ரகுபதிக்கு முதலில் பின்கள வீரனாக ஆகவேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. அவனுக்குத் தடுக்கிற விளையாட்டே அதிகமும் பிடித்திருந்தது அப்போது. ஆனால் எல்லோரும் வேறுமாதிரியாகச் சொன்னார்கள். “புல்பேக்கு பொஷிசன்ல நீ விளையாடுறதுக்கு உண்டான முகவெட்டு உண்ட்ட இல்லை. பால்குடிக்கிற பையனை மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு இருந்தா எவம் பயப்படுவான்? தூரத்தில இருந்து பார்க்கறப்பயே மெரட்டணும் உருவம்” என்றார் சார்லஸ் அண்ணன். அவர் இதுமாதிரி ஆட்களைக் கணித்துச் சொல்வதில் விற்பன்னர். இயற்கையாகவே மனிதர்களைக் கணிக்கும் பழக்கத்திற்குத் தன்னை ஆழமாக உட்படுத்திக் கொண்டிருப்பவர்.
அவரிடம், “அப்டீ சொல்லி என்னைப் பின்னாடி தள்ளீராதீங்க” என்றுதான் ரகுபதி சொல்ல நினைத்தான். ஆனால் அவரிடம் அப்படியெல்லாம் யாரும் துணிந்து பேசமாட்டார்கள் என்பதால், அமைதி காத்து விட்டான். அப்புறம்தான் அதை அப்போதே நேரடியாகச் சொல்லியே இருந்திருக்கலாமோ எனவும் தோன்றியது. ஏனெனில் அதற்கு அப்புறம் நாள்முழுதும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். ரசம் விழுந்த கண்ணாடி முன்நின்று தனது முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு கோபம், ரௌத்திரம், பலிவாங்குதல் என்றெல்லாம் சொல்லாமலேயே விதவிதமான முரட்டு உணர்வுகளைத் தனது முகத்தில் ஏந்தப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். பதற்றவுணர்வு அந்த நேரத்தில் அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது. இறுதியில் தானொரு பின்கள வீரன் அல்ல என்கிற உறுதியான முடிவிற்கு முகத்தைப் பார்த்துவிட்டே வந்து சேர்ந்தான் ரகுபதி.
எந்த இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்வது? என்கிற சிந்தனையில் அலைந்து கொண்டிருந்த போதுதான், வெளியூரில் இருந்து வந்த பயிற்சியாளர் வின்சண்ட் மைதானத்தில் செய்து காண்பித்த ஒரு விளையாட்டு அசைவைக் கிட்டத்தில் நின்று பார்த்தான். பந்தைத் தட்டியபடி கோல் கம்பத்திற்கு அருகில் மெதுவாக ஓடுகிறார் வின்சண்ட். எதிரே இருந்து வலதுபின்கள வீரன் அவரை நோக்கி ஓடிவருகிறான். அப்போது அவர் செய்ததை மிகக் கூர்மையாகக் கவனித்தான் ரகுபதி.
பந்தை மட்டையோடு தனது இடது மூலைக்குத் தள்ளி நகர்த்தினார். அப்போது அவரது இடது காலைப் பிளந்து வைத்திருந்தார். உடலுமே இடது பக்கம் நகர்ந்து விழுந்து இருந்தது. பின்களவீரன் அவனுக்கு வலது பக்கமாகச் சாய்ந்து அந்தப் பந்தை நோக்கி எக்கினான். அப்போது வின்சண்ட் சராலென இடதில் இருந்து பந்தை வலது பக்கம் நோக்கி இழுத்த போது, அவரது இடதுகால் நடுநாயகமாக ஊன்றி நின்றது. இரண்டு கால்களையும் அழுத்தமாக ஊன்றி நின்ற பிரமீடு ஒன்றின் மூக்கைப் போலவே இருந்தது அவரது உடல்கூர்மை. அப்போது கோல்கம்பம் தனியாகத் தெரிந்தது. வின்சென்டிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு நிலத்தில் விழுந்து கிடந்தான் பின்கள வீரன்.
பந்தைக் கம்பத்தை நோக்கி அடிக்காமல் அப்படியே விட்டுவிட்டு, மட்டையை ஓங்கி அவனது நடுமுதுகில் வைத்துக் காட்டி, “விலங்குககூட இப்பிடி முதுகை பப்பரப்பான்னு காட்டாதுல. முதுகுதான் எல்லாம்னு அதுகளுக்கே தெரியும். அது முறிஞ்சிருச்சுன்னா அவ்வளவுதான். நீ ராஜநாகமாகக்கூட இருக்கலாம். ஆனா முதுகில மட்டையால ஓங்கிப் போட்டா ஒடிஞ்சு விழுந்து புரண்டு கதறிக்கிட்டு கெடப்ப. அதனால இப்பிடி முதுகைக்காட்டி விழுந்து காட்டாத. முதுகெலும்பு போச்சுன்னா வாழ்க்கையும் போச்சு. இப்படி விளையாட்டில ஸ்பைனல் கார்டு போயி பலபேரு வாழ்க்கையையே தொலைச்சிருக்காங்க. ஏன் இந்தியன் டீம் ப்ளேயர்ஸ் பலபேருகூட இப்படி ஆகிருக்காங்க” என்றார் அவனிடம். அந்த நேரத்தில் ரகுபதி அவரது முதுகைப் பார்த்தான். எண் எட்டு எனப் பெரிதாக எழுதப்பட்ட ஜெர்ஸி அது.
