப்படியென்றால் நான் பூக்களைப் பிடிக்க மாட்டேன்” என்றாள் ஒலான்னா.

அந்த நெகிழிப் பூக்களை வைத்துக் கோண்டு என்ன செய்வதென்று புரியாத நிச்சயமற்றதொரு கணம் நிலவியது: ஒலான்னா அதை நீட்டிக் கொண்டிருக்க பேராசிரியர் அச்சாரா அதை வாங்காமல் தொட்டபடி மட்டும் நின்றிருந்தார். இறுதியில் அதைத் திருப்பி வாங்கிக் கொண்டவர், வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று கூறிக் கொண்டே அறையை விட்டு அகன்றார்.

திருமணம் மிக எளிமையாக நடந்தது. ஒலான்னா பூக்களை ஏந்திக் கொள்ளவில்லை. மிகச் சிறிய புனித செபாஸ்டியன் கத்தோலிக்க தேவாலயம் அங்கு வந்திருந்த நண்பர்களால் பாதி மட்டுமே நிரம்பியிருந்தது. அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று உக்வு கூர்ந்து கவனிக்கவில்லை. ஏனென்றால் திருப்பலி மேடையிலிருந்த அழுக்கான வெள்ளைத் துணியை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில் தனக்குத் திருமணம் நடப்பதாகக் கற்பனை செய்து கொண்டான். முதலில் அவனது மணமகள் ஒலான்னா, பின்னர் அவள் நேஸினாச்சியாகவும் அதன் பின் கச்சிதமான உருண்டையான புட்டங்களையுடைய எபிரேச்சியாகவும் மாறினாள். அனைவரும் அதே இளஞ்சிவப்பு மற்றும் தந்த வண்ண ஆடையும் பொருத்தமான சிறிய தொப்பியும் அணிந்திருந்தார்கள். வீட்டிற்குப் பின்பக்கம் தோன்றிய ஒக்கியோமாவின் உருவம்தான் உக்வுவைக் கற்பனை உலகத்திலிருந்து நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது. உக்வுவின் ஞாபகத்தில் தங்கியிருந்ததைப் போல சற்றும் தோற்றமளிக்கவில்லை ஒக்கியோமா: கவிஞர் ஒக்கியோமாவின் கலைந்த கேசமும் கசங்கிய சட்டையும் காணாமல் போய் விட்டன. அவருடைய திருத்தமான மற்றும் பொருத்தமான அளவுகள் கொண்ட ராணுவச் சீருடையில் மிடுக்காகவும் ஒல்லியாகவும் தெரிந்தார். சட்டையின் கைப்பகுதியில் அரைமஞ்சள் சூரியனுக்கு அருகே மண்டையோடு மற்றும் எலும்புகளின் உருவும் பொறிக்கப்பட்டிருந்தன. எஜமானரும் ஒலான்னாவும் அவரைப் பல முறை அணைத்துக் கொண்டனர். உக்வுவும் அவனை அணைத்துக்கொள்ள விரும்பினான், ஏனென்றால் ஒக்கியோமாவின் சிரித்த முகம் கடந்த காலத்தைக் கண நேரம் வலுவுடன் இழுத்து வந்து மங்கிய புகை சூழ்ந்த அந்த அறை ஓடிம் தெருவின் வரவேற்பறை போல உணர்ந்தான்.

ஒக்கியோமா மெலிந்த தோற்றமுடைய தனது உறவுச் சகோதரன் டாக்டர்.ந்வாலாவை அழைத்து வந்திருந்தான்.

அல்பட்ராஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக இருக்கிறானென்று அவனை அறிமுகப்படுத்தி வைத்தான் ஒக்கியோமா. அவன் ஒலான்னாவை எரிச்சலூட்டக்கூடிய அப்பட்டமான ஈர்ப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் தலைமை மருத்துவ அதிகாரியாகவோ யாராகவோ இருந்து விட்டுப் போகட்டும், அந்தத் தவளைக் கண்களை ஒலான்னாவிடமிருந்து விலக்கிக் கொள் என்று எச்சரிக்க நினைத்தான் உக்வு. ஒலான்னாவின் மகிழ்ச்சியில் ஈடுபாடு மட்டுமல்ல, தனக்குப் பொறுப்பிருப்பதாகவும் உணர்ந்தான் உக்வு. வெளியே நண்பர்கள் வட்டமாக நின்று கைதட்ட, நடுவே அவளும் எஜமானரும் நடனமாடிக் கொண்டிருக்கையில் அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள். என்று உக்வு நினைத்துக் கொண்டான்.அந்தத் திருமணம் நிலைத்த தன்மைக்கு முத்திரையிடுவது போன்றது, ஏனென்றால் அவர்கள் திருமணமானவர்களாக நீடித்திருக்கும் பட்சத்தில் அவர்களுடனான அவனுடைய உலகம் பாதுகாப்பானது.ஸ்பெஷல் ஜூலியஸ் நளின நடன இசையைத் துள்ளலாட்ட இசைக்கு மாற்றும் வரை உடலோடு ஒட்டி நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் அதன்பின் பிரிந்து நின்று கைகளைப் பற்றிக் கொண்டே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு ரெக்ஸ் லாஸனின் “வாழ்க பியாஃப்ரா, சுதந்திர நிலம்” என்ற புதிய பாடலுக்கு அசைந்தாடினார்கள். குதிகால் காலணியில் எஜமானரை விட ஒலான்னா உயரமாகத் தெரிந்தாள். புன்னகைத்துக் கொண்டு, பிரகாசித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டிருந்தாள். ஒக்கியோமா தனது சிறப்புப் பானத்தைத் தொடங்குகையில் நிலைச்சட்டகத்துக்குப் பின்னிருந்த புகைப்படக் கலைஞரிடம்,”சற்றுப் பொறுங்கள், இப்போது படமெடுக்க வேண்டாம்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.

வரவேற்பறையில் அவர்கள் கேக் வெட்டுவதற்குச் சற்றே முன்பாக வ்வா-வ்வா-வா என்று வானில் வேகமாக ஒலித்த கர்ஜனையைக் கேட்டான் உக்வு. முதலில் அது இடியோசையாகவும் அதன்பின் ஒரு கணம் அடங்கி மறுபடியும் அதைவிட வேகமாகவும் பேரோசையுடனும் மீண்டும் ஒலித்தது. எங்கேயோ பக்கத்தில் கோழிக்குஞ்சுகள் பலமாகக் கிறீச்சிட்டன.

“பகைவர்களின் விமானம்! வான் வழித் தாக்குதல்!” என யாரோ கூறினார்கள்.

“வெளியே செல்வோம்” என்று எஜமானர் கத்தினார், ஆனால் சில விருந்தாளிகள் “ஜீஸஸ்! ஜீஸஸ்! என்று கூக்குரலிட்டுக் கொண்டு படுக்கையறையை நோக்கி ஓடினர்.

இப்போது தலைக்கு மேலே அந்தச் சத்தம் மேலும் பலத்த ஓசையுடன் ஒலித்தது.