அந்தக் கணத்தில் தான் எட்டாம் எண் இடத்தில்தான் விளையாட வேண்டும் என உறுதி செய்து கொண்டான். ரைட் இன்னர் என அழைப்பார்கள் அந்தத் தடத்தை. அதுவாகத்தான் தான் ஆகவேண்டும் என அந்த இடத்தில் நின்று சத்தியம் செய்தான் ரகுபதி. அந்த மைதானத்தில் அப்படியெல்லாம் எளிதாக தன்னுடைய இடத்தைத் தாங்களாகவே மாற்றிக் கொள்ள முடியாது. ஏகப்பட்ட முன் அனுமதிகள் பெற வேண்டும், ராணுவ சேவையில் இருப்பதைப் போலவே.
அப்படியான கடுமையான விதிகள் இருந்தால்தான் விளையாட்டு மந்தையையும் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க முடியும். இல்லாவிட்டால் மாடுகள் ஆளுக்கொரு திசையில் தெறித்துக் கொண்டு ஓடும். மொத்தத்தில் முன்னே நடக்கிற இடையனின் பின்னால் கேள்வி கேட்காமல் மந்தையாக ஓடும் செம்மறி ஆடுகளைப் போலத்தான் இருக்க வேண்டும். இது அங்கே அடிப்படையான பாலபாடம். அதை எப்படி விளையாட்டில் எந்தவிதச் சாதனைகளையுமே இதுவரை செய்தே இராத ரகுபதியால் மீற முடியும்?
அவன் தனக்குள்ளே ரகசியமாகத் துவண்டு கொண்டு இருந்ததால், மைதானத்தில் அவனுக்குப் பிடியே கிடைக்கவில்லை. யாரிடம் போய்க் கேட்பது என அறியாமல் நீரில் மிதக்கும் சருகைப் போல அல்லாடிக் கொண்டிருந்தான். அந்த மனநிலையில் அவனால் ஆழத்தினுள் ஒருபோதும் செல்ல முடியாது என்பதையும் உணர்ந்து இருந்தான். மூச்சுமுட்டின ஒருநாளில் சார்லஸ் முன்னால் போய் நின்று, “யார்ட்ட கேக்கன்னு தெரியலைண்ணே. எனக்கு எப்டீயாச்சும் ரைட் இன்னர் வாங்கித் தந்திருங்க” என்றான். அப்போது அவனது கால்கள் வெடவெடத்து ஆடின.
அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “எதுக்காக வெட்டுப்படற ஆட்டை மாதிரி கிடுகிடுன்னு காலை ஆட்டற. உன் பிரச்சினை என்னன்னு புரியுதா? இது சரியாகாம எங்க போயி நீ நின்னாலும் எதுவும் சரியாகாது. சரி போ நான் பொஷிஷனை மாத்தி விடச் சொல்றேன்” என்றார் சார்லஸ். மகிழ்ச்சி உணர்வு மெல்லமாகத்தான் காலாட்டத்தை நிறுத்தியது.
அதற்குப் பிறகு ரகுபதி எட்டாம் எண் தடத்தில் விளையாடத் துவங்கினான். பழைய இடத்து ஞாபகத்தில் புதிய தடத்தில் ஏராளமான தவறுகளைச் செய்தான். அது இன்னமும் அவனுக்குக் கைகூடி வராமல் இருந்தது. மைதானத்தில் சிலநேரங்களில் கேலிப் பொருளாகவுமே ஆனான். இடையில் ஒருநாள் சார்லஸ் அழைத்து, “பேசாம உன்னைப் பழைய பொஷிஷன்லயே ஆட வச்சிருந்து இருக்கலாம். உனக்கு கருணைப்பட்டு உன் வாழ்க்கையையே வீணாக்கிருவேன் போல. நீ அதுவும் இல்லாம இதுவும் இல்லாம ரெண்டும் கெட்டானா மாறிடுவ போல” என்றார் கூர்மையாக. ரெண்டும் கெட்டான் என்கிற வார்த்தைப் பந்து ரகுபதியின் இதயத்தில் வந்து வேகமாக மோதியது.
மைதானத்தில் ரகசியமாக ரெண்டும் கெட்டான் என்கிற பந்து ரகசியமாக உருண்டு ஓடிக் கொண்டிருப்பதையுமே ரகுபதி அறிந்தான். அந்த மைதானத்தை விட்டால் வேறு எங்கும் மீட்பே இல்லை என்கிற நிலையில், அவனும் எங்குதான் ஓடிப் போவது? அந்தச் சமயத்தில்தான் இன்னொரு பந்தும் அவனை வந்து வேகமாகத் தாக்கியது. தன்னுடைய மைதானத்தில்தான் இப்படி என நினைத்து இன்னொரு பக்கத்தினரின் மைதானத்திற்கு விளையாடப் போயிருந்தான் ரகுபதி. அங்கிருந்த நண்பனொருத்தன் அவனை விளையாட அழைத்திருந்தான்.