அவர்கள் -எஜமானர், பாப்பாவைக் கையில் ஏந்திக் கொண்டே ஒலான்னா, உக்வு, சில விருந்தாளிகள்- வீட்டுக்குப் பக்கவாட்டிலிருந்த மரவள்ளிக் கிழங்குத் தாவர மறைவை நோக்கி ஓடிச் சென்று அங்கே குப்புறப் படுத்துக் கொண்டார்கள். தலையை உயர்த்தி உக்வு மேலே பார்த்த போது நீலவானத்தின் கீழே வேட்டைப் பறவைகளைப் போல இரு விமானங்கள் தாழப் பறந்து கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான குண்டுகளைப் பொழிவதற்கு முன் முட்டையிடுவதைப் போல அவற்றின் வயிற்றிலிருந்து கருமையான பந்துகள் உருண்டு கீழே வந்து கொண்டிருந்தன. பெருத்த ஓசையுடன் முதல் வெடிகுண்டு வெடித்த போது அதிர்ந்த நிலத்தோடு சேர்ந்து உக்வுவின் உடல் மேலெழுந்து குலுங்கியது. சத்தத்தில் அவன் காதே பிய்ந்து விழுந்தது போல இருந்தது. எதிர்வீட்டுப் பெண் ஒருவர் ஒலான்னாவின் வெண்ணிற ஆடையைப் பிடித்து இழுத்தாள். “இதைக் களைந்து விடு, இந்த வெண்ணிற ஆடையைக் களைந்து விடு! அவர்கள் இதைப் பார்த்து விட்டு நம்மைக் குறி வைப்பார்கள்!”.

பட்டன்கள் தெறித்து விழ தனது சீருடையின் மேல்சட்டையைக் கழற்றி ஒலான்னாவைச் சுற்றிப் போர்த்தினான் ஒக்கியோமா. பாப்பா அழத் துவங்கி விட்டாள். விமான ஓட்டிகளுக்கு அவளுடைய அழுகுரல் கேட்டு விடுமென்பது போலப் பாப்பாவின் வாயில் தனது கைகளை வைத்து மெதுவாகப் பொத்தினார் எஜமானர். இரண்டாம் வெடி வெடித்தது, அதன்பின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் எனத் தொடர்ந்தன. தனது கால்சராயில் வெதுவெதுப்பான சிறுநீரின் ஈரத்தை உணர்ந்த உக்வு இந்தக் குண்டு வெடிப்புகள் முடியப் போவதில்லை என்று உறுதியாக நம்பினான். ஆனால் அவர்கள் நிறுத்தி விட்டனர். விமானங்கள் வானில் தொலைதூரத்துக்கு நகர்ந்து விட்டன. ஸ்பெஷல் ஜூலியஸ் எழுந்து நின்று “அவர்கள் போய் விட்டார்கள்” என்று கூறும் வரை நெடுநேரத்திற்கு யாரும் அசையவோ பேசவோ இல்லை.

“விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்தன. என்னால் அந்த விமான ஓட்டியைக் கூடப் பார்க்க முடிந்தது:” உற்சாகமாகக் கூவினான் ஒரு சிறுவன்.

ஒக்கியோமாவும் எஜமானரும்தான் முதலில் வெளியேறி சாலைப் பகுதியை நோக்கி நடந்தார்கள். மேல் உள்ளாடையும் கால்சராயும் மட்டுமே அணிந்திருந்த ஒக்கியோமா சின்னஞ்சிறு உருவமாகத் தோன்றினான். திருமண ஆடையின் மீது பசும் வடிவங்கள் அச்சிடப்பட்ட ராணுவ மேல் சட்டை போர்த்தப்பட்டிருந்த ஒலான்னா பாப்பாவை அணைத்துக் கொண்டு நெடுநேரம் நிலத்திலேயே அமர்ந்திருந்தாள். உக்வு எழுந்து சாலையை நோக்கி நடந்தான். “உங்களுக்கு உதவ அனுமதியுங்கள், இந்த அழுக்கு உங்கள் ஆடையைக் கறைப்படுத்தி விடும்” என்று ஒலான்னாவிடம் டாக்டர். ந்வாலா கூறுவது அவன் காதில் விழுந்தது.