ரகுபதி போனபோது நண்பனைக் காணவில்லை. தனது விளையாட்டுக் கால்சட்டையைக் கழற்றி விட்டு, டவுசர் அணிந்த போது மறக்காமல், அதில் இருந்த நூறு ரூபாய்த் தாளை எடுத்துத் தன்னோடு செருகி வைத்தான். முந்தைய தினம் திருச்செந்தூர் போனபோது சித்தப்பா ஆசையாகத் தந்தது. பிறகு மட்டையை எடுத்துக் கொண்டு மற்றவர்கள் இருக்கும் பகுதிக்குப் போய், ஏற்கெனவே தெரிந்தவர்கள் என்பதால் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனை நோக்கி மூன்று பேர் நடந்துவந்தார்கள். அதில் சரவணன் என்கிற பெயரைக் கொண்ட வலதுபின்கள வீரன் ஒருத்தனை மட்டுமே ரகுபதிக்கு நன்றாகத் தெரியும். மற்ற இருவரும் ஹாக்கி வீரர்கள்தானா? என்பதில் அவனுக்குச் சந்தேகமும் இருந்தது. வந்து நின்று ரகுபதியை நோக்கி, “எங்க தெரு பொம்பளைப் பிள்ளைக்கு நீ லெட்டர் குடுத்தீயா” என்று மூவரும் ஒரே குரலில் கேட்டார்கள். லெட்டரா? அது என்ன? என ரகுபதி சிந்திக்கத் துவங்குவதற்கு முன்பே அவனது மட்டையைப் பிடுங்கி பின்புறத்தில், காலில், இடுப்பில் எனத் தொடர்ந்து அடிக்கத் துவங்கினர்.
பிறகு அவனைக் கீழே தள்ளி உதைத்தனர். எழச் செய்து பச்சைநிற விளையாட்டு டவுசரைக் கழற்ற வைத்தனர். ஓட்டைகள் விழுந்த ஜட்டியோடு நடுமைதானத்தில் நின்றான் ரகுபதி. ஒருத்தனுமே அவனுக்காக நீதிகேட்டு வரவில்லை. அவனது கண்களில் இருந்து அவனையறியாமல் நீரூற்று புறப்பட்டு வழிந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே இருந்த கோட்டைச் சுவரில் ஏறிக் குதிக்க முயன்ற ரத்னவேல் பாண்டியன் அண்ணனைப் பார்த்துவிட்டு மூவரும் தலைதெறிக்க ஓடினர். அவர் தன்னை நோக்கி வருவதற்கு முன்பு கீழே கிடந்த டவுசரை எடுத்து அணிந்து கொண்டான்.
அவர் வருவதால் மைதானத்தில் மற்ற பையன்கள் விளையாட்டில் கவனத்தைக் குவிக்கிற மாதிரி நடித்தனர். வந்து நின்ற அவர், “அவனுகளை நான் பார்த்துக்கறேன். சட்னி ஆக்கிடுவேன் அவனுகளை. ஆனா நீயும் ஸ்போர்ட்ஸ்மேன்தானே? பதிலுக்கு எகிறி அடிக்க வேண்டியதுதானே? நாய்கூட திருப்பிக் குரைக்குது. சொங்கிப் பயலாடா நீயி. இன்னைக்கு விளையாடல்லாம் வேண்டாம். வீட்டுக்குக் கிளம்பிப் போ. ஆனா நாளைக்குக் கண்டிப்பா நீ வரணும். நான் இருப்பேன் இங்க” என்றார். அப்பகுதியில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறிய பையன்களிடமுமே இதுமாதிரிப் புதிதாக உருவாகி வந்த வன்முறை குணம் குறித்து நன்றாக அறிந்து வைத்திருந்தார் ரத்னவேல். விளையாட்டினுள்ளும் அந்த வன்முறை நுழைந்து விட்டதை இயலாமையுடன் பார்த்தார் ரத்னவேல். தலையைக் குனிந்தபடி மைதானத்தை விட்டு வீட்டை நோக்கி நடந்தான் ரகுபதி. அந்தச் சம்பவம் தங்களது பக்கத்தில் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்கிற பதைபதைப்பும் அவனோடு சேர்ந்து நடந்தது.
வீட்டில் அப்பா முகத்தைக் கவனித்து விட்டு, “என்னாச்சு ஏன் டல்லா இருக்க?” என்றார். வயிறு வலிக்கிறது என்று சொல்லிவிட்டு இரவு சாப்பிடாமலேயே சீக்கிரம் படுத்துக் கொண்டான். அடித்த இடங்களில் வலி இருந்தது. கண்ணிப் போன காயம் வீட்டில் தெரிந்து விடக்கூடாது என்பதால் முழு உடையிலேயே தூங்கினான். அதற்கடுத்து அந்த மைதானத்துப் பக்கமே காலை நகர்த்தக் கூடாது எனத் தீர்மானித்தான் ரகுபதி.
மறுநாள் அவனுடைய மைதானத்தில் போய்நின்ற போது, “தேவையில்லாம நீ எதுக்கு அங்க போற? இந்த கிரவுண்ட் பத்தாதா உனக்கு. எவனாச்சும் செட்டு சேர்ந்துகிட்டு இதைப் பத்திப் பேசிக்கிட்டுத் திரிஞ்சா முதுகுத் தொலியை உரிச்சிடுவேன்” என்றார் பாண்டியன் மாஸ்டர். அவர் சொல்லி விட்டால், பிறகு வெளிப்படையாக யாரும் பேசவே மாட்டார்கள் என்பதால், அந்த நேரத்தில் ஆசுவாசம்தான் முதலில் வந்தது ரகுபதிக்கு. பிறகு பையன்களிடம் அவனே ரகசியமாக விசாரித்துப் பார்த்தான். “என்னம்மோ அடிபுடி சண்டையாமே? நீயும் அடிக்கப் பாஞ்சியாமே? அதான் பாண்டியன் மாஸ்டர் கோபமாயிட்டார்னு சொன்னாங்க” என்றான் ஒருத்தன்.
அப்பாடா என்றிருந்தது ரகுபதிக்கு. தான் ஓட்டை ஜட்டியோடு நின்ற கதை யாருக்கும் தெரியவில்லை என்பதில் திருப்தி கிட்டி விட்டது. அதைத் தானுமே மறந்து கடந்துவிடத்தான் நினைத்தான் ரகுபதி. ஆனால் காலிற்குள் நுழைந்து இருந்து பல நாட்கள் விளையாட விடாமல் செய்யும் உடைமுள்ளின் கூர் முனையைப் போல அந்தப் பந்து தாக்கின வலி ரகுபதிக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதனால் அவனுடைய ரெண்டும் கெட்டான் தன்மை பகிரங்கமாக வெளிபட்டுக் கொண்டே இருந்தது விளையாட்டில்.
அப்போதுதான் இன்னொரு வாய்ப்பு அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கனிந்து வந்தது. பதினோராம் வகுப்புப் படிக்கும் பையன்களுக்கான ராணுவத் தேர்வு முகாம் லட்சுமி மில் மைதானத்தில் நடந்தது. எம்.இ.ஜி பெங்களூர் ராணுவ அணிக்கு இளம் விளையாட்டு வீரர்களை எடுக்கும் முகாம். டர்பன் கட்டிக் கொண்டு இரண்டு பேர் தேர்வுக் குழுவினர் மத்தியில் நின்று இருந்தனர். ரகுபதியின் ஊரில் இருக்கிற முக்கிய விளையாட்டு அமைப்பினருமே திரண்டு நின்றிருந்தனர்.
போய்நின்ற ரகுபதியைத் தூரத்தில் இருந்து பார்த்த சார்லஸ் அருகில் வருமாறு அழைத்தார். “உங்கப்பா இப்ப எங்க இருப்பாருடா” என்றார். “கடையிலதான் இருப்பாருண்ணே” என்று தயக்கத்துடன் சொன்னான் ரகுபதி. என்ன நினைத்தாரோ வாவென அவனைத் தன்னோடு அழைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டு அப்பா கடைக்குப் போனார். எதற்காக இப்படிக் கசாப்பு ஆட்டைப் போல அழைத்துச் செல்கிறார்? என்கிற குழப்பம் ரகுபதிக்குள். போய் நின்ற அவர் அப்பாவிடம், “உங்க பய இந்த கிரவுண்டல ஒருநாளும் துலங்கி வர மாட்டான். சொன்னா கேளுங்க. ராணுவத்துக்கு அனுப்பி வச்சிருங்க. அங்க தட்டி சரி பண்ணிடுவாங்க. இதை விட்டா வேற வாய்ப்பு கிடைக்காது. இருபதாயிரம் ரூபாய் பக்கமா பணம் கேட்குறாங்க. தரலாம் தப்பில்லை. ஒரு ஆறுமாசம் தாக்குப் பிடிச்சிட்டான்னா மத்திய அரசு சம்பளம் இல்லையா? திருநெல்வேலி போனா மளிகைச் சாமான்கூட சல்லிசான பாதி விலைக்கு மிலிட்டரி கேன்டின்ல மாசாமாசம் தருவாங்க” என்றார்.
அப்பா என்ன சொல்வது என்பது தெரியாமல் தயக்கத்துடன் நின்றார். அவர் மனதில் தொகை குறித்த கணக்கு ஓடிக் கொண்டிருக்கும் என்பது ரகுபதிக்குப் புரிந்தது. விடாத சார்லஸ், “அண்ணாச்சி நான் சொல்றேன்ல. மதினிகிட்ட போயி நான் சொன்னேன்னே சொல்லுங்க. போங்க உங்களால ரெடி பண்ண முடியும். பையன் நல்லதுக்காகத்தானே சொல்றேன். அவனுக்குப் படிப்பும் வந்து தொலைய மாட்டேங்குது” என்றார் உறுதியான குரலில். சார்லஸின் குரலில் இருந்த திடத்தன்மையைப் பார்த்து விட்டு அப்பா தயக்கத்துடன் தலையை ஆட்டினார்.
அவனைத் திரும்ப அழைத்துக் கொண்டு போய் பயிற்சி முகாமில் விட்டார் சார்லஸ். பிறகு அங்கு நின்றிருந்த ஒருத்தரிடம் போய் எதுவோ சொன்னார். ரகுபதியையும் மைதானத்தில் இறக்கிப் பல்வேறு கட்டச் சோதனைகளை நடத்தினார்கள். விளையாடிக் காட்டுவது, ஓடுவது, குதித்து உச்சிச் சுவரைத் தொடுவது, கூடைப் பந்தை எடுத்துப் பின்னோக்கி உச்ச வேகத்தில் எறிவது எனப் பல்வேறு சோதனைகள் நடந்தன. அத்தனையிலும் சிறப்பாகச் செயல்பட்டான் என்று சொல்ல முடியாவிட்டாலும், மிக மோசமாகச் செயல்படவில்லை என்பது ரகுபதிக்கே தெரியும்.