ஒரு தெரு தள்ளியிருக்கும் மக்காச்சோள அரவை நிலையத்தின் வளாகத்திலிருந்து புகை மேலெழும்பி வந்தது. இரண்டு வீடுகள் அடியோடு இடிந்து சிதைந்திருந்தன. “அந்த அழுகை உன் காதில் விழுந்ததா? உனக்குக் கேட்டதுதானே? என்று கூறிக் கொண்டே இரண்டு ஆண்கள் அந்த இடிபாடுகளை மூர்க்கமாகத் தோண்டித் தேடிக் கொண்டிருந்தார்கள். இறந்து கிடந்த உடல்கள் அனைத்தையும் வெண்ணிறப் புழுதி போர்த்தியிருக்க சடலங்கள் திறந்த கண்களுடன் எலும்புகளற்ற பிசாசுகள் போலத் தோற்றமளித்தன.

“அந்தக் குழந்தை உயிருடன் இருக்கிறது. அதன் அழுகையை நான் கேட்டேன், நான் கேட்டேன்” யாரோ கூறினார்கள். பார்க்கவும் உதவி செய்யவும் ஆண்களும் பெண்களும் அங்கே குழுமி விட்டார்கள். சிலர் இடிபாடுகளைத் தோண்டினார்கள், சிலர் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றும் பலர் அலறிக் கொண்டும் கைகளை உதறிச் சொடக்குப் போட்டுக் கொண்டிமிருந்தார்கள்; ஒரு கார் எரிந்து கொண்டிருந்தது: அதனருகில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது, அவள் ஆடைகள் கருகியிருந்தன, அவளுடைய கருத்த உடல் முழுவதும் இளஞ்சிவப்புத் தசைத் துணுக்குகள் புள்ளிகளாகச் சிதறியிருந்தன. யாரோ ஒருவர் கிழிந்த சணல் மேலங்கியால் அவள் உடலைப் போர்த்திய பின்பும் விறைப்பான, எரிந்து கரிக்கட்டையாகிப் போன அவள் கால்களை உக்வுவால் காண முடிந்தது. வானம் மேக மூட்டத்துடனிருந்தது. மழை வரும் அறிகுறியின் ஈர மண் வாசம் எரியும் நெருப்பின் புகை வாசத்துடன் கலந்து வீசியது. சிதைவுகளைத் தோண்டுவதில் ஒக்கியோமாவும் எஜமானரும் இணைந்து கொண்டனர். “அந்தக் குழந்தையின் குரல் கேட்டது,” மீண்டும் யாரோ கூறினார்கள். “அந்தக் குழந்தையின் குரல் கேட்டது”.
அங்கிருந்து நகர்வதற்காகத் திரும்பினான் உக்வு. ஒரு நவீனக் காலணி தரையில் கிடந்தது. அதைக் கையிலெடுத்த உக்வு அதை மீண்டும் அங்கேயே போடும் முன் அதன் தோல் வார்களை, அழுத்தமான குதிகால் பகுதியைப் பார்த்தான். பாதுகாப்புத் தேடி ஓடுகையில் அதைக் கழற்றி வீசி எறிந்திருக்கும் நவ நாகரீக யுவதியை அவன் கற்பனை செய்து பார்த்தான், மற்றுமொரு காலணி எங்கே இருக்குமென்று யோசித்தான்.

எஜமானர் வீட்டுக்கு வந்த போது வரவேற்பறையின் தரையில் சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டிருந்தான் உக்வு. கேக் துண்டை எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள் ஒலான்னா.தனது திருமண ஆடையையே அப்போதும் அணிந்து கொண்டிருந்தாள்;ஒக்கியோமாவின் சீருடை நேர்த்தியாக மடிக்கப்பட்டு நாற்காலி மீது வைக்கப்பட்டிருந்தது. விருந்தாளிகள் அதிகம் பேசாமல், ஏதோ தாங்கள்தான் திருமண நிகழ்வைச் சீரழிக்கும் பொருட்டு வான்வழித் தாக்குதல் நடத்த அனுமதி அளித்தவர்கள் போன்ற குற்றவுணர்வு முகமெல்லாம் நிழலாட மெதுவாக அங்கிருந்து அகன்றார்கள்.