இரவு வீட்டிற்குப் போகையில் சார்லஸ் அண்ணனும் கூடவே வந்தார். அம்மாவும் அப்பாவும் எதற்கும் தயாராக இருப்பதைப் போன்ற தோரணையில் நின்றார்கள். அப்பா கூடலிங்கம் ஜவுளிக் கடையில் தந்த மஞ்சள் பையில் பணத்தைப் பொதித்து வைத்து சார்லஸிடம் தந்து விட்டு, “பொம்பளைகளோட நகையை வித்துக் குடுக்கற காசு இது. நாளை பின்னே நம்மளைத் தூங்கக்கூட விடமாட்டாளுக. தாரை தாரையாக அழுதுட்டுத்தான் இதைக்கூடக் கழட்டி தந்துருக்காளுக” என்றார். சார்லஸ் அண்ணன் பெரியவரைப் போல அப்பாவின் தோளை இறுகப் பிடித்து ஆட்டினார். பிறகு கிளம்புவதற்கு முன்பு, “ரெண்டு நாள்ளயே கிளம்பற மாதிரி இருக்கும். அப்புறம் இன்னொரு விஷயம். நீ காசு குடுத்துத்தான் வேலைக்குச் சேர்ந்தங்கறது நம்ம ஐஞ்சுபேருக்கும் இன்னும் ஒரே ஒருத்தனுக்கு மட்டும்தான் தெரியும். நீயா வாயைக் குடுத்து மாட்டிக்காத” என்றார் ரகுபதியிடம். அம்மா, “நல்லா சொல்லுங்க. இந்த வாய்தான் அவனுக்கு எதிரி” என்றாள்.
அடுத்த இரண்டு நாட்களிலேயே பெட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பி பெங்களூரு போனான் ரகுபதி. ராணுவ அகாதெமி என்றால் என்ன? என்பதை அப்போதுதான் உண்மையில் நெஞ்சின் நெருக்கத்தின் உணர்ந்தான். அதன் ஒவ்வொரு சிறு அசைவிலும்கூட பிரமாண்டம் தெரிந்தது. அங்கே இருந்த மரத்து இலைகள்கூடக் கம்பீரமாகத்தான் காற்றில் ஆடியதைப் போலத் தெரிந்தது. நுணுக்கம் இல்லாவிட்டால் அங்கே ஒருநொடிகூடக் குப்பை கொட்ட முடியாது என்பதைக் கால்வைத்தவுடனேயே உணர்ந்து விட்டான் ரகுபதி.
அவன் மாறவில்லை அங்கே. அவனை அடித்து உதைத்துத் திருத்தி மாற்றினார்கள். அவனது நெஞ்சு விரிப்பின் அங்குலங்கள் பெருகிக் கொண்டே இருந்தன. அதற்குத் தகுந்தாற்போல நல்ல உணவு ஊட்டமும். தன்னுடைய உடலைச் சொதசொதவென்று இருக்கிற பண்டத்தைப் போலக் கொண்டு போய்க் கொடுத்தான். ஆனால் அவர்கள் அதில் உரமேற்றி அவனைக் கட்டையாக மாற்றிக் காட்டினர். முதற்கட்டப் பயிற்சிகளின் போது கண்ணீர் விட்டு அழுதான் ரகுபதி.
இரவு அம்மா அனுப்பிய கடிதத்தைப் படித்துப் பார்ப்பான். எல்லா கடிதத்திலும் மறக்காமல், “தங்கச்சி உன்னை நம்பிக் காதில கழுத்தில கெடக்கிறதைக் கழட்டித் தந்திருக்கா. சூதானமா அதை நீ திருப்பித் தந்திரணும். அதுதான் முறை” என்று எழுதி இருப்பாள் அம்மா. அவள் சொல்லச் சொல்ல தங்கைதான் எழுதி இருக்கிறாள் என்பதால், இருவருக்குமே அதில் உடன்பாடு என்பதைப் புரிந்து கொள்வான் ரகுபதி. தவிர வீட்டிற்குத் திரும்பிப் போகலாம், ஜட்டியோடு நின்ற மைதானத்திற்கு எப்படித் திரும்பிப் போவது? என்கிற வைராக்கியமே அவனை இழுத்துப் பிடித்து அங்கே இருத்தி வைத்தது.
அடுத்த ஒன்றரை வருடத்திற்கு, குடும்பத்தில் அசம்பாவிதச் செயல்கள் ஏதேனும் நடந்தாலொழிய, ஊருக்கு விடுமுறைக்குப் போகமுடியாது என்பதே போதுமானதாக இருந்தது ரகுபதிக்கு. தன்னை நடுமைதானத்தில் வைத்து உதைத்த அந்த ஊர்? தனக்காக நீதி கேட்காத அந்த ஊர்? எனத் தனக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வான்.
தனிப்பட்ட மூவரின் பகைதான் அது. ஆனால் எப்போது அது ஊராக மாறியது? எனத் தனக்குள் கேள்வியைக் கேட்டுக் கொள்ளவே இல்லை ரகுபதி. ராணுவ அமைப்பில் தரப்படும் அகமும் புறமுமான மிகையான அழுத்தத்தைக் கடக்க இந்த வைராக்கியம் ரகுபதிக்குத் தேவையும் பட்டது. மனம் தனக்குத் தோதாகத்தானே மட்டையைப் போல எதையும் வளைத்துக் கொள்ளும்? அதனால் ராணுவத்தில் படிப்படியாக அவன் தயாராவதற்கு வெறுப்பு என்கிற அடியுரம் நன்றாகவே பயன்பட்டது. சரவணன் என்கிற பெயரைக் கேட்டாலே காறித் துப்புவான் அப்போதெல்லாம்.
ரகுபதியின் அடியாழத்தில் அந்த அவமானம் மிகச்சிறிய மின்மினிப் பூச்சியின் ஒளியைப் போல எவரும் அறியாமல் கனன்று கொண்டிருந்தது. வெளியில் யாருக்கும் தெரியாதுதான். ஆனால் அவனுக்குத் தெரியும்தானே? அதை எப்படிக் கடக்க எனத் தெரியாமல் தனது ஆழுள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்தான் ரகுபதி. அவன் தனது பயிற்சிகளை எல்லாம் முடித்துச் சிப்பாயாக ஆன சமயத்தில் முதல்தடவையாகக் கொண்டாட்டத்தின் காரணமாக ரம் குடித்தான். அதற்கு முன் ரகுபதி குடித்ததே இல்லை.
அங்கே அதுவொரு சடங்கு என்பதற்காக வேறு வழியில்லாமல் குடித்து விட்டான். அருப்புக் கோட்டையைச் சேர்ந்த அண்ணன் ஒருத்தர் அவனுக்கு உயரதிகாரியாகவும் இருந்தார். குடித்து மதிமயங்கிய ரகுபதிக்குள் தனது பழைய அவமான உணர்வு எட்டிப் பார்த்தது. பத்திருபது பேர் மத்தியில் அழத் துவங்கினான். “என்னை அந்த ஊர்ல எப்டீ அசிங்கப்படுத்தினாங்க தெரியுமா? ஜட்டியோட எல்லாரும் பார்க்க நடு கிரவுண்டல நிக்க வச்சாங்க” என்று சொல்லி விட்டுத் தேம்பித் தேம்பி அழுதான்.
சட்டெனக் கையை ஓங்கி அவனது நெஞ்சைப் பிடித்துத் தள்ளிய அந்த அருப்புக்கோட்டைக்காரர், “ஏலே இங்க வந்திருக்க ஒவ்வொருத்தனும் இந்த மாதிரி கோடி அவமானங்களைத் தாங்கிட்டுதான் கெடக்கான். ஒண்ணு மன்னிச்சு விட்டு அந்த அவமானத்தைக் கடந்திரு. இல்லாட்டி அதுக்கு தகுந்த பதிலடிய கொடுத்திரு. ரெண்டும் கெட்டான் மாதிரி உக்காந்து அழுதுகிட்டு கெடக்காத. ராணுவ வீரன் அழுதா அசிங்கமா இருக்கும்” என்றார். அவர் சொன்னதைக் கூர்ந்து கேட்ட ரகுபதி, தனது கண்களை அவசரமாகத் துடைத்து விட்டுப் பின் நெஞ்சை உயர்த்தி அவருக்கு சல்யூட் அடித்தான். சிரித்துக் கொண்டே ஓசை வராமல் கைதட்டினார் அருப்புக்கோட்டைக்காரர்.
அதுமுதல் ரகுபதியின் ஆர்வமெல்லாம் ஊருக்குத் திரும்பிப் போவதிலேயே இருந்தது. இடையில் ஏழு நாள் மட்டும் விடுமுறை கொடுத்தார்கள். அதில் இரண்டு நாட்கள் ரயிலுக்கே போயிற்று. மீதி இருக்கிற நாட்களில் அம்மா முறைவைத்து காணிக்கை செலுத்த பல கோவில்களுக்கு அழைத்துப் போனாள். அது மழைக்காலம் என்பதால் மைதானத்திற்குப் போய் விளையாட முடியாத நிலையும் இருந்தது. சார்லஸ் அண்ணனுக்கு ஓல்டுமங் ரம் பாட்டில் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.
அவரிடம் அதைக் காகிதத்தில் வைத்துச் சுருட்டிக் கொடுத்த போது, “நீ குடிச்சு பழகிட்டியாலே?” என்றார். “இல்லைண்ணே அப்பிடி செய்யக் கூடாதுன்னு அங்கயும் சொல்ல ஆட்கள் இருக்காங்கண்ணே” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு சார்லஸ், “அங்கேயும் ஆட்கள். பரவாயில்லை. நல்லா பேசவும் கத்துக்கிட்ட. ரெண்டும் கெட்டானா இருந்த. இப்ப தேக்குக் கட்டை மாதிரி மாத்திக் குடுத்திட்டாங்கள்ள. அதுக்குத்தான் உன்னை அனுப்பிச்சேன். நல்லா இரு” என்று சொல்லி விட்டு உள்ளே போனார்.