தனக்காகப் பனை மதுவை ஒரு கோப்பையில் ஊற்றிக் கொண்டார் எஜமானர்.

“செய்திகள் கேட்டாயா?”

“இல்லை’ என்றாள் ஒலான்னா. மத்தியமேற்குப் பகுதியில் கைப்பற்றியிருந்த பிரதேசங்களையெல்லாம் நமது படைகள் இழந்து விட்டன. லாகோஸை நோக்கிச் சென்ற அணிவகுப்பும் முடிந்து விட்டது. இனிமேல் இது போலீஸ் நடவடிக்கை இல்லை, இது ஒரு போர் என்று நைஜீரியா சொல்கிறது” அவர் தலையை ஆட்டிக் கொண்டார். “நாம் நாசமடைந்து விட்டோம்”.

“கொஞ்சம் கேக் சாப்பிடுகிறாயா?” என்று வினவினாள் ஒலான்னா. தேநீர் மேசையில் அவள் வெட்டிய மெல்லிய துண்டு தவிர்த்து முழுதாக கேக் அமர்ந்திருந்தது.

“இப்போது வேண்டாம்” பனை மதுவைக் குடித்தவர் மீண்டும் ஒரு கோப்பை நிரப்பிக் கொண்டார். “மற்றொரு தாக்குதல் இருக்கும் பட்சத்தில் நாம் பதுங்குக் குழிகள் அமைத்துக் கொள்வோம்” வான்வழித் தாக்குதல்கள் தீங்கற்றவை என்பது போல, சில கணங்களுக்கு முன் அவர்கள் மிக நெருக்கத்தில் சந்திக்க நேர்ந்தது சாவு அல்ல என்பது போல அவரது குரல் இயல்பான தொனியில், அமைதியாக ஒலித்தது. உக்வு பக்கம் திரும்பினார்,”பதுங்குக் குழிகள் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா, நல்ல பையனே?’

“தெரியும் ஐயா, ஹிட்லரிடம் இருந்தது போல”

“ம்ம், ஆமாம், அப்படித்தான் இருக்கும்”

“ஆனால் பதுங்குக் குழிகள் எல்லாம் திரள் மயானம் என்று மக்கள் கூறுகிறார்கள் ஐயா” என்றான் உக்வு.

“சுத்த முட்டாள்தனம், கசாவாத் தோட்டத்தில் படுத்துக் கிடப்பதை விடப் பதுங்குக் குழிகள் பாதுகாப்பானவை”

வெளியே இருள் கவிந்து அவ்வப்போது வெட்டிய மின்னல் வானத்தை ஒளிர வைத்துக் கொண்டிருந்தது. நாற்காலியிலிருந்து சட்டென்று குதித்திறங்கிய ஒலான்னா “பாப்பா எங்கே, எங்கே குழந்தை?” என்று அலறிக் கொண்டே படுக்கையறையை நோக்கி ஓடினாள்.

“நெகேம்! அவள் பின்னே சென்றார் எஜமான்”

“உனக்குக் கேட்கவில்லையா? அவர்கள் மீண்டும் குண்டு பொழிவது உனக்குக் கேட்கவில்லையா?”

“அது இடியோசை” பின்னாலிருந்து அவளைப் பிடித்துத் தன்னுடன் இருத்திக் கொண்டார் எஜமானர். “அது இடியோசை மட்டுமே. நாம் பின்னால் வைத்திருந்த மழைத்தடுப்பான் பிய்த்துக் கொண்டது. அது இடியோசை மட்டும்தான்”.

அவளை நீண்ட நேரம் தன் பிடியில் வைத்திருந்தார். இறுதியில் அவள் அமர்ந்து தனக்காக மற்றுமொரு கேக் துண்டத்தை வெட்டினாள்.

4. புத்தகம்: நாங்கள் இறந்து கொண்டிருந்த போது உலகம் மௌனமாக இருந்தது.