ரகுபதி நடந்து போய்க் கொண்டு இருந்தபோது, டேய் என அவனை அழைத்தார். அருகில் போய்நின்ற போது அவனது புஜத்தை உறுதியாக இறுக்கிப் பிடித்து, “உரம் பாஞ்ச கட்டையா மாறிட்டோம்ணு ஊர்ல இருக்க சின்னச் சின்ன கிளைகளை உடைச்சிக்கிட்டு திரியக்கூடாது. புரிஞ்சதா? கிரவுண்டல மட்டும்தான் நல்ல வீரன் வீரத்தைக் காட்டணும். நான் ராணுவ அதிகாரி சுட்டா கேஸூ கிடையாதுன்னு சொல்லிட்டு சும்மா போற ஜீவனுகளைச் சுட்டுக்கிட்டு இருக்கக் கூடாது. அது உன் பொறுப்பு” என்றார். அவர் அதைச் சொன்ன தோரணையின் அச்சொற்களின் மதிப்பு நன்றாகத் தெரிந்தது.
அந்தமுறை மிகப் பெரும்பாலானவர்களைப் பார்க்காமலே பெங்களூருவுக்குக் கிளம்பிப் போனான் ரகுபதி. ஆனாலும் அவனைப் பற்றிய பேச்சு ஊரில் இன்னமும் அடங்கவில்லை. “ஆளு பீமராஜா கணக்கா வந்து நிக்கான். ஓங்குதாங்கா பார்த்தாலே மிரட்சியா இருக்கு. கண்டிப்பா அவனோட கேமையுமே நல்லா இம்ப்ரூவ் பண்ணிருப்பாங்க. ஆளைப் பார்த்தாலே பவுசு தெரியுதே” எனப் பேசிக் கொண்டனர். ரகுபதி ஆச்சரியகரமான ஒரு ஆளாக அந்த ஊருக்குள் பதியத் துவங்கினான். கூடவே அவனது வீட்டில் தென்பட்ட சின்ன பவுசையுமே மக்கள் ஆர்வமாகப் பார்த்தார்கள். ரகுபதியின் அம்மா சடங்கு வீட்டிற்கு வந்தால்கூட இருபத்தியோரு ரூபாய் மொய் செய்யத் துவங்கினாள். ரகுபதியின் வளர்ச்சியை ஊரே பார்த்துப் புரிந்து கொண்டது.
அந்த வருடத்திற்கான கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டிகளுக்கான அறிவிப்பு வந்தது. தன்னுடைய அணி நிச்சயமாக அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும். ஆனால் அதில் தானிருப்பேனா என்கிற சந்தேகம் ரகுபதிக்கு வந்தது. மூத்த வீரர் ஒருத்தர், “அவங்கவங்க சொந்த ஊர்ல விளையாட விட்டிருவாங்க. அதுல எல்லாம் சைகோத்தனம் பண்ண மாட்டாங்க. நீயும் யார்ட்டயும் வம்பு வளர்க்கிற ஆளும் இல்லைதானே? ஆனா சொந்த ஊர்ல சுய ஒழுக்கம் எப்படிச் செயல்படுதுங்கறதைக் கவனமா பார்ப்பாங்க” என்றார். அதையுமே கவனத்தில் எடுத்துக் கொண்டான் ரகுபதி.
அவர் சொன்ன மாதிரியே ஆடும் பதினொன்றில் ரகுபதிக்கு இடம் கிடைத்து விட்டது. புதிய ஜெர்ஸிகளைக் கொண்டு வந்து எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். உடனடியாக ஓடிப் போய் நீண்ட கழிவறையின் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த பரந்துவிரிந்த நிலைக்கண்ணாடிக்கு முன்நின்று அதை அணிந்து திரும்பி நின்று முதுகைப் பார்த்தான். “8” என்கிற மிகப் பெரிய எண்ணிற்கு மேலே ரகுபதி என்கிற பெயர் ஆங்கிலத்தில். எல்லோருக்கும் தெரிவிக்கும்படியான பெயர் பொறிக்கப்பட்ட முதுகு. இதற்குத்தானே காத்திருந்தேன்? எனப் பறவையைப் போலவே அந்த ராணுவ முகாமைச் சுற்றி அலைந்தான் ரகுபதி. நினைவுகளை மீட்டிப் பார்த்தபடி அந்த நாளுக்காகக் காத்திருக்கத் துவங்கினான்.
போட்டிக்குப் போயிருப்பதால், வீட்டிற்குப் போக அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டனர். அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஒரு சில்வர் வாளியில் கோழிக் குழம்பு செய்து வந்து வீரர்கள் எல்லோருக்கும் தந்தார்கள். எல்லோருமே அவனது பெற்றோரிடம் மிக மரியாதையாக நடந்து கொண்டனர். சிலர் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கக்கூடச் செய்தனர். இதையெல்லாம் கண்ட ரகுபதிக்குப் புல்லரித்து அடங்கியது. இந்த மரியாதையை விட்டுவிடக் கூடாது என்றுமே தோன்றியது. போகையில், “வயசுப் புள்ளைய பொது இடத்துக்குக் கூப்டு வரக்கூடாதுங்கறதுக்காகக் கூப்டு வரலை. நீ போறதுக்குள்ள ஒரு எட்டு வந்து தங்கச்சியைப் பார்த்துட்டுப் போயிரு. உங்க ஆபிசரு சார்ட்ட உபகாரமா கேட்டுருக்கேன். சரின்னுருக்கார். சொந்த ஊர்ங்கற மெதப்பில எந்தத் தப்புத் தண்டாவிலயும் எறங்கிடாத” என்றார் அப்பா. மௌனமாகத் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டான் ரகுபதி.
தன்னுடைய களங்கத்தை அந்த ஊர் பார்க்க விளையாடித் துடைத்து விட வேண்டும் என உறுதி பூண்டான் ரகுபதி. அதிக கோல் அடித்தவர்கள் என்கிற பட்டியலில் தன்னுடைய பெயரைப் பொறித்துவிட வேண்டுமென்கிற உறுதியை எட்டினான். அப்படித்தான் அவனுடைய செய்கைகளும் மைதானத்தில் இருந்தன. முதலிரண்டு போட்டிகளிலேயே மூன்று அட்டகாசமான கோல்களைப் போட்டான். போட்டி முடிந்து வெளியே வந்த போது, அவனது எட்டாம் வகுப்பு உடற்கல்வி ஆசிரியர், “நல்லா இம்ரூவ் பண்ணிருக்கேடே. அணைய விடாம வச்சுக்கோ இந்த நெருப்பை” என்றார். அவனுக்குள் உடனடியாகவே பெருமிதம் பொங்கி அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
அடுத்து அவர்கள் கோவில்பட்டி அணியினருடன் விளையாட வேண்டி இருந்தது. அதுவரை வெளியூர், வெளிமாநில அணியுடன்தான் விளையாடி இருந்தான் ரகுபதி. தன்னுடைய அணியுடன் என்ற உடனேயே ஒருவிதமான புதுவுணர்வு அவனுக்குள் வந்து விட்டது. நிச்சயம் பதற்றமில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனிருக்கிற மனநிலைக்கு யார் எதிரே வந்தாலும் ஊதி விடுவேன் என்றுதான் இருந்தது. தெருவில் நிற்கிற விளக்குக் கம்பத்தைக்கூடக் கையாலேயே வளைத்து விடுவேன் என்கிற யானை பலமும் மனதிற்குள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறிய ஒன்று அதுவெனக் கண்டுகொண்டான் ரகுபதி.
போட்டிக்கு இரண்டு அணி வீரர்களும் மைதானத்திற்குள் அணிவகுத்து நடந்து வந்துகொண்டிருந்த போதுதான் அதைப் பார்த்தான் ரகுபதி. கோவில்பட்டி அணியின் பின்கள வீரனாக வந்து நின்றான் சரவணன். அதே சரவணன். அதே ஜட்டி. அதே அவமானம். கேலரியில் சுற்றி நின்று பார்த்த ஊர். தனது தலைக்குள் ரத்தம் குற்றாலத்தின் பொங்குமா அருவியைப் போலப் பெருகுவதை உணர்ந்தான்.
விசிலூதி ஆட்டம் துவங்கப்பட்டது. அக்கணத்தில் இருந்து ரத்தம் சூடேறி அதற்காகக் காத்துக் கொண்டு இருந்தான் ரகுபதி. அதை நோக்கிப் பலவாறு நகன்று முயன்றான். தன்னுடைய பலம், மூளை, அறிதல், தான் கற்ற வித்தைகள் அத்தனையையும் அதை நோக்கியே செலுத்தினான். இறுதியில் அது அவனை வந்தடையவும் செய்தது.
பந்தைக் கடத்திக் கொண்டு கோல் கம்பத்திற்கு முன்னே இருக்கிற சுண்ணாம்பு வளைவுக் கோட்டை நோக்கி ஓடுகிறான் ரகுபதி. அப்போது, “எட்டாம் நம்பரைக் கடகடன்னு எழுதற மாதிரி சுழட்டிச் சுழிச்சிக்கிட்டு நாம போறது எந்த திசையின்னு கணிக்க விடக்கூடாது அவனை” என என்றோ பயிற்சியாளர் சொன்னது நினைவில் மின்னுகிறது.
பந்தோடு ஓடிவரும் ரகுபதியை நோக்கி வலது பின்கள வீரனான சரவணன் ஓடிவருகிறான். தனது இடதுகாலை விரித்து இடது மூலைக்குப் பந்தைத் தள்ளுகையில் சரவணன் அவனுக்கு இடப்பக்கமாக விழுந்தான். அப்போது சராலெனப் பந்தை வலது முனைக்குத் தள்ளிய போது முழு வெளிச்சமும் விழுந்ததைப் போல, தூரத்தில் கோல் கம்பமும் கீழே விழுந்து கிடந்த சரவணனின் முதுகும் நன்றாகத் துருத்தித் தெரிந்தது.
ஒட்டுமொத்த உயிர்ப் பலத்தையும் திரட்டி மட்டையை ஓங்கினான் ரகுபதி.
Art : Walter Fahmy
சரவணன் சந்திரன் மதுரை காக்கா தோப்பில் பிறந்து, குடும்பத் தொழில் நிமித்தமாக கோவில்பட்டிக்குக் குடிபெயர்ந்தவர். ஆறாம்திணை இணைய இதழில் பணியாற்றிதன் மூலம் இதழியல் துறைக்கு வந்தவர். உலகத்தமிழ்.காம், காலச்சுவடு, இந்தியா டுடே போன்ற இதழ்களிலும் விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணியாற்றினார்.
ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச் போன்ற நாவல்களும், ஜிலேபி, மறிக்குட்டி போன்ற சிறுகதை நூல்களையும், மதிகெட்டான் சோலை, கடலும் மகனும் போன்ற கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.








Leave a Reply