சுதந்திரம் அடையும் வரை நைஜீரியாவுக்குப் பொருளாதாரமே இல்லையென்று அவர் வாதாடினார். காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட மாகாணமான அது பிரிட்டனுக்கு நன்மை பயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மென் சர்வாதிகாரம் கொண்ட அரசாக இருந்தது. சுதந்திரமடைந்த 1960 ஆம் வருடம் நம்மிடம் இருந்ததெல்லாம் அடிப்படை மூலப்பொருட்கள், மனிதர்கள், மிதமிஞ்சிய உற்சாகம், உலகப் போருக்குப் பின் தங்களது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆங்கிலேயர்கள் சுருட்டிச் சென்றதிலிருந்து எஞ்சியிருந்த சொற்ப விற்பனைத்துறைப் பணம் மற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் மட்டுமே. ஆனால் புதிய நைஜீரியத் தலைவர்கள் மிக நம்பிக்கையுடனும், மக்களின் நம்பகத்தன்மையை வெல்லக் கூடிய வளர்ச்சித் திட்டங்களில் பெரும் லட்சிய நோக்குடனும் இருந்தார்கள். சுரண்டல் செய்யும் வெளிநாட்டுக் கடன்களை அப்பாவித்தனமாக ஏற்றுக் கொள்வதிலும் ஆங்கிலேயக் கலாச்சாரத்தை நகலெடுப்பதிலும், நைஜீரியர்களுக்கு நெடுங்காலமாக மறுக்கப்பட்டிருந்த உயர்வு மனப்பான்மையையும் மேன்மையான மருத்துவமனைகளையும் சிறந்த சம்பளங்களையும் பெறுவதில் ஆர்வம் காட்டினர். புதிய நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சனைகளை அவர் கையாண்ட போதிலும் 1966 படுகொலைகளிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தினார். வெளிப்படையான காரணங்கள்- ஈக்போ கிளர்ச்சிக்குப் பழிவாங்குதல், வடக்கு மக்களின் குடிமைப் பணி வாய்ப்பை இழக்கச் செய்யும் ஒருங்கிணைந்த தீர்ப்பாணைக்கு எதிரான எதிர்ப்பு – ஆகியவை பொருட்படுத்தப்படவில்லை. மாறிக் கொண்டே இருக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை கூடத்தான்: மூன்றாயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம்..முக்கிய விஷயம் என்னவென்றால் அந்தப் படுகொலைகளால் அச்சமடைந்த ஈக்போ மக்கள் ஒன்று திரண்டார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தப் படுகொலைகள் முன்னாள் நைஜீரியர்களைத் தீவிரமான பியாஃப்ரன்களாக்கியது.


 

லதா அருணாச்சலம்
லதா அருணாச்சலம்

கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம் பதினான்கு வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வசித்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நைஜீரிய எழுத்தாளர் அபூபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimsons Blossoms என்னும் நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் (எழுத்து பிரசுரம்), டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் எழுதிய Problemski Hotel என்னும் நாவல் பிராப்ளம்ஸ்கி விடுதி (காலச்சுவடு பதிப்பகம்) என்னும் பெயரிலும் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ‘ஆக்டோபஸின் பேத்தி ‘(நூல்வனம் பதிப்பகம்), உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘ஆயிரத்தொரு கத்திகள் ‘என்னும் தொகுப்பும் வெளியாகி உள்ளன.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா எழுதிய Paradise என்னும் நாவலின் தமிழாக்கம் “சொர்க்கத்தின் பறவைகள்” இவரது மூன்றாவது மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் ஐந்தாவது மொழிபெயர்ப்புப் படைப்பு. நைஜீரிய எழுத்தாளர் சிமாமந்தா அடிச்சியின் Half of A Yellow Sun என்னும் புகழ் பெற்ற படைப்பானது இவரது மொழியாக்கத்தில் வெளிவரவிருக்கும் அடுத்த மொழிபெயர்ப்பு நூல்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top